(    எம் .ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா )

 

காரிருக்கு வீடிருக்கு கையினிலும்  பணமிருக்கு

பலபேரின் நட்பிருக்கு பரிசுகளும் குவிந்திருக்கு

என்றாலும் மனத்தளவில் என்னவோ குறையிருக்கு

எதுவென்று தெரியாமல் ஏக்கமே நிறைந்திருக்கு !

 

முதுமைவரும் காரணமா முறுவல்வர மறுப்பதுவா

தனிமைவரும் எனும்நினைப்பு தலைதூக்கி வருவதுவா

ஓடியோடி உழைத்துவாங்கி உள்வீட்டில் சேர்த்ததெலாம்

யாரினிமேல் பார்த்திடுவார் எனுமெண்ணம் எழுவதுவா !

 

பிறந்தநாள் வருவதனை பெரும்பாலும் விரும்பவில்லை

குறைந்தநாள் ஆகிடுமோ எனுமேக்கம் வந்துநிற்கும்

பட்சணங்கள் செய்தாலும் பசிகூட வருவதில்லை

இஷ்டமுடன் அதைச்சுவைக்க இனிப்புநோய் விடுவதில்லை !

 

பிள்ளைகளோ அவர்பாட்டில் பேரர்களோ விளையாட்டில்

மருமக்கள் எமைக்கண்டால் மெளனமாய் சிரித்திடுவார்

எமையொத்த வயதுடையார் இயலாமை காரணத்தால்

ஏங்கித் தவிப்பதனை இன்டர்நெட்டில் பார்த்துநிற்போம் !

 

காலையில் எழுவதற்குக் காரணமும் தெரிவதில்லை

மாலைவந்து விட்டதென மணிக்கூடு காட்டிநிற்கும்

பாயிலே எமக்குமுன்னே நோய்வந்து படுத்துவிடும்

பதறிநாம் துடித்தாலும் பார்த்தபடி சிரித்துநிற்கும் !

 

கலைநிகழ்ச்சி கல்யாணம் காண்பதற்குச் சென்றாலும்

பலபேரும் எம்பக்கம் பார்த்திடவே மாட்டார்கள்

சிலவேளை பார்த்தாலும் திரும்பாமல் சென்றிடுவார்

அதுவே எம்மனநிலையை அடியோடு மாற்றிவிடும் !

 

முதுமைபற்றி நினைத்துவிட்டால்

முகங்கூட மாறிவிடும்

எதுவுமே எங்களுக்கு

எதிரியாய்தான் தெரியும்

உடல்தளர்ந்து போனாலும்

உளம்தளர்ந்து போகாமல்

உளம்நிறைய மகிழ்ச்சிதனை

ஊற்றெடுக்கச் செய்திடுவோம் !

 

எமையொதுக்கி நிற்பவரும்

இந்நிலைக்கு வந்திடுவார்

இலையுதிர்வு நிலையதனை

இயற்கையே கொடுத்திருக்கு

தலைநரைக்கும் பல்லுவிழும்

தளர்வுவந்து தாக்கிவிடும்

அதைத்தவிர்த்து வாழ்ந்துவிடல்

ஆருக்கும் வாய்ப்பதில்லை !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *