ராஜகவி ராகில்

 

வாடாத வரம் 

பெறும்

அன்னை மீது விழுந்த பூ 

தாயின் நா கொண்டு சேர்க்கத்தான் 

பூக்களில் 

தேனும் தேனீயும் படைத்தான் 

இறைவன் 

பட்டு 

மலர் 

பஞ்சு 

மெத்தைகள் சாய 

ஆசைப்படும் இடம்  அன்னை மடி

ஓர் ஆலயத்தை விட புனிதமானது 

அன்னை உடுத்த 

சேலை 

அம்மா முகம்  பார்த்திடின் 

எமனுக்கு தோணவே தோணாது 

அவள் உயிர் பறிக்க 

தாய் தாலாட்டின் பின்னே  கை கட்டி நிற்கும்  

புகழ் பூத்த புலவன் 

கவிதை 

தாய் வாழுகின்ற 

வீட்டுக்குத் தேவையில்லை 

விளக்கு 

உயிர் ஊட்டப்படுகின்ற புனித தலம்

தாய் கருவறை 

உலகம் என்ற உருண்டை விருட்சம்  

நிற்கிறது 

அன்னை வேரில் 

மாதா கண்ணீர் திரவத் தீ 

திரவத் தீ 

அது அழித்துவிடும் பாறைகளையும் 

அன்னை புன்னகை அரண் 

அது தடுத்துவிடும் 

எந்தச் சுனாமிகளையும் 

அன்னை 

பிசைந்தூட்டிய கூழ் 

ஐந்து நட்சத்திர ஹோட்டல் அமுதத்தினையும் 

ஆக்கிவிடும் வெறும் வைக்கோலாய்

அம்மா சமைப்பது அரிசியல்ல

பாசம் 

விறகுகள் வென்று 

அவள் எரிகிறாள் 

அடுப்பில் 

இறைவன் 

அதிசயிக்கின்ற அதிசயம் 

அன்னை பிரசவம் 

தன் தாய் மறந்த மகன்  

இதயத்தால் இறந்த 

பிணப் பிரஜை 

தாய் 

இருமல் சத்தம் ஒரு தரம் கேட்டாலும் 

மருத்துவம் செய் 

வைத்தியன் கடத்தி வந்து 

ஒரு குயிலிடம் கேள் 

அது சொல்லும் 

தன் குக்கூ 

அன்னைக்கான வாழ்த்தென 

மழைத் துளிகளிடம் விசாரி 

அவை மொழியும்  

தாய் பாதம் தொடத்தான் பொழிவதாய்

அன்னைக்கு

பணிவிடை செய்கின்ற கைகளில் இருப்பவை  

விரல்களல்ல வெளிச்சங்கள்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *