கிரேசி மோகன்

———————————————
பயந்த ரதிவசந்தன் பின்தொடர காமன்
உயர்ந்த இமயம் அமைந்த -நயனனுதல்
ஆண்டவன் ஆசிரமம் மாண்டாலும் வெற்றியை
வேண்டியவன் சென்றான் விரைந்து….(146)

சிவத்தோடு சேர்ந்தங்கு சித்தம் ஒருமித்த
தவத்தோர் தரத்தை தகர்க்க -அவித்தைக்(கு)
இசைந்த களத்தை இயற்றுவோன் ஆனான்
வசந்த ருதுவாய் வனத்து….(147)

மாற்றான் மனைவிரும்பும் மூடனால் பத்தினி
ஆற்றாமை கொள்ளும் அவலமாய் -மாற்றத்தால்
விண்முகம் பானு வடக்கேக தென்திசை
தன்முகம் கொண்டாள் துயர்வு….(148)

தளிர்பெண் சிலம்புத் திருவடி பட்டு
துளிர்க்கும் அசோகமரம் திடுமென்(று) -அளித்த
வசந்தத்தால் தன்னியல்பை விட்டு மலர்ந்து
இசைந்ததாம் பூக்கள் இறைத்து….(149)

கொய்தமாம் பூவால் கணைக்கு சிறகமைத்து
செய்திடச்சில் வண்டுகள் சென்றதை -மொய்த்ததைப்
பார்க்கையில் மன்மதன் பேரையப் பாணத்தில்
சேர்க்க அமர்ந்ததாய் சாக்கு….(150)

கனகமாய்க் கொன்றை குவிந்தும் ரசிகர்
மணமற்ற தாலே மறுப்பர் -குணமுற்றும்
கொண்டவனை நான்முகன் கொள்வதில்லை தன்படைப்பில்
கண்டனம்போல் காளிதாசன் கூற்று….(151)….கிரேசி மோகன்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *