பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

13734582_1050429538344578_1049135032_n

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

112795645@N05_rஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (23.07.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான முனைவர் காயத்ரி பூபதி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

முனைவர். காயத்ரி பூபதி கும்பகோணத்தில் பிறந்தவர். தற்போது ஐதராபத்தில் வசித்து வருகிறார். இவர் “குறள் கூறும் குற்றங்களும் அவற்றின் தண்டனைகளும்” என்ற தலைப்பில் இளம் முனைவர் பட்டமும் “சங்க இலக்கியத்தில் கருப்பொருளாட்சி” என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலிருந்து பெற்றவர். தனது ஆராய்ச்சிக் காலத்தில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் பின்னர் தனலட்சுமி கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். மேலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கருத்தரங்குகளில் தனது ஆய்வுக் கட்டுரைகளை சொற்பொழிவு மூலம் திறம்பட வெளிப்படுத்தி உள்ளார். இவர் இந்தி மொழியில் இளங்கலை பட்டமும் பெற்றவர்

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “படக்கவிதைப் போட்டி (73)

  1. தமிழரின் பறை

    பாட்டுக்குத் தாளம் போடும் பறை-எங்க‌
    பாட்டன் அப்பன் பார்த்த பறை

    தாளம் தப்பாது அடிக்கும் பறை-உங்க‌
    தலை, காலை ஆட்டும் பறை

    வீரப்பாட்டுக்கு தாளம் போடும் பறை
    வேடிக்கை பாட்டுக்கும் தாளம் போடும் பறை

    தாலாட்டுப் பாட்டுக்கு தாளம் போடும் பறை
    தாய் மண்ணில் என்றோ பிறந்த பறை

    எத்தனை வாத்தியம் வந்தாலும் -இங்கு
    ஏழைகள் யாவரும் விரும்பும் பறை

    பிறப்பையும் இறப்பையும் சொல்லும் பறை-இதன்
    பிறப்பின் கதையை அறியாத பறை

    அனுப்புனர்
    ராதா விஸ்வநாதன்

  2. இந்த நாட்டு இசை…

    ஒலிக்கும் பறையின் ஓசையிலே
    ஒன்றாய்ச் சேருதே உணர்ச்சியெலாம்,
    கிலியும் வந்திடும் உள்ளத்திலே
    கடைசி யாத்திரை நினைவினிலே,
    புலிக்கும் வந்திடும் கூடுதலாய்
    பொங்கும் வீரம் போதாமலே,
    சிலிர்க்க வைத்திடும் ஓசையிதே
    செந்தமிழ் நாட்டுக் கலையிதுவே…!

    -செண்பக ஜெகதீசன்…

  3. தமிழின அடையாளம்

    ஆதித்தமிழன் ஆரம்பித்த இசைமொழி
    அச்சம் மகிழ்வென கொண்டாடிய குலத்திற்கு
    விலங்கின அச்சத்தை விலக்கிட்ட பறை
    கலங்கின நெஞ்சத்தை கரம் உயர்த்திய பறை

    காலவெள்ளத்திலும் நிலைத்த இசைக்கலை
    பறையாட்டமே தப்பாட்டமாய்………
    இறவாப் புகழ்தரும் அஃறிணையின் தோல்
    இளைஞா்களுக்கு எழுச்சியூட்டும்
    இறந்தும் பாடம் சொல்லும்
    இசைக்க எத்தனையோ கருவியிருக்க
    இன்றளவும் பறை மனச்சிம்மாசனத்தில்
    படித்தவனோ பாமரனோ
    பாட்டாலே புரியவைப்பான்
    தேங்கிய உணர்வுகள் வெடித்தெழ
    வாங்கிய கரங்களில்
    ஓங்கியே ஒலிக்கும்
    ஒங்கிய இசையால் உலகளக்கும்
    தன்னை உருமாற்றி
    நாகரிகக் கரங்களில் இசைத்தாலும்
    பறைமொழி தான் இன்றளவும்
    புதுமொழியாய்………..
    பட்டிதொட்டியெல்லாம் பரவிய பறையாட்டம்
    தமிழர் கலையென தப்பாமல் முழக்கமிடும் தப்பாட்டம்

  4. தொல்குடி தமிழ் சமூகத்தின் சொத்து
    தோலிடைக் கருவிகளில்பறைஒரு முத்து
    தப்பு சத்தம் கேட்டாலே போதும்
    தகவல் பரப்பாக அது இருக்கும்
    சாவு நிகழ்ச்சிக்கும் திருமண நிகழ்ச்சிக்கும்
    சாமி நிகழ்ச்சிகளுக்குமாய் வாழ்வியல்
    உணர்ச்சிகளின் அன்றாட வாழ்க்கையில்
    அத்தனை சுக துக்கங்களிலுமிடம் பெறும் கலையாகும்
    சொற்கட்டு எனப்படும்
    மெட்டுகளே அடிப்படை பறைக்கு
    அதிர்தெந்தெழும் பறையின் ஓசைக்கு
    கிளர்ந்தெழும் உடல் அசைவுகள்
    ஆவேசம் ,மகிழ்ச்சி உற்சாகம் என
    உணர்ச்சிகளை எழுப்பி கேட்போரை
    இணைக்கும் ஒரே நேர்க்கோட்டில்
    தமிழினத்தின் தொன்மை அடையாளம்
    தப்பாட்டம் என்ற பறையாட்டம்
    இசைக்கு இன பேதங்களை உடைக்கும் சக்தி உண்டு
    இசைகூட சர்ச்சைக்குரிய விஷயமாயிற்று
    சாதி பிரச்சனையாலே
    சரஸ்வதிராசேந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *