மீ.விசுவநாதன்

தென்பொதிகை மலைத்தொடரில் தெரியும் அந்த
தெய்வீக அழகினிலே சொக்கிப் போவேன் !
முன்பார்த்த இடங்கள்தான் என்ற போதும்
முகம்சுளிக்கத் தோன்றாது முன்னே நிற்பேன் !
சின்னதானப் பறவையெனப் பறந்து அங்கே
சிலநொடிகள் தவமிருந்து மறந்து போவேன் !
முன்னதானப் பிறப்பெல்லாம் முன்னே வந்து
முகம்தடவி முத்தமிட மகிழ்ந்தி ருப்பேன் !

பிறப்பென்றும் இறப்பென்றும் இருந்த போதும்
பெரியதொரு கவலைகளில் கரைய மாட்டேன்
சிறப்பெல்லாம் இயற்கைவளக் கொடைதான் என்னும்
சிந்தனையில் இருக்கின்ற பயிற்சி பெற்றேன் !
அறத்தொடு வாழுகின்ற விலங்கு பார்த்து
அதனிடந்தான் அன்பினையே கற்று வந்தேன் !
புறத்தோடு காணுகின்ற பொலிவைப் பார்த்து
போய்விழுந்து துன்பத்தில் சிக்க மாட்டேன் !

சித்தர்கள் இன்றுமிங்கே இருக்கி றார்கள்
சிருங்கேரி பீடம்கூட இதில்தா னுண்டு !
பித்தரெனத் திரிகின்ற பேர்க(ள்) உண்டு !
பேசாம(ல்) இருக்கின்ற முக்த ருண்டு !
புத்தினிலே இருக்கின்ற பாம்பைப் போல
பொழுதெல்லாம் குகையிருக்கும் யோகி கூட
சத்தியமாய் வாழ்கின்ற பொதிகை தன்னை
தப்பாது நினைப்பதுவே தர்மம் என்பேன்.

பெருகிவரும் அருவியெனக் கவிதை பொங்க
பிள்ளையென இருக்கையிலே பாப நாச
அருவியிலே குளித்தபடி வேண்டிக் கொள்வேன் !
அடுத்தகணம் வாய்முணுத்தே தன்னை மறப்பேன்
உருவிவிழும் வான்மழையாய் உள்ளே மெல்ல
ஒளிமிகுந்த வார்த்தைகளால் கவிதை கேட்பேன் !
கருவியிவன் மூலமாக அந்தக் கலைஞன்
கடகடெனச் சொல்வதாக நம்பு கின்றேன் !

(09.09.2016 13.15 pm)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஊக்க சக்தி

  1. மிக அருமை மற்றும் உண்மை. சமீபத்தில் அகஸ்தியர் அருவியில் குளித்து பொதிகை மலை அழகை ரசித்து விட்டு திரும்பினேன் சென்னைக்கு. புத்துணர்வை உணர்ந்தேன். நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *