தவறின்றித் தமிழ் எழுதுவோமே! -பாகம் 1 முன்னுரை

6

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ , பிரான்சு

எல்லாருக்கும் வணக்கம்.!

தமிழில்தான் எத்தனை எத்தனை தளங்கள் அதில்தான் எத்தனை எத்தனை வளங்கள்!

தனக்கெனத் தனித் தளம் அமைத்துக்கொண்டு தன் படைப்புகளை மட்டுமே வெளியிடுவோர் பலர் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று மடலாடு குழுமங்கள் பலவேறு உண்டு! இவை போதா என்று பல்வேறு சுவை தரும் இணைய தளத் தாளிகைகள் பல நூறு!இணைய தளங்களில் இன்று தமிழ கோலோச்சி வாழ்கின்றது என்றே சொல்லுவதில் தவறில்லை அன்றே!!

நல்ல தமிழ்ப் பயிர் நாளும் விளையும் நிலத்தில்அல்லன செய்யும் களைகள் முளைப்பதும் நன்றோ!கணினியை எடுத்துக் கற்பனைச் சிறகினை விரித்துப் பெரும்பாலும் எல்லாரும் அருமையாகவே தமிழ் எழுதுகின்றனர்.
இருந்தாலும் சில பொழுது ஆங்காங்கே பிழைகள் தலை தூக்குகின்றன! தமிழ்த் தேனில் நஞ்சை வார்க்கின்றன!நண்பர் ஒருவரின் ஆற்றாமையைக் காண்க :

Govindan R govindanr123@gmail.com à tamil_ulagamafficher les détails 13:25 (Il y a 5 heures)

தமிழ் உலகத்தில் வெளி வரும் செய்திகளில்தமிழ்ப் பிழைகள் நிரம்பத் தோன்றுவதைக்காணும் போது தமிழ் மொழியின் அவல நிலையைஅறிய முடிகிறது…………….அன்புடன்செம்மல் ]

இருப்பினும் அவ்வப் போது பிழைகள் தலை தூக்கி வருகின்றன. அவற்றுள் சிலவற்றைச் சுட்டிப் பிழைகளை நீக்கிட வருகிறது இக்கட்டுரை.
அறியாமல் செய்கின்ற தவறுகள் ஏராளம்! இலக்கணம்புரியாமல் வந்து விழும் பிழைகளோ தாராளம்!அறியாமை தவறில்லை ; அறிந்துகொள்ள முயலாமைதான் பெருந்தவறு!

பிழை களைந்து நல்ல தமிழ் எழுதுவோம் வாரீர்!அதற்காகவே, ‘தவறின்றித் தமிழ் எழுதுவோமே ‘ என்ற இக்கட்டுரை பாரீர்!
‘ நல்ல தமிழ் எழுதுவது எப்படி?’ என்றசொல்லரிய நூலொன்றை அறுபதுகளில் வெளியிட்டார்பேராசிரியர் அ.கி. பரந்தாமனார்.. அதன்பின், புதுவை இலக்கணப் புலி முனைவர் இரா.திருமுருகன்,  ‘இலக்கணம்’  எனத் தலைப்பிட்டுச் சில நூல்கள் தந்தார். இணைய தளத்திலும் இலக்கணம் பற்றிப் பலர் எழுதக் காண்கிறேன்.

1973 ஆம் ஆண்டு (புதுச்சேரி மாநிலம்) காரைக்கால் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் புதுவைக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்கள் மாநாடு நடந்தது. அப்போது,  புதுவைத் தாகூர் கலைக் கல்லூரியில் பணி ஆற்றிக்கொண்டிருந்த அடியேன் ‘தாளிகைத் தமிழில் தவறான சொற்றொடர் அமைப்புகள்’ என்ற தலைப்பில் ஆராய்ச்சிக் கட்டுரை வழங்கினேன். அந்த மாநாட்டின் தலை சிறந்த படைப்பாகப் பாராட்டு பெற்றது அது .தாளிகைத் தமிழில் யான் கண்ட பிழைகளைத் தமிழிலக்கண ,  மொழியியல் அடிப்படைகளில் ஆய்ந்து அக்கட்டுரையில் விரிவாக விளக்கி இருந்தேன்.

அது போல ஆய்ந்து, பொதுவாகத் தமிழில் களையாக விளையும் பிழைகளைச் சுட்டிக் காட்டி எழுத வேண்டும் என்ற வேட்கை இத்தனை ஆண்டுகளாய் என்னுள்ளத்தில் கனன்று கொண்டே இருந்தது.இப்போது உருக்கொண்டு வருகிறது !

இப்படிப் பல்லாண்டுகள் உள்ளுக்குள் உழல்வதும் பின்னர் உருக்கொண்டு வருவதும் வழுவில்லைகால வகையினானே என்று ஆங்கிலக் காவியக் கவிஞன் மில்தன் முன் வழி காட்டி இருக்கிறான் :

‘Since first this subject for heroick songPleas’d me long choosing, and beginning late;’
(Paradise Lost Book IX lines 25-26)

அவனுக்கு உரை எழுதும் உரை ஆசிரியர் ஒருவர், “beginning late : Milton wrote Paradise Lost almost seventeen years after he made his earliest sketches of it,”என்று கூறுகிறார்.

‘ஆயிரம் முகத்தான் அகன்றது ஆயினும் பாயிரம் இன்றேல் பனுவல் இல்லை’ என நன்னூல் ஓதும்.  என்னுரையேனும் முன்னுரை தேவை என அது கூறும்.எனவேதான் என்னுரையை இம்முன்னுரையைத் தந்தேன்.

இலக்கணம் என்றதும் விளக்கெண்ணை குடித்தது போல் ஓடவேண்டா! சூத்திரம் கூறி இலக்கணச் சாத்திரம் படிக்க மாட்டேன். உங்களைப் ‘போ’ரடிக்க மாட்டேன், அஞ்சற்க!அஞ்சற்க!!
இனி…

எல்லாருக்கும் வணக்கம்.!’ என்ற என் முதல் சொற்றோடரைக் கவனியுங்கள்.’எல்லோரும்’    ‘எல்லோரும் ‘என்றே எல்லாரும் எழுதியும் பேசியும்  வருகிறோம்.  தொல்காப்பியரும் சரி நன்னூலாரும் சரி திருவள்ளுவரும் சரி,    எல்லா (அஃறிணை), எல்லார், எல்லீர், எல்லம் (உயர்திணை ),  என்றே எழுதிச் செல்கின்றனர்.முன்னேர் எவ்வழி பின்னேர் அவ்வழி ; உலகத்தோடு ஓட்ட ஒழுகல் வேண்டும்.

உலகம் எனபது யார் என்பதை நம் முன்னோர், ‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’ என்று வரையறுத்தனர்.எனவே உயர்ந்தோரானதொல்காப்பியரும் ( ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’)

திருவள்ளுவரும் (‘இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரைஎல்லாரும் செய்வர் சிறப்பு.’ – இச்சொல்லை இருமுறை கையாண்டிருப்பதைக் கவனிக்க!)

நன்னூலாரும் (தொல்லை வடிவின எல்லா எழுத்தும்’) எழுதியதை நாமும் பின்பற்றுவதே முறை.’முன்னோர் மொழி பொருளே அன்றி அவர் மொழியும்பொன்னே போல் போற்றுவோம் ‘ எனபது நம் பழந்தமிழர் மரபு. இது போலவே, நல்லார், வல்லார், கல்லார், அல்லார்…என எழுதுவதே சரி.
‘வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன,உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற!(புறம் 57 புலவர் : காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்.)

 

இன்னும் தெளியாத எல்லாருக்கும் நம் முன்னோர் மூதுரைகளில் இருந்து சில வரிகள் :

திருவள்ளுவர் :

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்

செல்வர்க்கே செல்வம் தகைத்து

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்

வல்லறிதல் வேந்தன் தொழில்

அவ்வை :

“கல்லானே யானாலும் கைப்பொருளொன் றுண்டாயின்

எல்லாருஞ் சென்றங் கெதிர்கொள்வர் இல்லானை

இல்லாளும் வேண்டாள்மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்

செல்லா தவன்வாயிற் சொல்.”

நெல்லுக் கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்

புல்லுக்கு மாங்கே பொசியுமாம் -தொல்லுலகில்

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

எல்லார்க்கும் பெய்யும் மழை

வடலூர் இராமலிங்க சுவாமிகளின் திருவருட்பா 4128

‘கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே

காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே

வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே

மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே

நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே

நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே

எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே

என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே’

சங்க இலக்கியத்தில் நல்ல பயிற்சி உடையவர், புறநானூறு 188 ஆம் பாடலின் ஈற்று அடிகள் இரண்டைக் காட்டுவர் :

‘மயக்குறு மக்களை யில்லோர்க்குப்

பயக்குறை யில்லாத் தாம்வாழும் நாளே.’

இங்கே இல்லோர் என்பதற்கு ‘மக்களை இல்லத்திலே உடையவர்கள்’ எனபது பொருள்.

‘மக்களை இல்லார்’ என்றால், மக்கள் இல்லாதவர்கள் என்று பொருளாகிவிடும்.மேலும், நல்லார், கல்லார், இல்லார் .. போன்றவை பெயர்ச் சொற்கள்.
ஆனால், ‘இல்லோர்’ என்பது வினையாலணையும் பெயர். வில்லை உடையவன் வில்லன் ;  சொல்லை உடையவன் சொல்லன் ;

இத்தகைய வினையாலணையும் பெயர்கள் வில்லோன், சொல்லோன்… எனவும் வரும்.
ஆகவேதான் புறநானூற்றில் ‘இல்லோர்’ எனப் பயின்று வந்துள்ளது.

எனவே இனி, ‘எல்லோரையும்’ கைவிட்டு’எல்லாரையும்’ அரவணைப்போமா?
அடுத்து ‘வணக்கம்’.அன்றும் சரி இன்றும் சரி நமக்கு இருப்பது ஒரே ஒரு வணக்கம்தான்.

நம் மொழிக்குள் புகுந்து குழப்பம் செய்யும் ஆங்கிலத்தால் வந்த வினைதான் இன்று நம்மில் பலரும் கூறும், சின்னத் திரை முதல் பெரிய திரை வரை புழங்கும் காலை வணக்கம் (good morning), மதிய வணக்கம் (good afternoon), மாலை வணக்கம் (good evening), இரவு வணக்கம் (good night)  போன்ற  வணக்கங்கள் !

இதனாலேயே நம்மில் பலரும் இன்னுமொரு வேண்டாப் பழக்கத்துக்கு அடிமையாய் ஆகி விட்டார்கள்.வணக்கத்தின் மீது ‘கள்’ளை ஏற்றி வணக்கங்கள் என்று தாரளமாக வழங்குகின்றனர்.

முதலில் இக்‘கள்’ளை அகற்றுவோம்.முப்பொழுதும் எப்பொழுதும் இக்காலமும் எக்காலமும்’வணக்கம்’ ஒன்றையே கூறுவோம் !

நட்பு என்னும் இணையதளத்தில் நண்பர் திருவள்ளுவன் அவர்கள் வணக்கம் பற்றி அருமையாக, எளிமையாக, பெருமையாக விளக்கி உள்ளார்.

அதனைக் காண இங்கே சொடுக்கவும் :

http://www.natpu.in/?p=9299

 

இன்ன பிற தவறுகளைப் பற்றி அடுத்த பகுதியில் காண்போமா?   ___________________________________________________________

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “தவறின்றித் தமிழ் எழுதுவோமே! -பாகம் 1 முன்னுரை

  1. ஆகா, அருமை

    பெஞ்சமின் ஐயாவின் வகுப்பில் முதல் பெஞ்சில்
    அமர்ந்து கொண்டேன்.
    முதல் மதிப்பெண் பெற முயல்வேன்

    அன்புடன்
    தேவ்

  2. பேரன்புசால் பேராசிரியர் அவர்களுக்கு வணக்கமும் நன்றியும். தங்கள் கட்டுரையின் தொடர்புடைய என் எழுதுவோம் தமிழில் என்னும் வலைப்பூ பதிவுகளையும் காண வேண்டுகின்றேன். (http://writeinthamizh.blogspot.com/)
    பிழையின்றி எழுதுவது குறித்த என் உரையை நட்பு இணைய இதழில் கேட்கவும் வேண்டுகின்றேன். (http://www.natpu.in/?p=14549)
    தங்கட்கும் காணும் அனைவருக்கும் நன்றி. இவை தொடர் முயற்சிகள் என்பதையும் தெரிவிக்கின்றேன்.
    அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

  3. பாராட்டுக்கு நன்றி
    ஏனைய தொடர்களையும் படியுங்கள்
    இவற்றில் குறிப்பிட்ட தவறுகளைக் களைந்து
    தவறுகள் இன்றித் தமிழ் எழுத வாழ்த்துகள்.

    அன்புடன்
    பெஞ்சமின்

  4. ஐயா எனக்கு ன ண ந மற்றும் ழ ள ல  மற்றும் ர ற  
    இவற்றை ஏன் எங்கு எதற்காக பயன்படுத்துகிறோம்
    அதற்கான காரணம் தெரியவேண்டும் 

  5. அன்புடையீர்!

    வணக்கம்.!பல ஆண்டுகளுக்குப் பின் கேட்டிருக்கிறீர்கள். மகிழ்ச்சி.நீண்ட கட்டுரையில்தான் விளக்க இயலும். சற்றே பொறுத்தருள்க!.2013 இல் இதயம் திறந்த அறுவை மருத்துவத்தால் படுக்கையில் கிடத்தப்பட்ட யான் இந்த 3 ஆண்டுகளாக இயங்க இயலாமல் தயங்கிக் கிடந்தேன். பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமனாகப் பள்ளி கொண்டவன் சக்கர நாற்காலியில் அமர்ந்து சக்கரத்தாழ்வானாக மாறிப் பின் வேங்கடத்தவனாக நிற்கத் தொடங்கியுள்ளேன்.இந்த 3 ஆண்டுகளில் எழுத்துப் பணி அறவே நின்று போனது; இப்போது தங்கள் வேண்டுதலால் மீண்டும் தொடங்குகிறது. தங்களுக்கு எளியேனின் நன்றி! இறையருள் துணை நிற்கக் குறை ஒன்றும் இல்லை! அன்புடன் பெஞ்சமின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *