[ எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்த்திரேலியா ]

 

பழைமையினை பார்ப்பதற்குப் பலருக்கும் பிடிப்பதில்லை

பழமையது அருமையினைப் பலருமே அறிவதில்லை

பழமையினை எதிரியாய் பார்க்கின்ற காரணத்தால்

பலபயன்கள் இழந்துநிற்கும் பாங்கினையும் பார்க்கின்றோம் !

 

இயற்கையினை வாழ்வாக்கி இயங்கியது பழமையது

இதனாலே ஆரோக்கியம் எழிலுடனே விளங்கியது

நாட்டுப்புறம் என்றெண்ணி நல்லவற்றை ஒதுக்கியதால்

நம்வாழ்வில் நட்டம்பல நாளுமே வளர்கிறதே !

 

விஞ்ஞானம் எனச்சொல்லி விபரீதம் வந்திருக்கு

விளைச்சலினைப் பெருக்குதற்கு விதைக்கின்றோம் விஷமருந்தை

பொய்யில்லா வகையினிலே விளைச்சல்கண்ட பூமியெலாம்

பொல்லாத மருந்துடனே போராடி மாய்கிறதே !

 

காய்கறியைப் பெருக்குதற்கு கண்டுவிட்ட விஞ்ஞானம்

காய்பெருக்க வைத்துவிட்டு கால்பறித்து நிற்கிறதே

நோய்நொடிகள் பலதந்து நொய்யும்படி செய்யுமிந்த

வேதனைகள் பார்த்தபடி வெந்துநின்று வெதும்புகின்றோம் !

 

நாகரிகம் எனும்பெயரால் நம்வீட்டில் புகுந்துவிட்ட

நாமறியா உணவுவெல்லாம் நம்முள்ளே செல்கிறது

சென்றுவிட்ட உணவெல்லாம் சீரிழக்கச் செய்துநின்று

குன்றிவிடச் செய்வதனை என்றுதான் உணருவதோ !

 

பலகடைகள் பலவுணவு பல்வேறு வடிவங்களில்

பாங்காக வலம்வந்து பலரையுமே மயக்கிறதே

நலன்பற்றி நினையாமல் நயம்பற்றி எண்ணுவதால்

நலன்கெட்டு போவதற்கு நாமுடந்தை ஆகுகின்றோம் !

 

பண்டிகைகள் வந்துவிட்டால் பட்சணங்கள் செய்திடுவார்

பட்சணங்கள் அத்தனையும் பக்குவமாய் அமைந்திருக்கும்

இப்போது பட்சணங்கள் எத்தனையோ வருகிறது

அத்தனையும் ரசாயான கலவையாய் அமைகிறதே !

 

கூழ்குடித்தோம் மோர்குடித்தோம் குடல்நோய்கள் வரவில்லை

பழஞ்சோற்றை உண்டாலும் பழுதெம்மை அண்டவில்லை

விலைகொடுத்து பலவற்றை விருந்தெனவே உண்ணுகின்றோம்

மறுநாளே வைத்தியரை வலம்வந்து நிற்கின்றோம் !

 

நெல்லரிசிச் சோறுண்ண நிம்மதியே இல்லையென்று

வெள்ளைநிற உணவெல்லாம் வீட்டில்வாங்கி வைக்கின்றோம்

நல்லதெல்லாம் மாட்டுக்கு நாம்கொடுத்து விட்டுநிதம்

பொல்லாத உணவையெல்லாம் பொறுக்கிவைத்து உண்ணுகின்றோம் !

 

உயிர்ச்சத்து அத்தனையும் உதறிவிட்ட உணவுகளை

உயர்வாக எண்ணிநிதம் ஒழுங்காக உண்ணுகின்றோம்

நோய்வந்த பின்னாலே நூறுமுறை அழுகின்றோம்

யார்வந்து சொன்னாலும் நம்குணமோ மாறவில்லை !

 

பாட்டிதந்த உணவெல்லாம் பறக்கவிட்டு விட்டதனால்

பருவம்வரும் முன்னாலே பலநோய்கள் வருகிறதே

நாட்டார்கள் காட்டார்கள் காட்டிவைத்தs முறையாவும்

நம்வாழ்வை வளம்படுத்தும் என்பதனை மறந்துவிட்டோம் !

 

பழமையென்னும் அத்திவாரம் பலமளிக்கும் என்பதனை

உணருகின்ற நிலையெம்முள் உருவாகி வரவேண்டும்

விஞ்ஞானம் நாகரிகம் விந்தைபல செய்தாலும்

நம்வாழ்வில் அதன்பெருக்கை நாமுணர்ந்து செயற்படுவோம் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *