க. பாலசுப்பிரமணியன்

 

கற்சிலையே நீயென்றார்   கண்ணாயென் காதலனே !

கையிரண்டில் உனையணைத்துக்  காலமெல்லாம் வாழ்வேனே !

கனவெல்லாம் நீயிருக்க கண்ணிரண்டும் நீர்வடிக்க

காசினியில் உன்னையன்றி வேறொன்றும் அறியேனே !

 

கருவண்ணம் நீயென்று யார் சொன்னது ?

கருவிழியால் பார்த்ததாலே அது வந்தது !

கருநாகம் வால்பிடித்துக்  கண்ணா! நீயாட

கண்களெல்லாம் கைகோர்த்து முன் நின்றது !

 

முன்னிரவும் பின்னிரவும் மனமெல்லாம் உனைத்தேட

கண்ணருந்தும் விருந்தாக கருவிழியில் நின்றாய் !

விண்மறந்து  மண்மறந்து உனை நினைத்ததும்

வண்ணமெல்லாம் உனதென்றே கார்மேகம் சொன்னது !

 

கருஞ்சடையில் பீலிசூடி குழலூதி நின்றாய் !

கண்ணா ! காலமெல்லாம் உன்பின்னே நின்றது !

கோவினங்கள் கூட்டத்திலே நீ மறைந்தாய்

கோபியர்கள் ஆட்டத்திலே என்னை மறந்தாய் !

 

கோட்டையினைத் துறந்து கூடிடவே வந்தேன்

பாட்டையிலே உன் குழலில் என்னை மறந்தேன் !

சாட்டையடி வாழ்க்கையிலே சமரசங்கள் இல்லை

சாரதியே !  காதலிலே கலியுகத்தைத் துறந்தேன் !

 

கொடியவிடத்தைக் குடித்த பின்னும் மரணமில்லை !

கருநாகம் தீண்டிடவும்  கடுகளவும் பயமில்லை !

கோகுலனே! துணையிருப்பாய்!கோமகனே! காத்திருப்பாய் !

கோதையுடன் ஆடுகையில் கொஞ்சமெனை நீநினைப்பாய் !

 

தஞ்சமென்று வந்தோரை வஞ்சமின்றி ஏற்ப்பவனே !

மஞ்சமென்று வந்தேன் நெஞ்சமுனது நாடி !

கொஞ்சிவிட ஆசையில்லை கோதையவள் மாற்றி

எஞ்சிவிட்ட வாழ்வினையே வாழ்ந்திடுவேன் தாள்போற்றி !

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *