-மீனாட்சி பாலகணேஷ்

வடிவுடைப்பெண்ணுக்குப் பலவிதத் தொட்டில்கள்!

pillai1குழந்தையை உறங்கவைக்கத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டுகின்றாள் அன்னை; உடன் நிற்கும் தோழியரும் தாதியரும் பல இன்னிசைப்பாடல்களை இசைக்கின்றனர். மிகவும் உயர்வான தெய்வக்குழந்தை இவள். செல்வந்தர் வீட்டுக் குழந்தை என்றால் கேட்கவா வேண்டும்? அவரவர்கள் தங்கள் பங்கிற்கு ஒரு அழகான தொட்டிலைக் குழந்தை உறங்கப் பரிசாகக் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளனர்! தாதியரும் செவிலியரும் பொன்னாலான ஒருதொட்டிலில் அன்னத்தூவியின் மெத்தையிட்டு, இனிய ஓலியெழுப்பும் சிறுமணிகளையும் அதில்கட்டி குழந்தையைக் கண்வளர்த்துகின்றனர். குழந்தை உறக்கம் கொள்ளாமல் நெளிகிறாள்; புரளுகிறாள்; கண்களைக் கொட்டக்கொட்ட விழித்து நோக்குகிறாள். இவர்களுக்கு இப்போது ஒரு சந்தேகம் எழுகிறது. குழ்ந்தைக்கு இந்தத் தொட்டில் விருப்பமில்லையோ என்னவோ, வேறு தொட்டில் வேண்டுமோ என்று இவர்கள் குழந்தையிடம் (சின்னஞ்சிறிய மதலை- அவளுக்கென்ன தெரியும்?) கேட்கிறார்களாம்:

“சரியை (முறையான ஒழுக்கம்கொண்ட உயர்ந்தோர்), கிரியை (செய்வன திருந்தச்செய்யும் பெரியோர்) இவற்றினைக் கடைப்பிடிப்பவர்களின் இதயம் என்பது உனக்கு ஒரு தொட்டிலாகும்.” அவர்கள் இதயத்தில் நீக்கமற நிறைந்து வாழ்பவள் அன்னை பராசக்தி எனப்பொருள் கொள்ளவேண்டும்.

“யோகம் பயில்வோரின் ஆறாதாரம் எனும் மலர்ப்பூந்தொட்டிலிலும் (ஆறு ஆதாரங்கள்- மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்பனவாம்) கண்வளர்பவளல்லவோ நீ?”

“பெருகும் அறிவினை  முறையாகப் பெற்றுயர்ந்தவர்கள், ‘உள்ளும் புறமும்’ வேறு வேறல்ல என மனவமைதி கொண்டு, குழப்பமடையாது தெளிவான சுத்தத்தொட்டிலில் கிடத்தித் தாலாட்டுவார்கள் உன்னை!” ‘பரம்பொருளை இன்னதென்று அறிவினால் முயன்று உணர்ந்து கொண்டவர்கள் அது உள்ளிலோ, வெளியிலோ எங்கும் உண்டென்று தெளிந்து, அவ்வண்ணம் வேற்றுமை பாராட்டிக் குழப்பமடையாது உள்ள தமது அறிவில் உன்னை இருத்தித் தொழுதேத்துவார்கள்,’ என்பது பொருள்.

“இவர்கள் அனைவருக்குமே உரிமைபூண்ட மகளே! குழந்தாய்! இத்தனை உயர்வான தொட்டில்கள் பல உனக்கு உள்ளன. இருப்பினும் நாங்கள் உன்மீது கொண்ட தாயன்பால், இந்தப் பொற்தொட்டிலை மணிகளால் அலங்கரித்து உனக்காக வைத்துள்ளோம். இதனையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு விளையாடியபடியே கண்ணுறங்குவாய், கிளிபோன்ற மகளே! கருடன் மீது வரும் திருமாலின் சகோதரியே!” என்று ஆசைததும்பப் பாடுகின்றனர்.

யாரிந்தக்குழந்தைப்பெண்? இவள் அரிய பெரிய pillai3பொருள்கள் பலவும் நிறைந்த திருவொற்றியூர் எனும் நகரின் அரசியானவள். அவளுக்கே இத்தாலாட்டு!

இந்த ஈரேழு பதினான்கு உலகங்களையும் பிறப்பித்தவள்; வடிவுடையம்மை எனப்படும் திரிபுரசுந்தரி இவளே! ‘பெண்ணமுதே தாலோ தாலேலோ’ என அன்புபெருகப் பாடுகின்றனர்.

நீலாம்பரி

சரியை கிரியை இயற்றுனர்க டத்த மிதயத்
தொட்டிலினும்
தண்டா யோகத்தவராறா தார மலர்ப்பூந் தொட்டிலினும்
விரியு மறிவை யறிந்தவர்கள் வெளியே யகமே யெனும்விகற்பம்
விரவாச் சுத்தத் தொட்டிலினு மேவித் தினிது தாலாட்டு
முரிய மகளே யாங்களிடு மொளிமா மணிப்பொற் றொட்டிலினு
முவந்து விளையாட் டயர்கிளியே யுவண முயர்த்தோன் சகோதரியே
அரிய பொருள்சே ரொற்றிநக ரரசே தாலோ தாலேலோ
அகில முயிர்த்த வடிவுடைப் பெண்ணமுதே தாலோ தாலேலோ

(ஆதிபுரி வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ்- தாலப்பருவம்)

*********

இந்த அருமையான பிள்ளைத்தமிழ் நூலினை இயற்றிய புலவர் வித்துவான் கனகசபைத் தம்பிரான் ஆவார். இது 19-ம் நூற்றாண்டில் வெளியிடப்பட்டுள்ளது. ஆதிபுரி, திருவொற்றியூர் எனவழைக்கப்படும் திருத்தலத்தில் உறைந்துவிளங்கும் திரிபுரசுந்தரி அம்மையின்மீது பாடப்பெற்றது. இவ்வம்மை வடிவுடையம்மை, வட்டப்பாறை அம்மன் எனவும் அழைக்கப்படுகிறாள். இது சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றாகும். சிவபிரானின் திருநாமங்கள் இங்கு படம்பக்கநாதர், ஒற்றீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர், தியாகேசர், ஆனந்தத்தியாகர் எனப்பலவாம். சுந்தரமூர்த்தி நாயனார் இத்தலத்தில்தான் சங்கிலி நாச்சியாரை மகிழமரத்தடியில் மணந்துகொண்டார்.

*********

pillai2அழகான சிறுமி; பராசக்தி அன்னையே இச்சிறுமியாக அவதரித்துள்ளாள்; இவளை நீராட வேண்டியபடி செவிலித்தாயும் தோழியரும் சேடியரும் ஆடையணிமணிகள், வாசனைச் சுண்ணப்பொடி, மலர்மாலைகள் என அனைத்தையும் ஏந்திநிற்கின்றனர். சிறுகுழந்தைகள் அவ்வளவு எளிதில் நீராட வரமாட்டார்கள். ஏதாவது ஒன்று அவர்கள் சிந்தையைக் கவர்ந்திழுக்க, அதிலேயே முனைப்பாக இருப்பார்கள். தாயார்தான் பார்த்துப்பார்த்து அவர்களுக்கு உணவு அளிப்பதோ, நீராட்டுவதோ, உறங்க வைப்பதையோ செய்வாள்.

இங்கு இவர்கள் விதம்விதமாக நீராடலுக்கு உகந்த பொருட்களை வைத்துக்கொண்டு, சிறுமியான வடிவுடையம்மையை நீராட ஊக்குவிக்கிறார்கள்: என்னவெல்லாம் கொண்டுவந்துள்ளனர் எனப் பட்டியலைப் பார்ப்போமா?

தேன்சொரியும் பலவிதமான வாசமலர்கள்; அவற்றினை அவ்வாறே எடுத்து மலரிதழ்களைத் தேனோடு உதிர்த்துச் சுண்ணமாக்கியுள்ளனர். பொன்போலும் அன்னையின் மென்மையான மேனியில் தேய்த்து நீராட்டத்தான்! பலவிதமான வாசனைப்பொருட்களைச் சேர்த்துச் செய்த களபம் (கஸ்தூரி, சந்தனம், இன்னும்பல) எனும் சுண்ணமும் ஒருத்தி கையில் காத்துக்கிடக்கிறது! கருப்பூரங்கலந்த சுண்ணம் இன்னொருத்தியிடம்; பொன்துகள்களையும் சேர்த்துச் சுண்ணமிடிப்பார்கள் எனவும் அறிகிறோம். இவ்வாறு பலவிதமான வாசனைப்பொடிகளாகிய சுண்ணக்கலவைகளும்- அவரவர்கள் அன்னைக்கென்று தங்கள் எண்ணப்படியெல்லாம் வாசனைப்பொருட்களைச் சேர்த்துக் குழப்பிக் கலவையாக்கிச் சுண்ணங்களாக்கிக் கொண்டுவந்துள்ளனர். மலர்போலும் மங்கையர் சிலர் மலர்மாலைகளை ஏந்தி நிற்கின்றனர்- வண்டுகள் அம்மலர்களிலுள்ள தேனையுண்டு பாடி ரீங்காரமிடுகின்ற மலர்மாலைகள் அவையாம்! ‘புள்ளோடி ஆடி முரலும் செழுந்தொங்கல்’– அழகான சொற்பிரயோகம்! புள் எனில் வண்டு எனவும் ஒருபொருளாகும்.

‘இவையனைத்தையும் இவர்கள் உனக்காக ஏந்தி நிற்கின்றனர். நீ வா அம்மா! வந்து நீராடுக!’ எனும்போது எவ்வாறு நீராட வேண்டுமெனவும் அன்புடன் விவரிக்கின்றாள் தாய்.

“அழகான உனது கைகளால் நீரினை அளைந்து, வாரிவீசி, விழிகள் சிவக்கும் வண்ணம் நீராடுக! மார்பினில் அணிந்துள்ள குங்குமச்சாந்து நீரில் கரைந்து அழியுமாறு நீராடுவாயாக! உனது கரிய கூந்தல் நீரில் அவிழ்ந்து தளரும்வண்ணம் நீராடுக! உடல் பூரிக்கும்படி நீராடுவாய்! பலவிதமாக இழைத்துச் செய்யப்பட்ட பொன் அணிகலன்கள் தொங்கி அசைந்தாடுமாறு நீராடுக!

“இவ்வாறெல்லாம் நீ நீராடும்போது உனது நாயகனான சிவபெருமானின் மற்றொரு வடிவம் இந்த நீர்நிலை என்றெண்ணி அதனுடன் (அவனுடன்) கலந்தாட வேண்டும் தாயே! (சிவப்பரம்பொருளானது எங்கும் எல்லாமாகவும் இருக்கும் திறம்படைத்தது என்பதனை உணர்த்தவே இவ்வாறு கூறினார் போலும்!)

“இருபுறங்களிலும் வெண்மைநிற அன்னங்கள் திரளாக ஒலிசெய்தபடி வரும் பாலாற்றின் (பாலிநதியின்) வெள்ளத்தில் நீராடியருளுவாயாக!” பாலாறு ஒருகாலத்தில் பால்போன்ற நீர்ப்பெருக்கில் சிறந்து அன்னங்கள் ஆடிவிளையாடும் ஆறாகவும் இருந்ததென அறிந்து ஆச்சரியத்திலும், ஆற்றாமையிலும் (அதன் தற்போதைய நிலை கண்டு ஆற்றாமை) மூழ்குகிறோம்.

“வெற்றிநெரியன்  பணிகின்ற திருஒற்றியூரில் வாழும் வடிவுடையம்மையே! நீ நீராடி அருளுவாயாக!” என த் தாதியரும் தாயும் அம்மையை வேண்டுவதாகப் புலவனார் பாடியுள்ளார்.

புன்னாகவராளி

கள்ளோ டலர்ந்தநறு மென்மலர்ச் சுண்ணமும் களபப் பசுஞ்சுண்ணமும்
கர்ப்புரச் சுண்ணமும் கலவையும் சுண்ணமும் கமழ்கின்ற பலசாந்தமும்
புள்ளோடி யாடிமுர லுஞ்செழுந் தொங்கலும் பூவையர்க ளேந்திநிற்பப்
பொற்பநின் கையா லெறிந்துவிழி சேப்பமென் பூண்முலைச் சாந்தமழிய
நள்ளோதி சோரவுடல் பூரிப்ப நகைசெயிழை நான்றாட ஆடுந்தொறும்
நாயகற் கிதுவுமொரு வடிவென்று கலவிநீ நண்ணுவது மானவிருபால்
வெள்ளோதி மத்திர டழங்கவரு பாலிநதி வெள்ளநீ ராடியருளே
வெற்றிநெரி யன்பணிகொ ளொற்றியூர் வடிவம்மை வெள்ளநீ ராடியருளே.

(பொற்பு- அழகு; நள்- இரவு; இங்கு இரவுபோலும் கருமை எனப்பொருள்கொள்ள வேண்டும்; ஓதி- கூந்தல்; தழங்கல்- ஒலிசெய்தல்)

(ஆதிபுரி வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ்- நீராடற்பருவம்)

எண்ணற்ற வண்ணச் சொற்சித்திரங்கள்; சிந்தைகளிகூரக் கண்டு மகிழலாம்.

*****

மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக்கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *