சி. ஜெயபாரதன், கனடா

unnamed

பராசக்தியிடம் காணி நிலம் வேணும் என்று மிக்கக் கனிவோடு கேட்கிறான், பாரதி. அங்கே ஓர் மாளிகை கட்டிக் கொடு. பத்துப் பத்துப் பனிரெண்டு தென்னை மரம் பக்கத்திலே நட வேணும். நல்ல முத்துச் சுடர்போல நிலவொளி முன்பு வர வேணும். அங்கே கத்தும் குயிலோசை சற்றே வந்து காதில் பட வேணும். சித்தம் குளிரத் தென்றல் காற்று அடிக்க வேணும். அங்கே நான் யுக யுகமாய்ப் பாட்டுப் பாடப் போகிறேன். அந்தப் பாட்டுக் கலந்திட அங்கே ஒரு பத்தினிப் பெண் வேணும். எந்தன் பாட்டுத் திறத்தாலே இந்த வையத்தை நான் பாலித்திட வேணும்.

கண்ணம்மா ! நீ என் காதலி. பாயும் ஒளி நீ எனக்கு. பார்க்கும் விழி நான் உனக்கு. தோயுமது நீ எனக்கு. தும்பியடி நான் உனக்கு. வானமழை நீ எனக்கு. வண்ண மயில் நான் உனக்கு. பானமடி நீ எனக்கு. பாண்டமடி நானுனக்கு. பூணும் வடம் நீ எனக்கு. புது வைரம் நான் உனக்கு. ஞான ஒளி வீசுது நங்கை நின்றன் சுடர் முகத்தில். காதலடி நீ எனக்கு. காந்தமடி நான் உனக்கு. வேதமடி நீ எனக்கு. வித்தையடி நான் உனக்கு.

வீணையடி நீயெனக்கு. மேவும் விரல் நானுக்கு. கண்ணம்மா நீ என் வீணை. உன்னிடம் உள்ள இன்னிசையை வெளிப்படுத்துபவன் நான்.
“வீணையடி நீ எனக்கு,” என்னும் வரிகளைப் பலமுறைகளில் எழுதலாம்.

நீ வீணையடி எனக்கு.
எனக்கு வீணையடி நீ.
நீ எனக்கு வீணையடி.
எனக்கு நீ வீணையடி.
வீணையடி எனக்கு நீ.

ஆறு விதமாக எழுவதில் அழுத்தமான வரிகள் எவை ? வீணையடி நீ எனக்கு என்னும் கவிதை வரிகள்தான். மற்ற ஐந்து வகையாக எழுதியிருப்பத்தில் வரிகள் வலுவின்றி, திசையின்றி வசன வடிவில் உள்ளன. இப்படிச் சொற்களை மாற்றி அமைத்து எழுதுவதுதான் நடையழகு, நடையாட்சி [Style] என்பது. பாரதியார் கையாண்ட கவிதைக் காவிய நடையழகுத் திறன்போல், நடையாட்சிப் படைப்புகள் போல் இதுவரை யாரும் ஆக்கியதில்லை.

கவிதைப் புனைப்பு நான்கு தொகுப்பு நயங்களால் நளினம் பெறுகிறது. முதலாவது கவிதையின் அடிப்படை அதன் ‘கருத்தழகு ‘ [Theme]. கருத்தழகு இல்லாவிடின் கவிதை உயிரற்ற வெறும் உடலாகி விடுகிறது. ஒரு கவிதையின் ஆத்மாவே அதற்கு உள்ளொளியாய் இருந்து வெளியே சுடர்வீசும் அதன் ஆழ்ந்த கருத்துதான்! அக்கருத்துக்கு உருவம் தந்து கவிதையைக் கட்டுபவை, செங்கல் போன்ற அதன் சொற்கள். எதுகை, மோனை, மற்றும் சீர், தளை ஆகிய வற்றைக் கொண்டு யாப்பிலக்கணத்தைப் பயன்படுத்திப் பாக்கள் அமைப்பதைச் ‘சொல்லழகு’ என்று குறிப்பிடுகிறேன். அவை வடிவம் பெற்ற பின், கவிஞனின் சிந்தனையில் உதயமான கருத்து எழுத்துருவில் பதிவாகிறது! அடுத்து வாசகர் நெஞ்சில் நடனமிட கவிதையின் உடலுக்கு வனப்பூட்டுவது, அதன் ‘நடையழகு. நான்காவது கவிதையின் இயற்கை மேனிக்கு ஒளியூட்டக் கவிஞர் கையாளும் ‘அணியழகு’ இவை நான்கையும் ஏற்ற அளவில் குழைத்துத் தூரிகையில் வரையக் கவிஞனின் கற்பனா சக்தியே, கவித்துவ ஆக்க சக்தியாகப் பயன்படுகிறது.

பெண்ணே நீயொரு வீணை. இசைத் தொனியில் நீயொரு வீணை. உடல் வனப்பில், கட்டமைப்பில் ஒரு வீணை போன்றவள். இந்த அரிய வீணை என்னருகே பாடிப் பரவசப் படுத்த எனக்கு இறை அளித்த கொடை நீ. நல்ல தோர் இனிய வீணை நீ. உன் நலங்கெட உன்னைப் புழுதியில் எறிந்தவர் பலர். அப்படிச் செய்த இராமன் முதலில் இப்போது நினைவுக்கு வருகிறான். இராமன் கர்ப்பிணி சீதாவைக் காட்டுக்கு அனுப்பினான், நள்ளிராப் பொழுதில் தமயந்தியைப் புறக்கணித்து நளன் சென்றான். துஷ்யந்தன் சகுந்தலையை மறந்து ஒதுக்கினான். இவரது சோக வாழ்க்கை போல் இன்னும், இப்போதும் எத்தனை, எத்தனை இல்லங்களில் நல்ல, நல்ல வீணைகள் புழுதியில் எறியப் பட்டுள்ளன ! ஆனால் கண்ணம்மா நீ ஆத்ம வீணை எனக்கு. என்னுயிர் உள்ளவரை பொங்கும் இன்னிசைக் கானம் பொழிவாய். பொன் வீணையடி நீ எனக்கு. மகர யாழடி நீ எனக்கு. ஏழு சுரங்களில் என்னருகே பாடி இவ்வரிய பிரபஞ்சத்தை மறக்காதபடிச் செய்பவள் நீ.

நல்லதோர் வீணை செய்தே, அதை

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ ?

சொல்லடி சிவசக்தி என்னைச்

சுடர்மிகும் அறிவொடு படைத்து விட்டாய்.

வல்லமை தாராயோ இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே ?

+++++++++++++++++++++++++++++

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *