மணி முத்து

அதிகாலை 6மணி, ஒருவழியாக அடித்துப்பிடித்து சன்னலோர இருக்கையில் அமர்ந்து விட்டேன். அதிகாலை வேளையை ரசித்தப்படி பயணித்துக் கொண்டிருந்தேன் சுற்றுச்சூழலையும் மறந்து நானும் ஒரு பயணியாக. என்னுடனே இயற்கையும் பயணித்துக் கொண்டிருந்தது என்னைவிட வேகமாக பின்னோக்கி.

அப்போதுதான், அந்த சத்தம் என்னை மட்டுமல்ல பேருந்திலிருந்த எல்லோரையும் நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது. திடீரென அந்த தனியார் பேருந்து வேகமாக ஒரு திருப்பத்தில் திரும்ப, ஓரமாக வந்த இரு சக்கர மோட்டார் வாகனத்தைக் கவனிக்காமல் அடித்துத் தூக்கியது.

ஒருவரை இரத்தக்காயத்துடன் பார்த்தபோதுதான், என்னுள் இருந்த தைரியசாலி காணாமல் போனதை முதன் முதலில் உணர்ந்தேன்.

அதைவிட அதிர்ச்சி என்னவென்றால், ஓட்டுநர் சட்டையை மாற்றிக்கொண்டு அவசரமாக இறங்கி ஒடியது. ஒருவேளை அவரும், என்னைப்போலத்தானோ என்னவோ அல்லது மாட்டிக் கொள்வோம் என்ற பயமா, எதுவான போதிலும் அது எனக்கு சரியாகப் படவில்லை.

பேருந்திலிருந்த ஒருசில பயணிகள் அந்த இளைஞனுக்கு உதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, மனிதநேயம் இன்னும் நம் உலகில் வாழ்கிற உண்மை புரிந்தது. மற்ற பயணிகள் எல்லாம் அடுத்த பேருந்துக்காக காத்திருக்கத் தொடங்கினர்.

அது நெடுஞ்சாலை என்பதால், வந்த எல்லாப் பேருந்துகளுமே அடைத்தபடி வர, மூன்று மணிநேர தாமதத்திற்குப் பிறகு இறுதி ஆளாக ஒரு பேருந்தில் ஏறி கல்லூரிக்குச் சென்றேன்.

அன்றைய வகுப்பு ஆய்வரங்கில் சொதப்பியதும், முக்கியமான வகுப்பை தாமதமாகச் சென்று தவறவிட்டதும், என எதுவுமே என்னில் பதியவில்லை. காலை நிகழ்வு, அந்த ஓட்டுநர் அப்படி பொறுப்பில்லாமல் சென்றது, அடிபட்டவருக்கு என்ன ஆனதோ என்று எல்லா நினைவுகளும் என்னைத் தூங்கவிடமால் செய்தது.

அடுத்தநாள் விடியும் வரை காத்திருந்து அனைத்து நாளிதழ்களையும் புரட்டினேன் கடவுளை வேண்டியபடி, எங்கேனும் அந்த செய்தி இருக்கிறதாவென்று, ஆனால் அப்படி எதுவும் கண்ணில் படவில்லை. அதுவே ஒரு பொய்யான திருப்தி எனக்கு, அந்த இளைஞனுக்கு எதுவும் ஆகவில்லை என.

லேசாக மன ஆறுதல் அடைய, நாளிதழை மூடியபோது, அக்கா மகன் “Slow and Steady win the Race” என்பதன் பொருள் கேட்டான், அவனுடைய கன்னத்தில் முத்தமிட்டு, தூக்கி மடியில் வைத்துக்கொண்டு, முயல், ஆமை கதையைச் சொல்லத் தொடங்கினேன். அவனுக்கு மட்டுமல்ல, எனக்கும் தான். ஏனென்றால், என் அகராதியில் கூட நிதானம் என்ற இடம் அதுவரை வெறுமையாய்தான் இருந்தது.

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “நிதானம் என்பது நிழலாய்!

  1. தானத்திலும் .சிறந்தது நிதானம். மின்னல் வேக கதையயை படைத்த மணிமுத்துக்கு பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *