வித்தக இளங்கவி. விவேக்பாரதி

காப்பு 
ஆத்தாளை அண்ட மளந்தாளை ஏழுலகம்
காத்தாளைக் என்றன் கவிதையினைப் – பூத்தாள
வாவெனக் கூப்பிட்டு வார்க்கின்றேன் வண்ணப்பா !
காவென்றேன் செந்தமிழே கா !

பதிகம்
அரனுடலில் பாதி
…அமையவுரு வாகி
…அழகுவடி வான – உமையாளே
முருகனவ னாள
…முழுமைமிகு வேலை
…முறுவலொடு தந்த – உமையாளே
திருவுடலில் மேவுங்
…களபமத னாலே
…திடமகவை யீன்ற – உமையாளே
அருளினொளி பாய
…அழிவுணர்வு மாய
…அமைந்தகதி நீயே – உமையாளே ! (1)

மனதுரையும் மாய
…மினியகல நாளும்
…மதிமொழியும் நாம – முனதேகாண்
தனமுடைய தாயே
…தயையருளு வாயே
…தவறுகளைப் போக்கும் – வழிதேடி
தினமுனது பாதத்
…திருவருளை நாடும்
…திசைவழியி லோர்க்கு – மருள்வாயே !
கனகபத மாடிக்
…கவிவனைய நாளும்
…கடுகிவர மீனு – முமையாளே ! (2)

பவளமணி தண்டை
…படுவழகி லாரம்
…பகருமிடைச் சூட்டி – அணிவோளே
கவலையது போகிக்
…கரிநெருப்பில் வேகக்
…கடைவிழியில் பாரிங் – கதுபோதும் !
தவழுமெழில் மாரில்
…தமிழினணி பூட்டித்
…தரணியிது காக்க – உடன்வாராய் !
சிவனழகி தேவி !
…சிறுமைகுண மேவி
…சிதையுமுறை நீக்கி – யருளாயே ! (3)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *