க. பாலசுப்பிரமணியன்

 

இலக்கியம் எழுதாத நட்புக்கு

இதயத்தில் காவியம் படைக்கிறேன் !

இலக்கணத்தில் சிறைப்படாத நட்புக்கு

இலக்கியம் தேடுகிறேன் !

 

இயற்கையை இசைக்கின்ற நண்பனின்

இசையில் ராகமாய் நிற்கிறேன் !

சொல்லுக்குப் பொருளாய்

பொருளுக்குச் சொல்லாய்

சுவையூட்டும் சுதந்திரனின்

சுவையை ரசிக்கிறேன் !

 

கண்திரைக்குப் பின்னிருந்து

கைப்பிடித்து வழிநடத்தும்

கள்வனவன் !

கருத்துக்குள்  நுழையாமல்

கற்பனையோடு விளையாடும்

காலத்தின் தலைவன் !

 

கடவுளென்ற பெயர் அவனுக்கு ..

கற்றவர்கள் சொன்னார்கள் !

கற்றதனால் நானும் அழைத்தேன்

கடவுளென்று கைப்பிடித்த நண்பனையே !

 

நொடிகள் மணித்துளிகளாய்

மணிகள் நாட்களாய்

நாட்கள் ஆண்டுகளாய்

ஆண்டுகள் யுகங்களாய்

கழிந்த போதும் …

கைப்பிடித்த என்னை

கைகழுவாத நண்பன்  !

 

இனியதோர் பயணம்..

அமைதியான பயணம்…

அவன் பேசுவதில்லை ..

நான் ஏனென்று கேட்பதில்லை…

 

இருண்ட பூமியில் ..

வறண்ட நிலத்தில் ..

காலைக் கதிரின்

முதல் முத்தம் போல்

சருகான இலைகளை

அவன் பாதங்கள் தொடும்போது ..

தெறிக்கின்ற தீப்பொறிகள்..

பாதைக்கு பாலமிடும் !

 

முந்திய இரவில்

மூச்சடிக்கிய காற்று

முன்மொழிந்த பனிமுத்துக்கள் ..

காலையின் கண்களைக் கண்டதும்

சோம்பல் முறித்துச்

சுகம் தேடும் !

 

புதியதோர் உலகம்

கண்டதுபோல் ..

புண்படாத புன்னகைகள்

சிறகடித்து விண் செல்லும் !

 

இலைச்சருகல்கள் இசையமைக்க

இணையில்லாச்  சுகத்தினிலே..

தென்றலோர் தெம்மாங்கு பாட………

ஒளி படரும் !

ஒலி பாடும் !

.

நிலை மறந்து..

நானும் என் நண்பனும்

கைகோர்த்து..

அமைதியாய்..

 

எங்கே போகிறோம்?..

எனக்குத் தெரியாது..

அவன் சொல்லவில்லை..

நான் கேட்கவில்லை..

 

இனிதான பயணம்..

அமைதியான பயணம் !

 

மந்தையில் செல்லும் ஒரு ஆடு போல

தலையை அசைத்துக்கொண்டு..

அவனருகில்..

நான்……..!!

 

சில நேரங்கள் சிந்தனையில்..

சில நேரங்கள் கற்பனையில்

சோர்வின்றி..

 

அவனிடம் கேட்க என்னிடம்

கேள்விகள் இல்லை..!

வினாக்களுக்கு விடையளிக்கும்

வழக்கம் அவனுக்கில்லை !

 

போகுமிடமெங்கென்று…

புரியாமல்..

ஒன்று மட்டும் உண்மை

இது ஒரு அர்த்தமுள்ள பயணம்..

புதியதோர் இலக்குநோக்கி..

புரியாததைப்  புரிந்துகொள்ள……

அறியாததை அறிந்துகொள்ள…….

 

பாதையெல்லாம் சோதனைகள்

புதுப் புது இரகசியங்கள்..

புலனுக்குப் புரிந்ததெப்படி ?

 

நாங்கள் இருவரும்..

கைகோர்த்து..

அமைதியாய்..

புரிந்துகொள்ள முயற்சிக்காமல்..

கேள்விகளின்றி…

பதில்களின்றி…

 

என் நண்பனுக்கு

எப்படி நன்றிசொல்வது?

அவனைப் போற்றியா ?

அவனை வாழ்த்தியா?

தெரியவில்லை..

அமைதியாகச் செல்கிறேன்..

அவன் கைப்பிடித்து ..!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *