செண்பக ஜெகதீசன்

 

 

வறியார்க்கொன் றீவதே யீகைமற் றெல்லாங்       

குறியெதிர்ப்பை நீர துடைத்து.

     -திருக்குறள் -221(ஈகை)

 

புதுக் கவிதையில்…

 

ஏதுமில்லா வறியவர்க்கவர்

இதயங் குளிர

இயன்றவரைக் கொடுப்பதுதான்

ஈகை..

 

இது தவிர

ஏனையோர்க்குக் கொடுப்பதெல்லாம்

ஈகையாகாது,

அவரிடம்

ஏதோ ஒன்றை

ஏதிர்பார்த்துச் செய்வதேயாகும்…!

 

குறும்பாவில்…

 

இல்லாதவர்க்குக் கொடுப்பதே ஈகை,

ஏனையோர்க்குக் கொடுப்பதெல்லாம்

எதையோ எதிர்பார்த்துக் கொடுப்பதே…!

 

மரபுக் கவிதையில்…

 

இல்லை யென்று வருவோர்க்கே

     இருப்பதை மனதுடன் கொடுப்பதுதான்

நல்ல செயலாம் ஈகையென்பதால்

  நாளும் இதனைச் செய்வீரே,

அல்லா தோர்க்குக் கொடுப்பதெல்லாம்

   அவரிடம் எதையோ எதிர்பார்க்கும்

பொல்லாச் செயலாய் போய்விடுமே,

  புரிந்து கொள்வீர் மானிடரே…!

 

லிமரைக்கூ…

 

ஈகையென்பது இல்லாதவர்க்குக் கொடுப்பதே,

மற்றவர்களுக்குக் கொடுப்பது அவரிகளிடம் எதையோ

எதிர்பார்க்கும் அவப்பெயரை எடுப்பதே…!

 

கிராமிய பாணியில்…

 

குடுத்து ஒதவணும் குடுத்து ஒதவணும்

கைநெறயக் குடுத்து ஒதவணும்,

இல்லயெண்ணு வருவோர்க்கு

இருக்கிறதக் குடுத்து ஒதவணும்

இதுக்குப்பேருதான் ஈக..

 

இதவுட்டு

இருக்கவுனுக்கே குடுத்தியண்ணா

ஈகயில்ல அது ஈகயில்ல,

எதயெதயோ அவங்கிட்ட எதிர்பாக்கிற

ஈனச்செயலாப் பேயிருமே..

 

அதால,

குடுத்து ஒதவணும் குடுத்து ஒதவணும்

இல்லயெண்ணு வருவோர்க்கு

இருக்கிறதக் குடுத்து ஒதவணும்…!

 

செண்பக ஜெகதீசன்

 

 

 

 

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *