நிர்மலா ராகவன்

குழந்தைகள் காட்சிப்பொருட்களல்ல

நலம்-

எங்கள் உறவினர் பெண் ஒருத்தி தன் குழந்தையின் புத்திசாலித்தனத்தைப் பார்த்துப் பூரித்துப்போனாள். அருகில் இருப்பவர்களிடமெல்லாம், `இவளைப் பாருங்களேன்!’ என்று கூவுவாள். தாய் ஓயாமல் பார்ப்பதையெல்லாம் விளக்க, மகளின் அறிவு வயதுக்கு மீறி வளர்ந்திருந்தது என்னவோ உண்மை.

ஆம், முதல் குழந்தைதான். இரண்டு வயது. பிறருக்கு அவளுடைய `நிர்ப்பந்தம்’ அலுப்பாகிவிட்டது. என்னிடம் குறைப்பட்டுக்கொண்டார்கள்: `எப்பவும் அந்தக் குழந்தையையே நாம்ப பார்த்துக் கொண்டிருக்கணும்!’

`எத்தனையோ குழந்தையைப் பாத்தாச்சு!’ ஒரு முதிய பெண்மணியின் அலுப்பு.

அடுத்த முறை அந்த இளம் தாய் என்னுடன் தொடர்பு கொண்டபோது, `உன் குழந்தை எப்படி இருக்கிறாள்? Don’t show her off!’ என்று அறிவுரை கூறினேன். (கண்டனம் தெரிவிப்பது ஆங்கிலத்தில் எவ்வளவு எளிதாக இருக்கிறது!).

`இப்போதெல்லாம் நான் அப்படிச் செய்வதில்லை. அவளுடைய அப்பாவை அப்படித்தான் செய்தார்களாம். அதனால், `ஓயாமல் பெண்ணைப்பற்றி பெருமையாகப் பேசாதே!’ என்றுவிட்டார்,’ என்று தெரிவித்தாள்.

அந்த மனிதர் சிறு வயதில் கர்னாடக இசையில் கேள்வி ஞானத்திலேயே சிறந்து, பல போட்டிகளில் வென்றிருக்கிறார். வருகிறவர் போகிறவர்களிடமெல்லாம் அச்சிறுவன் பாடுவதைக் கேட்க வைப்பார்கள் அவனுடைய பெற்றோர். அவனைப் பாடச்சொல்லி, காசெட் வேறு எடுத்துக் கொடுப்பார்கள்.

பெரியவனானதும், `எனக்கு கர்னாடக சங்கீதம் என்றாலே வெறுப்பாகிவிட்டது!’ என்கிறார் அந்த தந்தை. பெற்றோரை எதிர்க்க முடியாது, அவர்கள் விருப்பப்படியெல்லாம் ஆடியது இப்போது நினைத்தாலும் கசப்பாக இருக்கிறது, பாவம்! மிக நெருங்கியவர்களிடம் சொல்லி வருந்துவதுதான் அவரால் செய்ய முடிந்தது.

நம் குழந்தை சிறந்திருந்தால் நமக்குத்தான் பெருமை. இதுவும் ஒருவித தற்பெருமைதானே! தவிர்க்கலாம்.

`வயதில் மூத்தவர்களை திருப்திப்படுத்த மட்டும்தான் தான் வாழ்கிறோம்,’ என்ற நினைப்பு எந்தக் குழந்தைக்கும் கசப்பாகத்தான் இருக்கும். அதனுடைய தனித்தன்மையை வெளிக்கொணர்வதுதான் பெற்றோர் செய்யக்கூடிய உபகாரம்.

தான் பெறாத திறமையை தான் பெற்ற குழந்தை (ஆணோ, பெண்ணோ) பெற்றுவிட்டான் என்ற பெருமிதத்தில் பார்ப்பவர்களிடம் எல்லாம் அவனைப்பற்றி பெருமையாகப் பேசும் தாய்மார்கள் சகஜம்.

நம் குழந்தையால் நமக்குத்தான் பெருமை. மற்றவர்களுக்கு என்ன வந்தது!

என் சுயக்கதை: இசையும், நடனமும் மிகச் சிறு வயதிலேயே எனக்குப் பிடிக்கும். நான் நாட்டியம் கற்றுக்கொண்டது பரதநாட்டியம் என்பது ஒரு குறிப்பிட்ட சாராருக்குத்தான் என்றிருந்த காலத்தில்.

எங்கள் வீட்டுக்கு வருகை புரியும் முதிய பெண்மணிகள், `என்னமோ டான்ஸ், டான்ஸ் என்கிறாளே! அது எப்படீடி இருக்கும்?’ என்று என் அம்மாவைக் கேட்பார்கள். விசேட காலங்களில் கோயில்களில் சில பெண்கள் நாட்டியம் ஆடும்போது, அதைப் பார்ப்பதுகூட தம் கௌரவத்திற்கு இழுக்கு என்பது போலிருந்தது இவர்களது மனப்போக்கு. அதனால் நாட்டியம் என்பதே இவர்களுக்கு அந்நியமாகப் போய்விட்டது.
அடுத்தது நான் வேண்டாவெறுப்புடன் எதிர்பார்த்ததுதான். ‘நிர்மலா ஆடுவாளே!’ என்று என் தாய் என்னை அழைப்பார்கள்.

என் திருப்திக்காக நான் எப்போதும் ஆடிக் கொண்டிருப்பேன். ஆனால், கண்காட்சிப் பொருளாகத் தான் அமைவதை எந்தக் குழந்தைதான் விரும்பும்?

`எதுக்கும்மா?’ என்று கொஞ்சம் முனகிவிட்டு, அம்மாவின் முறைப்பைத் தாங்கமுடியாது ஆடுவேன். எப்படித் தெரியுமா? கன்னங்கள் ஒட்டியிருக்கும்படி வாய்க்குள் இடுக்கிக்கொண்டு, இல்லையேல், வாயை இறுக மூடி, மேல் உதடு மூக்கில் படும்படி பொருத்திக்கொண்டு! (முயன்று பாருங்கள்!)

கோரமாக இருந்தால், `இன்னொரு பாட்டுக்கு ஆடு!’ என்று கேட்க மாட்டார்களே! என் அதிருப்தியை பின் எப்படித்தான் வெளிக்காட்டுவது!

அடுத்த முறை, `சிரிச்சுண்டு ஆடு!’ என்று அம்மா தாஜா பண்ணுவாள். சிரிப்பு என்னவோ வராது.

ஒரு முறை, வேற்றூரிலிருந்த ஒரு சிநேகிதியின் வீட்டுக்குப் போயிருந்தேன். அவள் கணவர் பெருமையுடன், `எங்கள் மகள் அற்புதமாக ஆங்கிலத்தில் கவிதை எழுதுவாள்,’ என்று கூறியபடி, மகளைக் கூவி அழைத்தார்.

முகத்தைத் தூக்கிக்கொண்டு வந்தாள், அந்த பதினேழு வயதுப் பெண். `I know! It is a set-up!’ என்று பெற்றோரைக் குற்றம் சாட்டினாள்.

என் இளமைக்காலம் நினைவில் வந்தது. அவளுடைய வேண்டாவெறுப்பு புரிந்து, நான் அவளுடைய பயத்தைப் போக்கினேன். `அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. உங்கள் வீட்டு அலங்காரப் பொருட்களைப் பார்ப்பதற்காகத்தான் என்னை அழைத்து வந்தார்கள். உனக்கு விருப்பமில்லாவிட்டால் காட்ட வேண்டாம்!’ என்றுவிட்டேன்.

அவள் உள்ளே போனாள், பெற்றோரின் அதிருப்தியைச் சட்டைசெய்யாது.

`இன்னொரு முறை வந்தால், எங்கள் வீட்டு சாமிக்கும் நீங்கள் பாட வேண்டும்,’ என்று வேண்டுகோள் விடுத்தார் அந்த நண்பர். (அதற்கு முன்னால் கோயிலில் நான் பாடியதைக் கேட்டிருந்தார்).

`இப்போதே பாடுகிறேனே,’ என்று உடனே தரையில் உட்கார்ந்தேன். இது தற்பெருமையோ, கர்வமோ அல்ல. (`யாராவது உன்னை பாடச் சொன்னால், உடனே பாட வேண்டும். பிகு பண்ணிக்கொள்ளக் கூடாது! அது தவறு,’ என்று என் குரு போதித்திருந்தார்).

நான் பாடி முடித்ததும், அப்பெண் தான் எழுதிய கவிதைகளை வலியக் கொண்டுவந்து காட்டினாள்!

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *