மலர்சபா

 

மதுரைக் காண்டம் 10. வழக்குரை காதை

 

மன்னன் உண்மையை உரைத்து உயிர் துறத்தல்

662c3773-c25e-4821-be98-cef2b724115c

தெறித்த மாணிக்கங்கள் கண்டு
மருண்டான் மன்னன்.
“என் குடை தாழ்ந்ததே!
என் செங்கொல் வீழ்ந்ததே!
பொன் செய்யும் கொல்லன்
பேச்சை ஆராய்ந்து பார்க்காமல்
அதை உண்மை என எடுத்துக்கொண்ட
நான் தானா அரசன்?
இல்லை நானே கள்வன்!

மக்களைப் பாதுகாத்து நிற்க வேண்டிய
எம் பாண்டி நாட்டு ஆட்சி
என்னை முதலாகக் கொண்டு
தவறு இழைத்து விட்டது.
என் வாழ்நாள் அழிந்து போவதாக”
என்று கூறி மடிந்து வீழ்ந்தான்.
உயிரது துறந்தான்.

கோப்பெருந்தேவியும் உடன் மாய்தல்

மன்னனின் மனைவி கோப்பெருந்தேவி
உள்ளம் மயங்கினாள்.
உடல் நடுக்கமுற்றாள்.
தாய் தந்தை இழந்தவர்க்கு
எவரையேனும் அவரென
முறை காட்டி ஆறுதல் கூற இயலும்..
கணவனை இழந்தவர்க்கு
எந்த முறையும் காட்டி
ஆறுதல் கூற இயலாதே!
எனவே பாண்டிமாதேவி
கணவனின் திருவடிகள்
தொழுது வணங்கினாள்.
தானும் உயிர் நீத்தாள்.

வெண்பா

கண்ணகி கூறினாள்:

“பாவச்செயல்கள் புரிந்தவர்க்கு
அறமே எமனாய் நின்று
தண்டனை வழங்கும் என்று
அறிஞர்கள் கூறுவது
அர்த்தமில்லாத ஒன்றல்ல;
கொடிய வினை உடையவனாகிய
நான் இழைக்கும் மற்ற செயல்களையும்
இனி காண்பாயாக..”

கண்ணகியின் மலர்விழிகள்
பொழிகின்ற நீரையும்,
அவள் கையில் உள்ள
ஒற்றைச் சிலம்பையும்,
உயிர் நீங்கியதை ஒத்த
அவள் உடம்பையும்,
காடு போல் பரந்து
உடல் முழுதும் விரிந்து கிடக்கும்
அவள் கருங்கூந்தலையும் கண்ட
கூடல் நகரத்து அரசன் அஞ்சினான்.
அவள் வழக்குரைத்த் சொற்கள்
தன் செவிகளில் புகுந்ததுமே
உயிரற்ற உடல் ஆகினான்.

வழக்குரை காதை முற்றியது. அடுத்து வருவது வஞ்சின மாலை..

படத்துக்கு நன்றி:
கூகுள்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *