மீனாட்சி பாலகணேஷ்

ஆராரெனத் தாலாட்டுகின்ற அரசே!

வாழ்வின் மிகப்பெரிய அதிசயம் குழந்தைகள்தாம். ஒரு சிறுகுழந்தை நம்முடன் இருந்துவிட்டால் போதும், நேரம்போவதே தெரிவதில்லை. அதன் குறும்புகளும், மழலையும், விளையாட்டுகளும் சொல்லொணா இன்பத்தை வாரிவாரி வழங்க, அதனையெல்லாம் நாமும் மாந்திமாந்திக் களித்திருப்போம். எப்படி ஒவ்வொரு சிறுகுழந்தையும் ஒவ்வொருவிதமான அழகில் திகழ்கின்றதோ, அதே போன்று ஒவ்வொரு பிள்ளைத்தமிழ் நூலும் புதுப்புதுக் கருத்துக்களில், நயத்தில், சொல்லாடலில் ஒளிர்கின்றது எனலாம். கீழே நாம் காணப்போகும் முருகப்பெருமான் மீதான பழனிப்பிள்ளைத்தமிழும் இவற்றுள் ஒன்றாகும்.

*****

amu

நடைபழகக் கற்றுக் கொண்டுவிட்ட முருகன் எனும் சிறுகுழந்தையை, “வா ஐயா, வருக வருகவே!” எனத் தாயரும் செவிலியரும் அழைக்கும் அழகான காட்சி. பக்தியிலும் அன்பிலும் தோய்ந்து வெளிப்படும் ஆசைநிறைந்த சொற்கள்:

“முருகையா, வளங்களும் நலங்களும் நிறைந்த இந்தப்பூவுலகில் தேவர்கள், அசுரர்கள் மற்ற எல்லோரும் தினந்தோறும் அத்தாணி மண்டபத்தில் கொலு வீற்றிருக்கும் உந்தன் கொலுவைக் காணச் செல்லாதவர்கள் யார் உளர்? செல்லாதார் ஆர்?(எவரும் இல்லை எனப் பொருள் கொள்ள வேண்டும்)

“காணிக்கையாக உந்தனுக்கு அரிய பொருட்களைத் தராதவர்கள் எவர் உளர்? தாராதார் ஆர்? (இல்லை)

“உனது பாதங்களை வணங்கித் தொழவேண்டி அவற்றினைத் தழுவிக் கிடக்காதவர்கள் யார் தான் இல்லை? தழுவாதார் ஆர்?

“உன்னைக்காண எப்போது சமயம் கிட்டுமோவென மனதில் எண்ணிக்கொண்டு வராதவர்கள் தான் யார்? வாராதார் ஆர்? ( யாருமில்லை; எல்லோரும் வந்துள்ளனர் எனப்பொருள்)

“அடியார்களை என்றும் காத்தருளும் உனது தகைமையை வாழ்த்திப் புகழ்ந்து பரவித் துதிக்குமாறு தமது மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ளாதவரும் உண்டோ? வசியாதார் ஆர்?

“உனக்குண்டான பூசை முதலானவற்றை (வரிசைப்படி), முறைப்படி நடத்திவைக்க அனைவரும் காத்துக்கொண்டுள்ளனரே! வரிசைப்படியே நடத்தாதார் ஆர் உளர்?”

இவ்வாறெல்லாம் ‘ஆரார்’- ஆர் ஆர்? யார் யார்? (எவர் எவர் எனப்பொருள் கொள்ள வேண்டும்) எனச் செவிலியர் கேட்டு, ‘ஆராரோ ஆரிரரோ’ எனப் பாடித் தொட்டிலில் இட்டு உன்னைத் தாலாட்டுகின்றனர். அவ்வாறு தாலாட்டப்படும் அரசே வருவாயாக! பழனிமலை எனும் சிவகிரியில் வாழும் ஐயனே வருக வருகவே!

‘ஆராரோ ஆரிராரோ’, என்பது அன்னையர் குழந்தைகளுக்கு வழக்கமாக இசைக்கும் தாலாட்டாகும். அதன் முக்கியச் சொல்லான ‘ஆரார்’ என்பதனையே பலவிதமான வினாக்களில் ‘யார் யார்?’ எனத்தொகுத்திசைத்திருப்பது மிக்க அருமையாக உள்ளது. பாடிக்கேட்போர் செவிக்கு இன்பமாகவும் உள்ளது.

சீரார் நலஞ்சேர் பூவுலகிற் றேவா சுரரின் மற்றையரிற்
றினமு முனது கொலுக்காணச் செல்லா தாரார் திறைவளங்கள்
தாரா தாரா ருனது பதந் தனையே வணங்கித் தொழவேண்டித்
தழுவா தாரா ரெவ்வேளை சமயங் கிடைக்கு மெனநினைந்து
வாரா தாரா ருனதருளை வாழ்த்திப் புகழ்ந்து துதிக்கமனம்
வசியா தாரார் பணிவிடைகள் வரிசைப் படியே நடத்தாதார்
ஆரா ரெனத்தா லாட்டுகின்ற வரசே வருக வருகவே
அருள்சேர் பழனிச் சிவகிரிவா ழையா வருக வருகவே.

(பழனிப் பிள்ளைத்தமிழ்- சின்னப்ப நாயக்கர்- வருகைப்பருவம்)

திரு ஆவினன்குடி, சிவகிரி எனப்போற்றப்படும் பழனிமலையிலுறை முருகப்பெருமான் மீது சின்னப்ப நாயக்கர் என்பவரால் இயற்றப்பட்டது இப்பிள்ளைத்தமிழ் நூல்.

பிள்ளைத்தமிழ் நூல்களில் பாடப்படும் பருவங்கள் வரையறுக்கப்பட்டிருந்தாலும், இரண்டு அல்லது மூன்று பருவத்து நிகழ்வுகள் கலந்துவரும். எடுத்துக்காட்டாக, இப்பாடலையே எடுத்துக் கொள்ளலாம். வருகைப்பருவத்துப் பாடல்- இதில், இந்த வருகைப்பருவப் பாடலில் அன்னையர் தாலாட்டு இசைப்பது அழகுற, நயமுற, சந்தத்துடன் புனையப்பட்டுள்ளது பயிலுவோருக்கு இனிமை பயக்கின்றது.

*****

சின்னஞ்சிறு குழந்தை முருகன்; செவிலியரும் தாயாரும் கைநிறைய, தட்டு நிறைய அணிமணிகளை ஏந்திக்கொண்டு, குழந்தையை அலங்கரித்து அழகுபார்க்கக் காத்து நிற்கின்றனர். ‘ஐயனே வா,’ எனக் கைகளை நீட்டி அழைக்கின்றனர்.

“பொன் போன்றவனே வா, உனக்குப் பொன்னாலான அரைஞாணினைப்பூட்டுகிறேன், வா,” என்கிறாள் செவிலித்தாய்.

“சிறிய அழகான பொற்சதங்கையை உன் கால்களில் அணிவிக்க வேண்டாமோ?” என்கிறாள் அன்னை பார்வதி!

“மணிகளாலானதும், ஓம் எனும் வடிவிலமைந்ததுமான பதக்கத்தினை பூட்டிவிடுகிறேன், வா ஐயா,” என்பாள் இன்னொருத்தி.

குழந்தை, அழைப்பவர்களைக் கண்டு மகிழ்ச்சிகொண்டு தவழ்ந்தோடி அவர்களிடம் செல்கின்றதாம். அந்தப் பூவனைய மகவினை வாரியணைத்து உச்சிமுகர்ந்து, அவனை முகத்தோடு சேர்த்து அணைத்துக் கொள்கிறார்கள் அவர்கள். சீராட்டிப் பாராட்டிக் கொஞ்சி முத்தமிடுகிறார்கள். “அம்மா, அத்தா,” என மழலைச்சொல் பேச்சினைச் செவிமடுத்து உள்ளம் பூரிக்கின்றனராம்.

எதற்குமே ஒப்பாகாத (தன்னேரில்லா) அவனுடைய அழகான நெற்றியில் திருநீற்றினைப்பூசி, அழகான திலகத்தினையும் இடுகின்றனர். இன்னொருத்தி அவன் விழிகளுக்கு மைதீட்டுகிறாள்.

“சுவர்க்கத்தில் வாழ்பவனே! மேலாகத்தானே! (சுவர்க்கத்தை அளிப்பவனே எனவும் பொருள் கொள்ளலாம்)! தேவர்கள் தொழுதேத்தும் தேவசேனாபதியே வருவாய்! பெருமை பொருந்திய திருமாலின் மருமகனே வருவாயாக!” என்றெல்லாம் முருகனைக் கொஞ்சி அழைக்கின்றனர்.

தெய்வத்தைக் குழந்தையாக்கிக் கொஞ்சி அழைத்து அலங்காரமும் செய்து கண்டு களிக்க என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்? நாம் பாடலிலாவது அந்த உணர்வினைப் பெற்று மகிழலாமல்லவா?

பொன்னே வருக பொன்னரைஞாண் பூட்ட வருக சிறுசதங்கை
புனைய வருக மணிப்பதக்கம் பூண வருக தவழ்ந்தோடி
முன்னே வருக செவிலியர்கண் முகத்தோ டணைத்துச் சீராட்டி
முத்த மிடற்கு வருகவெதிர் மொழிகண் மழலை சொலவருக
தன்னே ரில்லா நுதற்றிலகந் தரிக்க வருக விழியினின்மை
சாத்த வருக மேலாகத் தானே வருக தேவர்தொழு
மன்னே வருக மாமாலின் மருகா வருக வருகவே
வளஞ்சேர் பழனிச் சிவகிரிவாழ் வடிவேல் முருகா வருகவே.

(பழனிப் பிள்ளைத்தமிழ்- சின்னப்ப நாயக்கர்- வருகைப்பருவம்)

முந்தைய பாடலைப்போலவே இதிலும் வருகைப்பருவத்தில், முத்தமிடும் நிகழ்வும் போற்றியுரைக்கப்படுகின்றது. ‘தவழ்ந்தோடி வருக,’ எனுங்கால், செங்கீரையாடும் பருவமும் சுட்டப்படுகின்றதல்லவா? மிகவும் இனிமையான பாடல். சீர்காழி திரு. கோவிந்தராஜன் அவர்கள் பக்தி பெருகும் குரலில் மிக இனிமையாகப் பாடியுள்ளார்.

மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}

*************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *