செண்பக ஜெகதீசன்

 

செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்து         

மில்லதனின் தீய பிற.  

     -திருக்குறள் -302(வெகுளாமை)

 

புதுக் கவிதையில்…

தம்மில் வலியோரிடம்

கொண்டகோபம்,

செல்லாது போகும்

சேர்க்கும் தீமையையே..

 

எளியோரிடத்து கோபம்

எதையும் தராது,

தீமை ஒன்றைத் தவிர…!

 

குறும்பாவில்…

செல்லாத இடத்து கோபந்தரும்

தீமையே, செல்லும் எளியோரிடத்து,

தருமது தீமையன்றி வேறிலையே…!

 

மரபுக் கவிதையில்…

வலியோர் தம்மிடம் சினங்கொண்டால்

     விரைவில் வந்திடும் தீமையதே,

பலிக்கா தவரிடம் கொண்டகோபம்

   பலனாய்த் தருமே பெருந்துன்பம்,

பலிக்குமென் றெண்ணிக் கோபமதை

   பலமிலா எளியோர் தம்மிடத்தில்

செலுத்தும் மாந்தர் தமக்குத்தான்

  சேரும் தீமை எல்லாமே…!

 

லிமரைக்கூ…

வலியோரிடம் கோபம் செல்லாதது

தீமையது, தராதே தீமையன்றி வேறெதுவும்

எளியோரிடம் கோபம் பொல்லாதது…!

 

கிராமிய பாணியில்…

செல்லாது செல்லாது கோவஞ்செல்லாது

வலியவங்கிட்ட கோவஞ்செல்லாது,

கோவப்பட்டா உடமாட்டான்

கொடுந்தீங்கு ஒனக்குவரும்..

 

எளியவங்கிட்ட கோவப்பட்டா

எளிசாப்போவுமுண்ணு எண்ணாத,

தெளிவாநீயும் தெரிஞ்சிக்க

தீமயத்தவுர எதுவும் வராதே…

 

அதால

கோவப்படாத கோவப்படாத

யாருகிட்டயும் கோவப்படாத…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *