மாங்காடு  ஸ்ரீ காமாட்சி அம்மன்

mangadukamakshi1

மங்காத  ஒளிப்பிழம்பே ! மாதவனின் உடன்பிறப்பே !

மலையரசன் குலவிளக்கே ! மாங்காட்டின் தவத்திருவே !

மகேசனின் மனம்கவர்ந்த மாமதுரை மீனாட்சி

மலரடி போற்றுகின்றேன் ! மனமிறங்கி வந்திடுவாய் !

 

செங்கமலம் கரும்பேந்தி நின்றாயே காமாட்சி

சீறிவரும் கங்கைக் கரையினிலே விசாலாட்சி

செவ்விதழ் கிளியேந்தி கைகொடுக்கும் மீனாட்சி

சிந்தையிலே கோலோச்சும் சிவகாமி அரசாட்சி !

 

அழகுக்குப் பொருளாகி அகிலமெல்லாம் காப்பவளே

அகமெல்லாம் உள்ளடக்கி மோனத்தில் முதிர்ந்தவளே!

அசையாத உயிரெல்லாம் ஓடிவரும் ஆடித்தவசினிலே

அருள்சுரக்கும் உனைக்காண ஆனந்த  பைரவியே !

 

ஓரிரவில் நீவந்தாய் உலகாளும் கலைமகளே

ஓரிரவில் நீவந்தாய் உளங்கவர்ந்த திருமகளே

ஓரிரவில் நீவந்தாய்  உமையாள்  மலைமகளே

ஒன்றாக நீயிருக்க இரவெல்லாம் உன்னருளே !

 

பூவாலே உனைப்போற்றப் புன்சிரிப்பால் உளம்கவர்ந்தாய்

பொன்னாலே அலங்கரிக்கப்  பொழுதெல்லாம் முன்னின்றாய் !

பூந்தமிழில் உனைப்பாடப் புலனெல்லாம் உயிர்தந்தாய் !

புரியாத மொழிகேட்டும்  பூரணியே! அருள்சுரந்தாய் !

 

கண்ணுக்குள் நீயிருந்தால் கதிரவனின் ஒளிவருமே !

கற்பனையில் நீயிருந்தால் காவியங்கள் உயிர்பெறுமே !

சொல்லிடையில் நீயிருந்தால் சொந்தங்கள் பிறந்திடுமே !

சுவையெல்லாம் நீயிருந்தால் சுகமான அனுபவமே !

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *