பவள சங்கரி

தலையங்கம்

துணை ஆளுநராக இருக்கும் உர்ஜித் பட்டேல் அவர்கள் தற்போதைய ஆளுநர் ரகுராம் ராஜன் அவர்களைத் தொடர்ந்து ஆளுநராகப் பதவியேற்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன் 10 உதவி ஆளுநர்கள் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 52 வயதான பட்டேல் அவர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள். ஒருவருக்கு பதவிப் பொறுப்புகள் கொடுக்கும்போது அதிகப்படியான ஆண்டுகள் பொறுப்புகள் கொடுத்தால் அவர்களுடைய பணியை மேலும் சிறப்பாகச் செயல்பட வாய்ப்பளிக்கும். குறுகிய காலங்களில் புதிய பொறுப்புகளில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு பொருளாதாரத்தை நிலைப்படுத்த போதிய காலஅவகாசம் இருக்காது. எனினும் இந்நிலையிலும் இவர்தம் ஆளுமையில் இந்தியப் பொருளாதாரமும் சிறப்புப் பெறும் என்று நம்புவோம்.

மக்களவையிலும் மாநிலங்கள் அவையிலும் ஜி.எஸ்.டி மாற்றத்திற்கான அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. இனி இந்த சட்டத்தை 11 மாநிலங்களில் உள்ள சட்ட மன்றங்கள் அங்கீகரித்தால் போதுமானது. இதற்கான பணிகள் துவக்கப்பட்டுவிட்டன. இனி இது சட்டமாகிவிடும். மத்திய மாநில அரசுகள் இதன் மூலம் கிடைக்கக்கூடிய வருவாயை பிரித்துக்கொள்ளவேண்டியது. இந்தப் புரிந்துணர்வுகளை தமிழ்நாடு மட்டும் ஏற்றுக்கொள்ளவில்லை. பாராளுமன்றத்திலும், மாநிலங்கள் அவையிலும் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளன. மத்திய மாநில அரசுகள் இந்த ஜி.எஸ்.டி மூலம் கிடைக்கக்கூடிய வருவாயைப் பிரித்துக்கொள்வதில்தான் புரிந்துணர்வு ஏற்படுத்திக்கொண்டுள்ளதாக அறியமுடிகிறது. ஆனால் இந்த சட்டத்தால் மக்களுக்கு என்ன பயன் என்று இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. மற்ற நாடுகளில் இந்த ஜி.எஸ்.டி வரிவிதிப்பு 6 சதவிகிதம் மட்டுமே உள்ளது. ஆனால் நம் நாட்டில் 18 முதல் 25 சதவிகிதம் வரை வரிவிதிப்பு இருக்கும் என்று அறியமுடிகிறது.

பெட்ரோலியப் பொருட்களுக்கு இந்த ஒருமுனை வரிவிதிப்பு பொருந்துமா? பொருந்தும் என்றால் அது எத்தனை சதவிகிதம் இருக்கும்? தங்கத்திற்கு 1 சதவிகிதம் வரிவிதிப்பிற்கு மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தினர். தங்கம் மற்றும் தங்க ஆபரணங்கள், வெள்ளி மற்றும் அதன் ஆபரணங்கள், வைர ஆபரணங்கள் போன்றவற்றிற்கு தனித்தனியான வரிவிதிப்புகள் இருக்குமா? மருத்துவத்திற்குப் பயன்படுத்தக்கூடிய வெள்ளிக்கு வரிவிதிப்பு அளிக்கப்படுமா? மிக அதிகபட்ச வேலைவாய்ப்பை அளிக்கக்கூடிய பருத்தி, நூல் மற்றும் ஆடை தயாரிப்பிற்கு எத்தனை சதவிகித வரிவிதிப்பு இருக்கும்? சிட்டா நூலுக்கு வரிவிலக்கு தொடருமா? போக்குவரத்துத் துறை இந்த ஜி.எஸ்.டி வரிவிதிப்பிற்கு உட்படுத்தப்படுமா? நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ வரிவிதிப்பினால் இவ்விரு துறைகளும் அழியும் அபாயத்தில் உள்ளன. ஆடுபுலி ஆட்டத்தில் உள்ளதுபோல் அரசு புலியாகவும், பொது மக்கள் ஆடுகளாகவும் உள்ளனர். தெளிவற்ற சிந்தனைகளே இருப்பதாகத் தெளிவாகத் தெரிகிறது. ஒரு சட்டம் கொண்டு வருவதற்கு முன்பே இச்சட்டத்தைப் பற்றிய தெளிவானக் கருத்துகள் மக்கள் மன்றத்தில் ஏன் வைக்கப்படவில்லை? தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இதைப்பற்றிய விளக்கங்களைப் பெறமுடியுமா? இதுபோன்ற எண்ணற்ற வினாக்கள் மக்கள் மனதில் உள்ளன.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *