இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 3

1

அவ்வை மகள்

சமூகப் பிரக்ஞையும் சுயப் பிரக்ஞையும்

இறையியல் சிந்தனைகள்

அவதாரப் புருஷர்களிடம் சமூகப் பிரக்ஞை நிறைந்த இறைவழி மார்க்க நோக்கு இருந்தது என்றோம்.

இதை நாம் அறியும் இத்தருணம், சமூகம் என்றால் என்ன என்ற கேள்வி நம்முள் முதலில் எழுகின்றது. சமூகம் என்பதை ஒழுங்கமைப்புடைய மக்கள் தொகுதி என்பர். கூட்டுப் பண்பும், ஒருமித்த குணாதிசயங்களும், பொதுப்படையான பழக்கவழக்கங்களும், ஒன்றேயான அடையாளங்களும், ஒத்ததான பரஸ்பர பரிபாஷைகளும் கொண்ட ஒரு குழுமித்த மனிதசார் அமைப்பை சமூகம் என்கிறோம்.

அவதாரப் புருஷர்கள் இப்படிப்பட்ட ஒரு சமூகத்திலிருக்கிற சாதாரண – ஒரு பெண்ணின் வயிற்றிலே தான் உருவாகிறார்கள். அந்த சமுதாயத்தின் அடையாளங்களோடு அந்த சமூகத்தின் சாயலாகத்தான் பிறப்பெடுக்கிறார்கள். அவர்களுக்குப் பெயர், விலாசம் எல்லாம் உண்டு. எங்கு எந்தப் பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்றார்கள என்பதும் கூட எவருக்கும் தெரியும்.

ஆனால் திடீரென ஒரு நாள் அவர்கள் வேறானவர்கள் வித்தியாசமானவர்கள் என்று புலப்படலாகிறது. இது எப்போது நடக்கிறது எவ்வாறு நடக்கிறது என்பதிலே சில வித்தியாசங்கள் இருந்தாலும், மிகப்பெரும்பாலும் இளம்பிராயத்திலேயே அவதாரப் புருஷர்களின் தீட்சண்யம் சிறு கீற்றாகவேனும் வெளிப்பட்டிருக்கும். அந்த வெளிப்பாடு பெரும்பாலும் அத்தருணத்தில் பிறருக்கு பெரிதாய்ப் படாது, அல்லது விகற்பமாய் படும். ஆனால், பின்னாளில், அவதாரப் புருஷர்கள் தம் பூரண ஆற்றலை வெளிப்படுத்துகிற போதோ அல்லது அதற்குப் பிறகோ அவர்களின் அந்த தீட்சணியமான இளம்பிராய நினைவலைகள் எவருக்கோ தோன்றி அவை நினைவுகூறப்படும் – அது வேறு எவராலோ பதிவு செய்யப்பட்டு வரலாறாகும்.

இதை நான் இங்கு குறிப்பிடுவதன் காரணம் இறைபால் நாட்டம் என்பது ஒரு துளியேனும் உடன்பிறப்பாய் உள்ளினுள்ளே இயைந்த ஒரு கூறாக இருக்குமாறு தான் அவதாரப் புருஷர்கள் படைத்தனுப்பப்படுகிறார்கள் என்பதால் தான். அதுமட்டுமல்ல, உண்மையில், அவதாரப் புருஷர்களின் இறைநிலைக் கூறு எனும் கரு எங்கு பிறக்கிறது எவ்வாறு பிறக்கிறது என்று பார்த்தால் அது மிகச் சர்வசாதாரணமான அன்றாட நடவடிக்கைகளில் தான்.

இங்கு ஜான் ஹென்றி நியுமனின் வாழ்க்கைக் குறிப்புகளைக் காண்பது நன்று. நியூமன்(1801-1890) இங்கிலாந்தின் மத வரலாற்றில், கத்தோலிக்க மத வளர்ச்சியில் மிகக் குறிப்படத் தக்க அவதாரப் புருஷர். சிறுவயதில், ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த போது அண்ணாந்து பார்த்தவாக்கில் ஒரு ஒற்றை மேகத்திட்டும் அதிலிருந்து புறப்பட்டிருந்த கிளைகளும், அவருக்குக் கடவுளின் ஆசிர்வாதமாய்ப் பட்டிருக்கிறது. இன்னொரு சமயம், சிறுவனாய் இருந்தபோது, காலையில், உறக்கத்திலிருந்து கண்விழிக்கும் நேரம் எங்கோ வயலில் கதிரறுக்கும் அரிவாளின் நாதம் இறைமொழியாய் அவருக்கு ஒலித்திருக்கிறது. நியூமன் காட்டுவது இறை என்பது மிக எளிமையான விஷயம் என்பதே. இதுபோன்று, இறை என்கிற ஒன்று இருக்கிறது எனும் உணர்வை அவதாரப்புருஷர்கள் உணர்ந்த விதத்தை – எல்லா மதங்களிலும் மகாமனுஷ்யர்களின் வாழ்வில் நாம் கண்ணுற முடிகிறது. இயேசுநாதர், நபிகள் நாயகம், சங்கரர், ரமணர், பட்டினத்தார், வள்ளலார், நாயன்மார்கள், ஆழ்வார்கள் என நாம் பலபேரை இவ்வாறு உதாரணம் காட்டமுடியும். இறைவனை மனிதனாகவும், இயற்கையாகவும், ஒளியாகவும் பார்க்கின்ற எளிய சாமான்யத்தை இவர்கள் உணர்த்திப் போயிருக்கிறார்கள்.

இறை எனும் உணர்வு முதன்முதலில், இவ்வாறு எளிமையாய் அவர்களுக்குப் புலப்பட்டதெனில், பின்னாளில் அவர்கள் தங்களுக்கு உள்ளே செரிந்திருக்கிற இறை அருள் நிலையை வெகு வெளிப்படையாய் பிறருக்கு உணர்த்துவதும் கூட சர்வசாதாரணமான அன்றாட நடவடிக்கைகளில் தான். நீரைப் பெருக்கியும் உணவைப் பெருக்கியும், தீயை அடக்கியும், வெள்ளத்தை அடக்கியும், நோயைத் தணித்தும், சராசரி மனித நிகழ்வுகளில் தன் சமூகத்தில் உள்ள மக்களுக்கு நேரடி நிவாரணம் அளித்திருக்கிற மிக எளிமையான நிகழ்வுகளை எல்லா மதங்களிலும் எல்லா சமயங்களிலும் உள்ள மகாமனுஷ்யர்களிடமும் காண்கிறோம்.

இறை தேடல். இறை பணி, இறை ஒழுக்கம் என எவ்வாறு கூறினாலும், இறைமை, மதம், சமயம் எனப் பிறவாறு கூறினாலும், மக்கட் சேவையே மகேசன் சேவை என்பதை எல்லா அவதாரப் புருஷர்களும் உறுதியாய்க் காட்டிச் சென்றிருக்கிறார்கள். சங்கரர் காலம் தொடங்கி, இந்த நேரடி மானுட சேவை எனும் இறையியல் சிந்தனை, காலப்போக்கில் சற்றே முன்னேற்ற மாற்றம் கண்டது எனலாம். மடாலயங்கள் மனித சேவைக்கே என்கிற வகையில் அவற்றின் கதவுகள் திறக்கப்பட்டன. மதம் என்பதை “உறுத்தும்படியாய்” முன்னிறுத்தாமல் மனிதவளத்தைத் தரத்தில் உயர்த்தும்படியான நோக்கு வளர்ந்தது. இவ்வகையில், “அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்” என்கிற திரு வாசகத்தின் சாட்சியாய் சமரச சன்மார்க்கம் எனும் உருவற்ற ஒளியாம் இறைவனை முந்துறுத்தி பொதுமைப் போக்கில் மதமெனும் மார்க்கத்தை உண்டாக்கிய பெருமை வள்ளலாரைச் சேரும். அவருக்கடுத்து ரமணரும், கூட இந்தப் பொதுமை மதநோக்கை ஆதரித்தார் எனலாம். நம்முடன் வாழ்ந்து போந்திருக்கிற தவத்திரு குன்றக்குடி அடிகளார் மதமும் அறிவியலும் ஒன்றே எனக்கொண்டு மக்கட் சேவையையும் மகேசன் சேவையையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் என்பதே போல் இறையியலையும் அறிவியலையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகப் பார்த்தவர். இறை-அறிவியல் எனும் நவீன மார்க்கம் அவருடையது எனலாம்- இதன் ஆரம்பப் புள்ளி வள்ளலாரிடமே என்பதை நம்மால் காணமுடிகிறது. குன்றக்குடி அடிகளார் விவேகானந்தரின் பாணியில் வள்ளலாரைத் தழுவியதாகவும் கூட சிலர் கூறுவார்.

Phenomenology எனப்படும் நிகழ்வியல், மருத்துவம், ஆன்மீகம், உளவியல், ஆகிய மூன்று துறைகளுக்குமே உரித்தான ஒரு முக்கியமான தத்துவப் பிரிவாகும். இப்பிரிவை வரையறை செய்கிறபோது இவ்வாறு சொல்லுவார்கள்: நிகழ்வியல் என்பது பிரக்ஞையின் வடிவத்தை ஒரு அனுபவமாக, பிரக்ஞை கொண்டவரே தன் வாய்வழி முதற் கூற்றாகக் கூறுவது (Phenomenology is the study of structures of consciousness as experienced from the first-person point of view) என்று. நிகழ்வியலில் எட்மண்ட் ஹசர்ல் மிக முக்கியமானவர். இவரை நிகழ்வியலின் தந்தை என்பார்கள். இவர் வாழ்ந்த காலம் 1859-1938. வாழ்வுலகம் (life-world) எனும் சித்தாந்தத்தை உருவாக்கியவர் இவர். “விண்டவர் கண்டிலர் கண்டவர் விண்டிலர்” என்கிற நம் செந்தமிழ் வாசகத்தை ஒரு தத்துவமாக்கிப் போயிருக்கிற பெருமை இவரைச் சாரும். ஹசர்ல் என்ன கூறுகிறார் என்றால் – பலபகுதிகளை இணைத்து ஒன்றை உருவாக்கினீர்கள் என்றால் அந்த முழுது (whole) பகுதிகளின் கூட்டல் அல்ல அதைவிட மிகுதியானது என்பதே. வாழ்வுலகம் என்பது நிகழ்வுகளின் அடுக்கு. வாழ்வுலகம் என்பது வாழ்வல்ல உலகமும் அல்ல. இரண்டின் கூட்டலும் அல்ல – என்கிறார் ஹசர்ல். இதை ஏதோ நகைச்சுவைத் துணுக்காகப் பார்க்காமல் – எள்ளி நகையாடாமல் கொஞ்சம் நிதானித்துப் பார்ப்பது நல்லது. ஹசர்ல் சொல்வதைக் கூர்ந்து கவனியுங்கள்: “நிகழ்வு என்பது பொருட்களும் அனுபவங்களும் சேர்ந்தது – நிகழ்வைப் பொருளாகப் பார்த்தால் அனுபவம் மறையும் – அனுபவமாகப் பார்த்தால் பொருள் மறையும். “

பொருள்-அனுபவம் என்கிற இரண்டையும் வெறுமனே கூட்டாமல் ஒருமித்துக் காண்போமேயானால் நாம் காணக்கூடியது பொருள் அல்ல – அனுபவும் அல்ல – பரம்பொருள் எனும் இறைமை விழுது. நிகழ்வுகளை, தனிமனிதர்கள் தமது பார்வையிலே எவ்வாறு காண்கிறார்கள் என்பது தான் அவர்களது வாழ்வுலகு. எவர் பொருளைப் பார்க்கிறார், எவர் அனுபவத்தைப் பார்க்கிறார், எவர் இறை விழுதைப் பார்க்கிறார் என்பதிலே தான் தனிமனிதர்களின் தராதரம் அடங்கியிருக்கிறது.

இந்தத் தனி மனிதர்களில், இறைதேடல் கூறுடன் பிறப்பிக்கப்பட்டிருப்பவர்கள், தன்னைச் சுற்றிலும் நிகழும் நிகழ்வுகளை, பொருள்-அனுபவம் என்ற இருகூறுகளாய்ப் பிரித்து பின்னப்படுத்தாமல் இரண்டையும் ஒருமித்து ஒர கோணத்தில், ஒரே அலைவரிசையில், ஒரே க்ஷணத்தில் காண்கிறார்கள். எனவே காணும் யாவிலும் பரம்பொருள் எனும் இறைவிழுதை அவர்கள் காண்கிறார்கள். எனவே அவர்களது வாழ்வுலகு, விஸ்தாரமாய் முளை விடுகிறது. தான் வெறும் ஆசாமியாக இல்லாமல் வேறு ஏதோ கடமை ஆற்றுமாறு ஜனித்திருப்பது புலப்படுகிறது. அந்த விவேகம் புலப்பட்ட அந்நொடி, “நான் யார்?” எனும் முதல் ஆன்ம விசாரத்தில் அவர்கள் இறங்குகிறார்கள். இந்த சுயப் பிரக்ஞை தான் அவர்களைச் சமுதாயம் எனும் தோப்பைச் செழுமைப் படுத்தும் சமூகப் பிரக்ஞைக்கு இட்டுச் செல்கிறது.

இவ்வகையில் ஸ்டீவ் ஜாப்ஸின் நான் யார்?” எனும் முதல் ஆன்ம விசாரம் நம்மை நெகிழவும் சிந்திக்கவும் வைக்கும் ஒரு மிகப்பெரிய நிகழ்வு.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *