-செண்பக ஜெகதீசன்

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.    (திருக்குறள்-471:வலியறிதல்) 

புதுக் கவிதையில்…

தன் வலிமை,
எதிராளியின் வலிமை
இயற்றும் செயலின் வலிமை,
இருவருக்கும் துணைநிற்போர் வலிமை
எல்லாமறிந்து செயல்பட்டால்,
இல்லையென்றும் தோல்வி…! 

குறும்பாவில்…

செயல் வலிமை, சேர்ந்தோர் வலிமை,
தன் வலிமை, எதிரி வலிமை
தெரிந்து செயல்படின் வெற்றியே…! 

மரபுக் கவிதையில்…

செய்யும் செயலைச் செய்யுமுன்னே
     –செயலின் வலிமை அறியவேண்டும்,
செய்வோர் தம்வலி அறிவதோடு
   –செயலில் எதிரி வலிமையையும்
மெய்யாய்த் தெரிந்து கொள்ளவேண்டும்,
     –மேலும் இவர்கள் இருவருக்கும்
மெய்த்துணை வலிமையும் அறிந்தபின்னே
–முயன்றால் செயல்தரும் முழுவெற்றியே…! 

லிமரைக்கூ…

தெரிந்திடு தெளிவாய்ச் செயலைப் பற்றியே,
தன்வலிமை, எதிரியுடன், இருவர்க்கும் துணைவலிமை
எல்லாமறிந்து செயல்பட்டால் எதிலும் வெற்றியே…! 

கிராமிய பாணியில்…

செயல்படு செயல்படு
செயலத்தெரிஞ்சி செயல்படு,
தனக்கவலிமயும் எதிரிவலிமயும்
தெரிஞ்சபின்னே செயல்படு…
ரெண்டுபேருக்கும் தொணயாத்தான்
வாறவர்வலிமயும் அறிஞ்சபின்னே
எறங்கி நீயும் செயல்படு
எதுலயும்செயிக்கலாம் செயல்படு…
செயல்படு செயல்படு
செயலத்தெரிஞ்சி செயல்படு,
வலிமயறிஞ்சிச் செயல்படு…!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *