க. பாலசுப்பிரமணியன்

lord-murugan-BC49_l

21

போற்றுதும் போற்றுதும் செந்தூரான் சேவடிகள்

போற்றுதும் போற்றுதும் தணிகையான் தாள்கள்

போற்றுதும் போற்றுதும் பரங்குன்றத்துப் பாதங்கள்!

போற்றுதும் பழனிவாழ் கருணையினை !\

22

கருணைக்குக் கந்தா !  காத்திடக் கடம்பா !

கலியினைத் தீர்த்திடும் கயிலையின் மைந்தா !

காவடி தூக்கினேன்  கைகளைக்  கூப்பினேன்

கொடியுடன் வருவாய் குமரா !

23

குமரனோ ? கிழவனோ? துடித்தது உள்ளம்

கொடியிடிடை வள்ளியின் காதல் நெஞ்சம்

கோலங்கள் மாற்றியே தினைவனம் வந்தாய்

கோடிகள் தந்திடும் குபேரா !

24

குபேரனின் பொருளும் கோதையின் அருளும்

குறைவில்லா மனமும் குறைவின்றித் தருவாய்

குன்றினில் அமர்ந்தே  குறைகள் தீர்த்திடும்

குமரா! குணக் குன்றே !

25

குன்றினைத் தேடிடும் அடியவர் கூட்டம்

குடங்களில் பாலினைச் சுமந்தே கூடும்

காவடி தூக்கியே ஆடிடும் மனங்கள்

காத்திடும் ஓமெனும் ஆதியே !

26

ஆதியும் அந்தமும் உன்னிரு விழியே !

அகிலமும் தேடிடும் உன்னிரு அடியே !

அணையா விளக்கே! அன்பே! அருளே!

ஆருயிர் தேடிடும் அமுதே!

27

அமுதினும் இனிய தமிழின் தலைவா  !

அழகா! அறிவே! ஐங்கரன் இளையனே!

அன்பின் அகரமே! அருளின் சிகரமே!

அருள்வாய் நித்தம் அமைதியே !

28

அமைதியைத் தேடிடும் அடியவர் நெஞ்சம்

சுமைகளை விலக்கியே சுகமாய் வாழ்ந்திட

இமைகள் காக்கும் விழிகள் போலே

இன்னல்கள் இனிதே மாற்றிடு !

29

மாற்றியே உருக்கொண்ட மாயவான் சூரனை

கூரிட்ட பாதியில் குதித்தது மயிலும் :

கூவிட்ட சேவலைக் கொடியினில் கொண்டே

குவலயம் காக்கும் குமரா !

30

குமரனை நினைத்ததும் குறைகள் நீங்கிடும்

குலங்கள் தழைத்து ஊழ்வினை விலகிடும்

குறையின்றி வாழ்வில் நலமே பெருகிடும்

குறவள்ளிக் காதலனே சரணம் !

சரணம்

சரணமென்று சொல்லியே சன்னதிக்கு வந்தவரின்

கரணமிடும் வாழ்வோடு மரணத்தையும் நீக்கியே

தருணத்திலே காத்துத் தன்னருளைப் பொழிகின்ற

வருணனே! வணங்குகின்றேன் சரணமென்றே!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *