-மேகலா இராமமூர்த்தி

இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான புகைப்படத்தை எடுத்தவர் நம் வல்லமை ப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். வல்லமை இதழாசிரியரின் விருப்பத்திற்கிணங்க இப்படத்தை அவர் போட்டிக்கு அளித்துள்ளார். அவருக்கு நம் நன்றி உரித்தாகுக!

grandpa and child

அன்புக்கரம் நீட்டி ஆசையாய் அழைக்கும் பாட்டனாரை விழிவிரிய நோக்கும் இந்த மழலையின் மதிவதனம் நம் மனம் மயக்குகின்றது!

”தளர்நடை போடும் தளிரே…! உன் அருகிலிருக்கும் பாட்டனாரும் (வயதாகித்) தளர்நடை போடுபவரே…அந்த உறவுக்குக் கைகொடு; அவர் அன்புக்கு உனைக்கொடு!” என்று அக்குழந்தையிடம் கூறத்தோன்றுகிறது நமக்கு.

இக்கனிமழலையைக் கண்டு, கற்கண்டுக் கவி வடித்திருப்பர் நம் கவிஞர்கள். அவற்றைச் சுவைத்து வருவோம்!

”குழந்தாய்! நீ தளர்நடை பயிலும் பாதை மலர்ப்படுக்கை அன்று; அங்கே முட்களின் அணிவகுப்பே அதிகம். அந்த முட்கள் உன் பிஞ்சுப் பாதத்தைப் பதம் பார்க்காதிருக்க வேண்டுமே…!” என்று கவலையோடு காவலிருக்கும் பாட்டனாரைப் பார்க்கிறோம் திருமதி. ராதாவின் பாவில்.

ஆனந்தம் வழிகிறது கண்ணீராய் கன்னத்தில்
அடியெடுத்து நீ தளிர் நடை பயிலும் போது
அதே சமயம் பதட்டமும் வருகிறதுஉனது
அந்தத் தளிர் நடை ஓட்டத்தின் வேகத்தைக் கண்டு!

இளம் கன்று போல் துள்ளி ஓடுகிறாய்
இன்னமும் பயம் உன்னைத் தீண்டவில்லை
நீ நன்றாக நடை பயிலும் வரைத் தினமும்
நான் நிழலாகத் தொடருவேன் உன்னை!

பாதைகள் ரோஜாப் படுக்கை அல்ல
பதம் பார்க்கும் முள்ளும்முண்டு அங்கு
பயணித்துப் பாடம் கற்றவன் நான்
பக்குவமாய் எடுத்து உரைக்க நானுள்ளேன்!

என் கை நீளுகிறது இன்று பாசத்துடன் உனக்காக
உன் கை நீளும் அன்றொரு நாள் எனக்காகஎனும்
நம்பிக்கையில் நாளை நகர்த்துகிறேன்இந்த
நம்பிக்கை நான் மட்டும் கூறவில்லைஇது
நான்மறை தீர்ப்பும் கூட…!
 

***

’மகன்கள் தம்மை மதியாது செய்யும் தவறுகளைப் பேரப்பிள்ளைகளாலேயே மறக்கின்றனர் முதியோர்’ என்ற வாழ்க்கை நடைமுறையை எளிமையாய்ச் சொல்லும் கவிதையைத் தந்திருக்கிறார் திரு. ரா. பார்த்தசாரதி.

 தந்தையின்  தந்தையானவரே  தாத்தா ஆவார்
 பேரனின் செயல் கண்டு பெருமையடைவார்
 பேரனை அழைத்துக்கொண்டு பூங்கா செல்கிறார்,
அங்கே பல விளையாட்டுக்களைக் காண்பிக்கின்றார்

பேரனிடம் தனது முதுமையை இளமையாக்குகின்றார்
தவறி விழுந்திடுவானோ என்று கைகாட்டி நிறுத்துகின்றார்
உன் தந்தை என் சொல் மதியாமல் போகின்றார்
 நீயாவது என் சொல்லைக் கேள் எனக் கைநீட்டுகின்றார்
[…]
பிள்ளைகள் செய்யும் தவறுகளைப் பேரனால் மறக்கின்றார்
தன் வம்சாவளியினைத் தாங்கிச் செல்பவன் என நினைக்கின்றார்!
முதுமையில் பிள்ளையைவிடப் பேரனிடத்தில் அன்பு அதிகம்
 பிள்ளைகள் வெறுத்தாலும், பேரனைப் போற்றும் தாத்தாக்களே அதிகம் 

***

”பழுத்த இலைகளாகிவிட்ட முதிய பெற்றோரிடம், பச்சை இலைகளான பிள்ளைகள் பாசம்காட்ட யோசிக்கும்போது, தளிர்க்கரம் நீட்டி அம்முதியோர் மனத்தில் பாசத்தைத் துளிர்க்கச் செய்பவர்கள் பேரக் குழந்தைகளே” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

பச்சை இலைகள் பார்க்காத
பழுத்த இலைகள் பாசத்துடன்
இச்சை கொண்டே ஏக்கத்தொடு
இளைய தளிரைப் பார்த்திருக்கும்,
நிச்சய மில்லாப் புவிவாழ்வில்
நினைக்க மறந்த பிள்ளைக்குத்
துச்ச மான தந்தையுமே
தொடர்வார் பாசம் பேரனிடமே…!

 ***

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்ட பெற்றோரின் வலி இக்கவிதைகளில் ஆழமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதைக் காண்கிறேன். 

இனி, இந்த வாரத்தின் பாராட்டுக்குரிய கவிதை நம் பார்வைக்கு… 

தொடரும் இனிய தலைமுறை
பெயர் சொல்லும் பெயரன்(பேரன்)
நம் பெயரை வைத்துக்கொள்ளும் பெயரன்
பெருமை பேசும் பேத்தி
கூடிவாழும் குலத்தின் குலக்குறியீடு
மகனுக்கு நடைபயில்வித்த கால்களுக்கு
நடை தளர்ந்த வயதில்
நடைவண்டிகளாய்ப் பேரன்கள்
ஓடியாடும் சிறுபிள்ளையின் பேச்சு
ஒடிந்த மனதிற்கு ஒத்தடம் போடும்
[…]
தலையெடுக்கும் தலைமுறையினரைத்
தடத்தில் அழைத்துச்செல்லும் கரங்களாக
ஆச்சிதாத்தாஅய்யாஅப்பத்தாஆயா
பாட்டிபாட்டையா…. மாமை
விரல் பிடித்து வழிகாட்டும் பருவம் முதிர்ந்தபின்
தாவி ஓடும் இளையதலைமுறையைத்
தன் பாசவேர்களால் கட்டிப்போடுவார்
கைநீட்டிக் கதைபேசும் மழலைகளை
கைகாட்டி வழிநடத்துவார்
ஒவ்வொரு வீட்டிலும் வாழும் குலதெய்வங்கள்
நம் பெற்றோரும்
பெற்றோரின் பெற்றோரும்
ஆலமரங்களாய் முன்னைய தலைமுறையினர்
ஆதாரமாய் நம்மைக் காப்பர்.

”தாவி ஓடும் இளைய தலைமுறையைத் தம் பாசவேர்களால் வீழாது காப்போர் பெற்றோரும், பாட்டன்மார்களும், அவர்களையொத்த பிற உறவுகளுமே! கைநீட்டிக் கதைபேசும் மழலைகளைக் கைகாட்டி வழிநடத்தும் வித்தகர்கள் அவர்கள்” என்று முதுமையைப் போற்றும் புதுமைக் கவிதையிது! இதனை இயற்றியிருக்கும் முனைவர். மா. பத்மபிரியாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுசெய்கிறேன். பாராட்டுக்கள்!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 78-இன் முடிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *