கிரேசி மோகன்

’’காளிதாசர் உலா’’ நடப்பதில் மகிழ்ச்சி….!’’மேக சந்தேசமும்’’, ‘’குமார சம்பவமும் ‘’ லிஃப்கோ சமஸ்கிருத பதிப்பை வைத்து வெண்பாவாக்கம் எல்லா ச்லோகங்களையும் 2010துகளில் செய்தேன்….குறிப்பாக ‘’குமார சம்பவம்’’….உட்கார்ந்த இடத்தில் உலகையே பார்த்த ‘’காளிதாசர்’’ விஞ்ஞானிக்கு மேற்பட்ட மெய்ஞானி….400 ஸ்லோகங்கள் மொழி பெயர்த்தேன்….ஏனோ நிரு விட்டது….இந்த பகிர்வை சாக்காக வைத்து முழுதும் முடித்து விட நப்பாசை….முதலில் ‘’காப்பு செய்யுள்கள்’’ ஆறைப் பதிவு செய்கிறேன்….இருக்கவே இருக்கு ‘’ஈஸ்வரோ ரக்‌ஷது’’….

குமார சம்பவம்
——————————

காப்பு
———————-
சிவபார்வதி
—————-
சொல்லும் பொருளுமாய், அல்லும் பகலுமாய்
கல்லும் கடவுளாய் கோர்ந்திருந்து -புல்லும்
உமாமஹேச தம்பதியின் ஊக்கம் விழைகிறேன்
குமாரசம்ப வம்செய் குறித்து….(1)….2-10-2010

முருகன்
———-
உன்பிறப் புக்குமுன்னால் உண்டான சம்பவத்தை
தன்படைப்பில் காளிதாசன் தந்ததைமுக் -கண்பிறப்பே
முந்தைத் தமிழில் மொழிபெயர்த்திட மூலமே
வந்தெனக்கு கைகொடுத்து வாழ்த்து….(2)….2-10-2010

பிள்ளையார்
—————
உன்னை மறந்தால் உலகம் பழித்திடும்
என்னை, எருக்கம்பூ ஏகனே -முன்னை
கந்தன் மணமுடித்தாய், எந்தன் மொழிபெயர்ப்பில்
தந்தை மணமுடிக்கத் தாவு….(3)….2-10-2010

சரஸ்வதி
———–
செல்வம் செலவாகும், வீரம் வயதாகும்
கல்வி குறையாது குன்றாது -பல்கிப்
பெருகிட வைத்திடும் பாரதியின் நூலுக்கு
அருகிருந்து சேர்ப்பாய் அறிவு….(4)….2-10-2010

காளிதாசன்
—————
வாடாத பாக்களை வாணியின் பாதத்தில்
காடாய்க் குவித்தமகா காளிதாசா -சீடனாய்
ஏற்றென்னை நம்மன்னை சாற்றிய தாம்பூலச்
சாற்றையென் பாழ்வாயில் சிந்து….(5)….2-10-2010

சு.ரவி
——–
நண்பாநீ மந்திரியாய் நல்லா சிரியனாய்
வெண்பாநான் செய்ய வகைசெய்தாய் -பண்பால்
சிறந்தவனே இந்நூல் சுரந்திட என்னுள்
கரம்தந்(து) அளித்திடுவாய் காப்பு….(6)….14-10-2010

சர்கம்-1
———-
கரையற்று நீண்டு குடதிசையில் மேற்கில்
வரையற்ற வாரிதி வெள்ளம் -வரையுற்றுப்
பாரின் அகலத்தைப் பார்க்கும் அளவுகோல்
பாரீர் இமயமதன் பேர்….(1)

கன்றாய்யிக் குன்றினைக் காட்டியம் மேருமலை
நின்று கறக்க, நிலப்பசு -என்றும்
சுரந்திடும் ரத்தினம் சஞ்சீவிப் பாலை
வரம்தரும் வெற்பை வணங்கு….(2)

சீதளம் சேர்த்திடும் சந்திரன் மேலுற்ற
பாதகம் பாராட்டா பண்புடைத்தோம் -மேதினிக்கு
எல்லா சுபிட்சமும் நல்கும் இமகிரிக்கு
பொல்லாப் பனியா பொருட்டு….(3)

விண்சார்ந்த அப்ஸர வல்லிகள் பூசிடும்
செஞ்சாந்து வாசத்தூள் சூழ்ந்தவுச்சி -மஞ்சோடு
பட்டுச் சிதற பரிதி ஒளிசிவக்கப்
பட்டப் பகலிலந்திப் போது….(4)

கோடையில் சித்தர்கள் வாடிடாது வெண்மேக
ஆடை நிழலடியில் ஆசிரமம் -ஜாடை
கருத்தவை பெய்கையில் குளிருக்(கு) இதமாய்
சிரத்தினில் வெய்யில் சுகம்….(5)

மதக்களிறின் மீதேறி மத்தகத்தில் சிங்கம்
சதையுறிய முத்துக்கள் சிந்தும் -இதையறிந்த
வேடன் அரிமா வழியை அறிவானாம்
மூடும் பனியில் முனைந்து….(6)….

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “’’குமார சம்பவம்’’….!

  1. வரவேற்கத்தக்க பதிவுகள். ஆவலுடன் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.

    முந்தைய வெண்பா ஆக்கமான மேகசந்தேசம் எங்கு கிடைக்கும்? படித்து மகிழ ஆவலாக உள்ளேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *