சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

3

பவள சங்கரி

independence_day1

அனுபவம் தவிர வேறு சிறந்த கல்வியேதுமில்லை – சத்திய சோதனை 1948

பல்கலைப் பட்டங்களுக்கு மயங்கிவிடும் போக்கு காந்தியின் காலத்திலும் இருந்திருக்கிறது. பட்டங்களுக்கு மதிப்பு இருப்பது உண்மைதான் என்றாலும் அனுபவக்கல்வியைக் காட்டிலும் உன்னதமான ஆசிரியர் எவரும் இருக்க முடியாது . அறிவார்ந்த செயலாற்றலே தனிநபர் திறமையை வளர்க்கும். அந்த வகையில் வாழ்க்கை அனுபவமே பாடமாக வேண்டும் என்கிறார் மகாத்மா காந்தி. அதாவது ஏட்டுக் கல்விக்கு காந்தி முக்கியத்துவம் கொடுக்கவில்லை. வழக்குகளை உருவாக்கி அதனை வளர்த்து, அதன் மூலம் வாழ்பவர்களே வழக்கறிஞர்கள். இவை தவிர நீதியையும், சமரசத்தையும் வளர்ப்பது அவர்களின் குறிக்கோள் அல்ல என்பதை அவர் தம் வழக்கறிஞர் பணி மூலம் அறிந்திருந்தார். காரணம் வழக்கறிஞர் தொழிலின் பலம் மற்றும் பலவீனங்களை அவர் நன்றாகவே அறிந்திருந்தார். வன்முறையற்ற அகிம்சை வழியில் அரசின் தவறான சட்ட திட்டங்களை எதிர்த்து நிற்கும் துணிவை மக்களுக்கு ஊட்டுவது மூலமாக அரசையும், சமூகத்தையும் மாற்றிவிட முடியும் என்றே நம்பினார் மகாத்மா. கல்வி எனும் எல்லைகளைக் கடந்த அனுபவம் மட்டுமே எப்படிப்பட்ட பிரச்சனையாக இருப்பினும் அதை எதிர்கொள்ளும் வல்லமையைத் தருகிறது என்கிறார். கல்வித் திறன் மட்டும் கொண்டு ஒருவர் நிர்வாக வெற்றியைப் பெறுவது சாத்தியமன்று. ஆம், அந்தந்த சூழலுக்கு ஏற்ப காரியங்களை திட்டமிடவும், செயல்படுத்தவும் அனுபவம் தரும் ஆற்றலைத் தவிர வேறு எந்த பாடத்திட்டமும் தந்துவிடப்போவதில்லை. இதையுணர்ந்து அதன் போக்கில் செயலாற்றுபவரே நிர்வாகத்தில் வெற்றி காண்கிறார். சிறந்த முடிவுகள் என்பது தகுதி வாய்ந்த அனுபவத்தாலேயே எடுக்கப்படுகிறது. அப்படி மகாத்மா காந்தியடிகள் எடுத்த சில முடிவுகளால்தான் நம் நாடு சுதந்திரம் பெற முடிந்தது. இல்லாவிட்டால் நாம் இன்றும் அடிமைத்தளையில் சிக்குண்டுக் கிடந்திருப்போம்.

images (14)
இன்றைய இளந்தலைமுறையினரின் எத்தனை விழுக்காடு இளைஞர்கள் இன்று நாம் இருக்கும் இந்த சுதந்திர நிலையை அடைய எத்தனை நல்லான்மாக்கள் தம் இன்னுயிரை தியாகம் செய்திருக்கிறார்கள், அவர்கள் எத்துணை இன்னல்களை எதிர்கொண்டார்கள் என்பதெல்லாம் அறிந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. நம் இந்தியத் திருநாட்டின் மறுமலர்ச்சிக்காகப் பாடுபட்ட அந்த உன்னத தியாகச்செம்மல்களின் போராட்டங்கள் குறித்தும், நம்முடைய மேன்மையான பாரம்பரியம் குறித்தும் அவர்கள் அறிந்திருக்கவேண்டியதும் அவசியம். ஆண்கள் மட்டுமன்றி பல பெண்களுகளும் இந்த சுதந்திர வேள்வியில் ஆகுதியாக தம் இன்னுயிரை ஈந்துள்ளனர். நம்மில் பலர் அவர்களைப்பற்றி அறியாமலே இருக்கிறோம். அதில் ஒருவர் பிரேமா காண்டக் என்பவர். இவருடைய காலம் 1905 – 1985.

1930 – 32 இல் தண்டி உப்பு சத்தியாகிரகம் நடந்த காலகட்டம். பிரேமா இதில் தீவிரமாக ஈடுபட்டு இரு முறை சிறை பிடிக்கப்பட்டார். விடுதலையான பின்பு அகமதாபாத்திலிருந்து பூனாவிற்குக் குடிபெயர்ந்து அங்கு மகாத்மா காந்தியுடன் இணைந்து அவர்தம் ஆக்கப்பூர்வமான பணிகளில் தம்மையும் ஈடுபடுத்திக்கொண்டார்.

mk_ghandhi_20140203பிரேமா காண்டக் தேசபக்தி மிக்க, சுதந்திரப்போராட்ட தியாகியும், பேரறிஞரும் ஆவார். 1905 ஆம் ஆண்டில் கன்வார் எனும் இடத்தில் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். 1928 ஆம் ஆண்டில் மும்பை பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டப்படிப்பை படித்து முடித்தார். மாணவர் இயக்கத்தில் சேர்ந்து சைமன் கமிசனுக்கு எதிராக பொது ஆர்ப்பாட்டங்களில் பங்குபெற்றார். மும்பை பிரசிடென்சி இளைஞர் அணியின் உயர்மட்டக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்நாட்களில் போராளி இந்து மதமும், கம்யூனிசம் ஆகிய இரண்டு சித்தாந்தங்களும் மாணவர்களைக் கவரக்கூடியவைகளாக இருந்தன. இவரை கம்யூனிசத்தில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது, பிரேமா கம்யூனிச இலக்கியமும் கற்றார். ஆனாலும் மகாத்மா காந்தியடிகளின் சித்தாந்தங்கள் மீது ஈடுபாடு ஏற்பட அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்தில் சேர்ந்தார். காந்தியடிகள் அவரை சபர்மதி ஆசிரம பொறுப்பாளராக நியமிக்க, அவரும் 1929 முதல் 1933 வரை அப்பணியைச் சிறப்பாக நிறைவேற்றினார்.

அவருடைய முக்கியமான செயல்பாடுகள், சுதேசி இயக்கம், காதி பயன்பாடு குறித்த விழிப்புணர்வு மற்றும் பெண் விடுதலையும், பெண்கள் முன்னேற்றம் குறித்ததாகவும் இருந்தது. காந்தியடிகளின் சத்தியாகிரக போராட்டத்தின் ஒரு முக்கியமான பங்கேற்பாளராக இருந்தார் பிரேமா. நான்கு முறை கைது செய்யப்பட்டு, ஒவ்வொரு முறையும் மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சில காலம் இந்திய தேசிய காங்கிரசில் குறிப்பாக காங்கிரசு சேவா தளத்தில் இணைந்திருந்தார்.

1942 ஆம் ஆண்டு இந்தியாவின் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்றதால் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் இருந்தபோது இளம் பெண்கள் அமைதியான முறையில் போராடுவதைவிட இராணுவ முறையில் போரிடுவதையே அதிகம் விரும்பியதை அறிந்தார். இந்த விசயம் அவரை மிகவும் சிந்திக்கச் செய்தது. விடுதலையான பின்பு சாசுவதியில் சங்கர்ராவ் தியோவின் ஆசிரமத்தில் சேர்ந்துகொண்டார். 1942 இல் காங்கிரசு கட்சி தடை செய்யப்பட்டது. பெண்கள் பங்கேற்கும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் சம்பந்தப்பட்ட குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் கிளைகள் திறக்கப்பட்டன. 1952 வரை இந்த கூட்டமைப்பில் ஈடுபட்டிருந்தார்.

ஆனாலும் இந்த செயல்பாடுகள் அவர் மன அமைதிக்கு பங்கம் விளைவித்ததால், தனக்கு ஏற்பட்ட மாற்றங்களுக்காக வருத்தியதோடு, அதிலிருந்து விடுபட்டு மன அமைதிக்காக இமாலய மலையில் தனிமையில் சில காலம் கழித்தார். அதன்பின் அவர் பூனாவிற்குத் திரும்பிவந்து அங்கு சசுவாத்தில் கஸ்தூரிபா ஆசிரமத்தின் பொறுப்பேற்றுக் கொண்டார். மது ஒழிப்பு இயக்கம் ஆரம்பித்து, வருடத்தில் நான்கு மாதங்கள் வறண்ட மாதங்கள் என்று மது இல்லாத மாதங்களாக அறிவிப்பதிலும் வெற்றி கண்டார்.

பின் தங்கிய கிராமங்களில் உள்ள பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் தங்கள் சுய கால்களில் நிற்பதற்கான அத்துணை முயற்சிகளும் செய்து அதில் வெற்றியும் கண்டார். மகாராஷ்டிர மாநிலத்தின் குறிப்பிட்ட ஒரு சில இலக்கியவாதிகளில் ஒருவராகவும் இருந்தார் பிரேமா. காந்தியச் சிந்தனைகள் மற்றும் நம் வேத வசனங்கள் குறித்த பல நூல்களும் இயற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது!

வாழ்க பாரத மணித்திருநாடு!

வந்தே மாதரம்!

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

  1. ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்

    கவிஞர் இரா. இரவி

    9842193103
    eraeravik@gmail.com.

    *****
    ‘ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்’ என்று அடையும் முன்பாகவே மகாகவி பாரதியார் தொலைநோக்கு சிந்தனையுடன் பாடினார். மகாகவி வாக்கு பலித்தது.

    இன்று நம்மில் சிலர், ஏன் விடுதலை அடைந்தோம்? வெள்ளைக்காரனே இருந்து இருக்கலாமே என்று ஆதங்கம் கொள்கின்றனர். அது தவறு. அம்மா, அப்பா இருக்கும் குழந்தைகளுக்கு அம்மா, அப்பாவின் அருமை, பெருமை தெரியாது. ஆனால் ஆதரவற்ற குழந்தைகள் அம்மா, அப்பா அருமையை நன்கு அறிந்திருக்கும். அதுபோலவே சுதந்திரமாக வாழ்வதால் சுதந்திரத்தின் அருமை, பெருமை நம்மில் பலர் இன்னும் உணரவில்லை.

    மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகள், பறவைகள், மீன்கள் என அனைத்து உயிரின்ங்கள் விரும்புவதும் விடுதலை தான். விடுதலை என்பது மகத்தானது. பூமாலை போன்றது. அதனை குரங்கு போல பிய்த்துப் போட்டால் அது மாலையின் குற்றமன்று.

    ஜவஹர்லால் நேரு அவர்கள் பிரதமராக இருந்த போது, அவர் செல்லும் வழியில் அவரை மறித்து ஒருவர் கேட்டார். விடுதலை, விடுதலை என்றீர்கள், விடுதலையால் எனக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்றார். அதற்கு நேரு அவர்கள் சொன்னார். செல்லும் வழியில் பிரதமரை இடைமறித்து கேள்வி கேட்கும் உரிமை உங்களுக்கு வந்ததே, விடுதலையின் பயன் தான். வெள்ளைக்காரத் துரையை இப்படி இடைமறித்து உங்களால் கேள்வி கேட்டு இருக்க முடியாது! என்றார். விடுதலையால் ஒரு பயனும் இல்லை என்று சிலர் விதண்டாவாதம் செய்து வருகின்றனர். விடுதலைக்கு முன்பு, விடுதலைக்கு பின்பு என்று வாழ்க்கையை பிரித்தால், விடுதலையின் விளைவு புரியும்.

    அகிம்சை வழியில் காந்தியடிகளும், ஆயுத வழியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களும் போராடிய பின்புதான் நமக்கு விடுதலை கிடைத்தது. தென்ஆப்பிரிக்காவில் வெள்ளையன் ஒருவன் காந்தியடிகளை மிரட்டிய போது, எங்கே சுடு பார்ப்போம்? என்று சொல்லி முன்நின்றவர் தில்லையாடி வள்ளியம்மை. கடுங்காவல் தண்டனை பெற்று நோய்வாய்ப்பட்டு அவள் இறந்த போது, காந்தியடிகள் மிகவும் வருந்தினார், கண்கலங்கினார்.

    வீர வாஞ்சிநாதன், கொடி காத்த குமரன் வரலாறுகள் நமக்கு தெரியும். இப்படி எண்ணற்ற உயிர்த்தியாகம் செய்து போராடி பெற்ற விடுதலையின் அருமையை இன்றைய இளைஞர் சமுதாயம் உணரவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

    மறைந்த விடுதலைப் போராட்ட வீரர் மாயாண்டி பாரதி அவர்கள் சொல்வார், “ஏறினால் ரயிலு, இறங்கினால் ஜெயிலு” என்று. அந்த அளவிற்கு வாழ்க்கையை, இளமையை தியாகம் செய்து சுதந்திரம் பெற்றுத் தந்தார்கள். மதுரை, வடக்கு மாசி வீதியில் அணுகுண்டு அய்யாவு, அவரது தம்பி ஏ.வி.செல்லையா, இவர் என்னுடைய தாத்தா (அம்மாவின் அப்பா). இவர்கள் போராடிய விதத்தை என்னிடம் பலமுறை சொல்லி இருக்கிறார்கள். சிறுவனாக இருந்த போது கேட்டவைகள் இன்றும் என் நினைவில் உள்ளது.

    மதுரையில் வாழ்ந்து வரும் பலர் இன்னும் திருமலை மன்னர் அரண்மனை பார்த்து இருக்க மாட்டார்க்ள். ஆனால் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள், மீனாட்சி கோவிலுக்கு அடுத்தபடியாக பார்க்க விரும்புவது திருமலை மன்னர் அரண்மனை. அதுபோல சுதந்திரமாக வாழ்பவர்களுக்கு சுசந்திரத்தின் அருமை தெரியவில்லை. சுதந்திரமற்றவர்களுக்குத் தான் சுதந்திரத்தின் அருமை தெரியும். தடியடி, துப்பாக்கி சூடு, “‘இம் என்றால் சிறைவாசம், ஏன்?’ என்றால் வனவாசம்” என்று இருந்த காலம் உண்டு.

    ஜாலியன் வாலாபாக் படுகொலை என்ற கொடூர நிகழ்வை நாம் நன்கு அறிவோம். வெள்ளையனே வெளியேறு, வெளிநாட்டுத் துணிகள் புறக்கணிப்பு இப்படி எத்தனையோ போராட்டங்கள் நடத்திய பிறகு போராடிப் பெற்ற விடுதலையை கொண்டாடி மகிழ்வோம்.

    நேரு அவர்கள் விடுதலை போராட்டத்தின் போது சிறையில் இருந்தார். அப்போது உணவில் மண் சேர்ந்து இருந்தது. சிறை அதிகாரியிடம் நேரு கேட்டார், “ஏன் இப்படி உணவில் மண் கலந்து தருகிறீர்கள்?” என்று. சிறை அதிகாரி சொன்னார், “மண் விடுதலைக்காகத் தானே போராடுகிறீர்கள், உங்கள் மண்தானே, சாப்பிட்டால் என்ன? என்றார். அதற்கு நேரு சொன்னார், “எங்கள் மண் விடுதலைக்காகத் தான் போராடுகிறோம். உங்களைப் போல மண்ணை விழுங்குவதற்கு போராடவில்லை” என்று.

    மாவீரர் நேதாஜி அவர்கள், இங்கிலாந்தில் பேசிக்கொண்டு இருந்த போது, ஒரு வெள்ளையர் சொன்னார், “பிரிட்டீஸ் சாம்ராஜ்ஜியத்தில் அஸ்தமனமை இல்லை” என்று. அதற்கு நேதாஜி சொன்னார், “கடவுள் கூட உங்களை இருட்டில் நம்பாமல் வெளிச்சத்தில் வைத்து இருக்கிறார்” என்றார் .

    காந்தியடிகளுக்கு ஆசிரம தொண்டுக்காக வந்த 52 பவுன் தங்க நகையை கஸ்தூரிபாய் ஆசைப்பட்டு கேட்டபோது தர மறுத்தார், எடுத்து விளக்கினார். பொதுத்தொண்டுக்காக வந்ததை நாம் எடுப்பது தவறு என்றார். வேண்டும் என்றால் எடுத்துக்கொள் என்ற போது, கஸ்தூரிபாய் மனம் மாறி, மன்னித்து விடுங்கள், எனக்கு வேண்டாம், பொதுத்தொண்டுக்கே பயன்படட்டும் என்றார். இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களால் கிடைத்தது நமக்கு விடுதலை.

    விடுதலையால் என்ன நன்மை? என்று கேட்கும் சிலருக்காக, விடுதலைக்குப் பின் நாம் அடைந்த பயனை, முன்னேற்றத்தை, வளர்ச்சியை, சாதனையை பார்ப்போம்.

    போக்குவரத்து : அன்று சென்னை செல்வதென்றால், மாட்டுவண்டியில் சென்றால் ஒரு வாரம் ஆகும். இன்று மகிழுந்து, பேருந்து, தொடர்வண்டி என்று எத்தனையோ வசதிகள், விமானம், விஞ்ஞான வளர்ச்சியின் உச்சம், மதுரையிலிருந்து சென்னைக்கு 50 நிமிடங்களில் சென்று விடுகிறோம்.

    எழுத்துரிமை : இன்று யாரும் மனதில்பட்ட கருத்தை, சுதந்திரமாக முகநூல், வலைபூ, இணையம் என்று எளிதில் எழுதலாம்.

    ஊடகம் : அன்று வானொலி தவிர ஒன்றுமில்லை. இன்று நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், தொலைக்காட்சிகள், இணையங்கள் இப்படி பல வளர்ச்சிகள் அடைந்துள்ளோம்.

    அலைபேசி என்பது தீ போல – தீயை அடுப்பு எரிக்கவும் பயன்படுத்தலாம், ஊரை எரிக்கவும் பயன்படும். அலைபேசியை நன்மைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். தீமைக்கு பயன்படுத்துவது நமது முட்டாள்தனம். அது அலைபேசியின் குற்றமன்று.

    பெண்கள் முன்னேற்றம். அனைத்து துறையிலும் தனி முத்திரை பதித்து வருகின்றனர். நேதாஜி அவர்கள் அமைத்த படையில் அன்றே பெண்களை சேர்த்தார். நமது நாட்டில் விமான போர்ப்படை விமானியாக தற்போது பெண்களை சேர்த்து உள்ளனர். பெண்களிடையே நல்ல விழிப்புணர்வு வந்துள்ளது.

    தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில், முன்னணியில் இருக்கிறோம். பெற்ற வசதிகள், பலன்கள், நன்மைகள் இவற்றை எண்ணிப்பார்க்கும் போது மகாகவி பாரதியார் பாடியது முற்றிலும் உண்மை. “ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்” என்பது.

    உலகில் விலைமதிப்பற்றது எது என்றால் விடுதலை தான். அமெரிக்க ஜனாதிபதியிடம், அமெரிக்கா பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என்ற போது, ‘உழைப்பு’ என்றார். இந்தியா பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என்றால் ‘விடுதலை’ எனலாம்.

    விடுதலைக்கு முன்பு மக்கள் எவ்வளவு துன்பத்தில் வாழ்ந்தார்கள் என்பதை வார்த்தைகளால் வடிக்க முடியாது. விடுதலைக்கு முன்பு வாழ்ந்த பெரியவர்கள் ஒரு சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் கேட்டுப் பாருங்கள், எடுத்து இயம்புவார்கள்.

    சுதந்திரத்தை சரியாக பயன்படுத்தாத்து நம் குற்றமே ஒழிய சுதந்திரத்தின் குற்றமன்று.

    தமிழகத்தில் அண்டை மாநிலங்களான கேரளா, பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்திட எதிர்ப்பதும், கர்நாடகா காவேரியில் தண்ணீர் திறக்க மறுப்பதும், ஆந்திரா பாலாற்றின் குறுக்கே உள்ள அணையின் உயர்த்தை உயர்த்தியதும் வாக்கு வங்கி அரசியலாகும். அரசியல்வாதிகள் செய்யும் குற்றத்தை, விடுதலையின் மீது சுமத்துவது விவேகமன்று.

    சிறிய சிட்டுக்குருவி கூட, அடைபடுவதை விட்டு, விட்டு விடுதலையாகி, உயரப் பறக்கவே விரும்புகின்றது. பறவைகள் மட்டுமல்ல, விலங்குகள் மட்டுமல்ல, செடி, கொடி போன்றவைகளும் விடுதலையை விரும்புகின்றன. எனவே இன்பமயமான, ஒளிமயமான விடுதலையை கொண்டாடி மகிழ்வோம். விடுதலை பற்றி விபரம் புரியாமல் பேசுவதை நிறுத்திடுவோம்.

    விடுதலையை நல்லவிதமாக பொதுநல நோக்குடன், மனிதாபிமானத்துடன், மனிதநேயத்துடன் வழங்கி கொண்டாடி மகிழ்வோம்.

    நன்றி
    அன்புடன்
    கவிஞர் இரா .இரவி

  2. எப்படிப் பெற்றோம் சுதந்திரம் ?

    சி. ஜெயபாரதன்

    செக்கிழுத்துப் பெற்றோம் சுதந்திரம்
    சிறைப்பட்டுக் கிட்டும் சுதந்திரம்
    மக்கள் ஒன்றுபட்டு எட்டும் சுதந்திரம்
    மாபெரும் அகிம்சைப் போரில்
    யாவரும் அடைந்தோம் சுதந்திரம்.
    கத்தி இல்லா யுத்தம்
    ரத்தம் சிந்தா யுத்தம்
    விமானக் குண்டு வீசா யுத்தம்
    குருச்சேத்திரம் இல்லா போர்
    பாரத மெங்கும்
    போர், போர், போர்
    தேர்ப்படை, வாள்படை இல்லா போர்
    போர்க் களத்தில்
    காந்தியே கண்ணனாய்ப் போர்க்
    கீதை உபதேசித்தார்
    சத்திய சோதனை நமக்கு !

    ++++++++++
    சி. ஜெயபாரதன்

  3. /** Article 147 of INDIAN PENAL CODE says England can even today capture India. Article-147 mentions 5 items — IIA-1947, GoIA-1935 and Privy Council, amendments in IIA-1947 and amendments in GoIA-1935 wrt interpretation of constitution. **/
    மந்திரமாய் வந்த சுதந்திரம்,
    தந்திரமாய் வளரும் சுதந்திரம்,
    எந்திரமாய் ஆன சுதந்திரம்,
    சிந்தையை மட்டும் சிறைவைத்தது

    காவலர்கள் சூழ்ந்த விடுதலை
    கயவர்கள் தேர்ந்த விடுதலை
    தன்னலத்தார் பெற்ற விடுதலை
    நீதிநெறிகளை கலங்கவைத்தது

    கற்றவனாய் ஆக்கும் சுதந்திரம் -( பட்டம்)
    பெற்றவனாய் பார்த்த சுதந்திரம் (அயலகம்)
    செல்வந்தேடி சென்ற சுதந்திரம்
    பெற்றவரை அழுக‌ வைத்தது

    கெடுதலை கண்ட விடுதலை
    வெறியுடன் ஆண்ட விடுதலை (வேதனை)
    படுதலைப் பார்த்த விடுதலை
    பண்பாட்டை படுக்க வைத்தது

    எழுபதும் ஆனபின்னுமேன்
    எழுவதில் எண்ணமில்லையே
    தாய்மொழி பாடல்சொல்லியும்
    சேயுமேன் திருந்தவில்லையே

    அன்புடன் அறிவுறுத்துவோம்
    அழுவதில் பயனுமில்லையே
    தாயகச் சேவையில்லையேல்
    வாழ்வதில் அர்த்தமில்லையே!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *