-மேகலா இராமமூர்த்தி

இவ்வாரத்தின் போட்டிப் புகைப்படத்தை எடுத்துத் தந்திருக்கும் திருமிகு. ஷாமினிக்கும், அதனைத் தேர்வுசெய்திருக்கும் வல்லமை ஃபிளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் முதற்கண் நம் நன்றி!

man-with-hand-on-head

சிரத்தின்மீது குவிந்திருக்கும் கரங்கள் இம்மனிதரின் முகத்தில் கவிந்திருக்கும் கவலையின் பிரதிபலிப்பாய் இருக்குமோ? 

நமக்கேன் அந்தக் கவலை? புகைப்பட மனிதரின் அகத்தைத் திறந்துகாட்ட நம் கவிஞர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள்! ஆதலால், அப்பொறுப்பை அவர்களிடமே விட்டுவிடலாம்!

***

என்ன தப்பு நிகழ்ந்திருந்தாலும் தலைமீது கைவைக்காதே தோழா! கடல் அலையெனக் கவலைகள் ஆர்ப்பரித்து வரும்போதும் நம்பிக்கையொன்றே தெப்பமாய் உன்னைக் கரைசேர்க்கும்!” என்று துணிவூட்டுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

கப்பல் மூழ்கிப் போனாலும்
கடலாய்த் துன்பம் வந்தாலும்,
எப்பவும் எதற்கும் சோர்ந்திடாதே
எல்லாம் போய்விடும் கடலலைபோல்,
தப்பே நடந்து போனாலும்
தலையில் கைகள் வைக்கவேண்டாம்,
தெப்பமாய் உதவிடும் நம்பிக்கை
துணிவுடன் செயல்படு வென்றிடவே…!

***

தம்பி! உன் கைகள் தலையைத் தாங்கிப்பிடித்திருப்பது எதற்காக? கப்பல் கவிழ்ந்ததாலா…இல்லைத் தலைநோவாலா? காரணம் ஏதாகிலும் இருக்கட்டும்! கவலையை விடு; நம்பிக்கையை விடாதே! என்பது திரு. ரா. பார்த்தசாரதியின் அறிவுரை!

கப்பல் மூழ்கியது போல் தலையில் இரு கைகள் வைத்தாயோ
தலை
வலிக்கின்றது து என இரு கைகள் வைக்கின்றாயோ
தலையில்
இருகை வைத்து எதை நோக்குகின்றாயோ
தலையில்
இருகை வைப்பது நல்லது அல்ல என்பார் சான்றோர்
உன்
இரு கைக்கொண்டு,நம்பிக்கையுடன்  உழைத்தாலே  போதும்
கைகளும்
, கால்களும் நமக்கு  தருமே பெரும் பதவி
அதில்
காணும் திறமைதான் நமது செல்வம்!
 

***

”நீந்திய சிறுவனை இரக்கமின்றி அள்ளிச்சென்றது கடல்; துள்ளிச்சென்று நான் காக்கத் தவறியதால் வென்றது விதி!” என்று தன்னையே நொந்துகொள்ளும் மனிதன் இவன் என்கிறார் திருமதி. ராதா.

தன்னம்பிக்கை தலை தூக்கினால்
கொக்கரிக்கும் அலைகள்அங்கு
கொஞ்சி விளையாடிய சிறுவன்

காப்பாற்ற நினைக்க
என் வீரத்தில் நீச்சலில்
நான் வென்ற பதக்கத்தில்
அசையா நம்பிக்கை

தாவி குதித்து நீந்த முயல
நீண்டது என் நீச்சல் நேரம்
கண் இமைக்கும் நேரத்தில்
கடல் காலனுக்கு அவனை தாரை வார்க்க

ஐய்யோ
காணாமல் போனான் சிறுவன்
வென்றது கடல்
வெந்து தோற்றேன் நான்

என்னால் முடியும் என்பது தன்னம்பிக்கை
என்னால் தான் முடியும் என்பது அகம் பாவம்
உண்மை உறுத்துகிறதுஇனி
உணர்ந்தும் பயனில்லை

நான் கொண்டது தன்னம்பிக்கையா இல்லை
அகம் பாவமா…….
ஆனால் இது நிஜம்..
காப்பாற்றுவேன் என்ற நிஜம்
நிழலாக நெஞ்சை பிளக்க
அலையை தள்ளிய கைகள்என்
தலையை தஞ்சமடைகிறது தற்போது

 *** 

புறமுதுகிட்டவன் புறவுலகை வென்றதில்லை; விறலோடு புறப்படு; வெற்றியை வசப்படுத்து! என்று துவண்ட நெஞ்சுக்குத் தெம்பூட்டுகின்றார் முனைவர் மா. பத்மபிரியா. 

விரல்கள் பத்தும் மூலதனம்
கரம் கோத்துச் சிரம் சேர்க்காதே
[…]
விரலின் விந்தையால்
வீணை தீண்டினால் ராகம் பெறலாம்
உளி எடுத்தால் சிலை செதுக்கலாம்
எழுத்தாணி பிடித்தவனும்
பேனாமுனை பிடித்தவனும்
அறியாமை இருளை விரட்டி
அறிவொளியை வித்திட்டனர்
புறமுதுகுகாட்டியவன்
புறஉலகை வென்றதில்லை
உண்மையை நேருக்குநேர் நோக்கு
உள்ளொளி பெருக்கி உன்னதம் பெறுவாய்!

***

”இருகரத்தைச் சிரமேற்றிச் சிந்தித்துக்கொண்டிருப்பதால் கருநாடகம் சிந்தையிரங்கித் தண்ணீர் தந்துவிடப் போவதில்லை. யோசனையை விடுத்துப் புயலெனச் செயலில் இறங்கு! போராட்டத்தில் குதி! வழிபிறக்கும் நீருக்கு!” என்று வீரவுரை பகர்கின்றார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

பற்று பாசத்தால் பரிதவித்து
சுற்றுச் சூழலால் துடிதுடித்து
கற்றதும் பயனில்லையேஎன்று
கதறும்போது
கரங்கள் சிரம்மேல் அமர்வது இயல்பு
வெட்ட வெளிகளில் நின்று யோசித்தல்
நினைவுகளின் மயக்கத்திலிருந்து விடுபடும்

இருகரம் இறக்கு சிரம் தனை விடுத்து
இடையூறுகளை களைந்திட புறப்படு
பொறுப்புடன்கூடும் போராட்டம்
விருப்புடன் ஏற்கப்படும்
கர் நாடகா மனம் இறங்கி நீர் தரும்
கருகும் பயிர்கள் செழிப்புரும்

முடியாப்பொருளும்முடிந்துவிடும்
விடாமுயற்சி செய்வதால்
எடுத்தஎடுப்பு இனிதே முடிய
தொடுத்தே தொடர் தொழில் செய்

***

இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து வருகின்றது…

சுதந்திர தாகம்

ஆயுத மனிதா! நாங்கள்
காயிதப் படகுகள்!
அடிக்கும் புயலில்
துடிக்கும் எமது கொடிகள்!
குப்புறச் சாயும்
பாய்மரம்!
குடியுள்ள சொந்த நாட்டில்
விடுதலை கேட்டுக்
கண்ணீர் விட்டோம்!
குருதி கொட்டினோம்!
ஆடை நீக்கப் பட்டு
மானம் இழந்தார் மங்கையர்,
[…]

தந்தையர் இழந்தோம்!
தாயை இழந்தோம்!
தனையனை இழந்தோம்!
அடே! பாவிகளா!
ஆயுத மில்லா
ஆவி மனிதர் நாங்கள்!
உணவின்றி, உடையின்றி,
உற்றார் உறவினர்,
மேற்கூரை இன்றிக்
காயும் வெயிலில் வேகின்றோம்!
ஆயுத மனிதா!
கரம் தூக்கி விட்டேன்!
சுடாதே ! சுடாதே ! சுடாதே என்னை
என்று சொன்னேன் !
செத்தவர் எல்லாம் சுதந்திரம்
பெற்றார் !
சுட்டெனக்கும் நிரந்தரச்
சுதந்திரம் அளித்திடு!

”அடிமை விலங்கை ஒடிக்க விரும்பினால் ஆயுதமேந்திய இந்த விலங்குகள் அனுமதிக்க மறுக்கின்றனவே! மண்ணுக்குச் சுதந்திரம் வேண்டினால் இங்கே கிடைப்பதோ மண்ணைவிட்டு விண்ணுக்கேகும் சுதந்திரம் ஒன்றே! அதையேனும் அளிக்கட்டும் இந்த ஆயுதபாணி!” என்று நொந்த உள்ளத்தோடு சிந்திக்கும் மனிதனைக் காண்கிறோம் திரு. சி. ஜெயபாரதனின் கவிதையில். நெகிழ்வூட்டும் இக்கவிதையைப் படைத்தமைக்காக இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அவரைத் தேர்வு செய்கிறேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 79-இன் முடிவுகள்

  1. 25 ஆண்டு ஈழப்போரில் சிங்களக் கொடுங்கோல் ஆட்சியால் துயர்க்கடலில் துடித்து மூழ்கிய இலட்சக் கணக்கான விடுதலை வீரத் தமிழரின் இடர்ப்பாடுகளைச் சிறிதளவு எடுத்துக் கூறும் எனது கவிதையைத் தேர்வு செய்த திருமிகு மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கு எனது பணிவான நன்றி.

    சி. ஜெயபாரதன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *