புறநானூறு சுட்டும் மறக்குலத்தாயின் மாண்புகள்

0

முனைவர் கு.சக்திவேல்

 

இலக்கியம் காலத்தைக் காட்டும் கண்ணாடி’ என்பர். ஏனெனில் ஓர் இலக்கியம் தான்எழுந்த கால மக்களின் பழக்கவழக்கம், பண்பாடு, நாகரிகம், கலாசாரம் என அனைத்தையும் பிரதிபலிக்கக் கூடியதாக அமைவதே ஆகும். அவ்வகையில் தமிழ்மொழிக்குச் செம்மொழித் தகுதியைத் தந்த சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூறு அக்கால மக்களின் போரினையும், போர் அறங்களையும், வீரத்தினையும், கொடைச்சிறப்பினையும் பாடியதோடு அல்லாது அதற்கு வித்திட்ட மறக்குலத் தாயின் வீர உணர்வினையும், நாட்டுப்பற்றினையும் விரிவாக எடுத்தியம்பியுள்ளது. இத்தகு பெண்களின் வாழ்வியல் விழுமியங்களைச் சிறிதளவு கோடிட்டுச் செல்வதாக இக்கட்டுரை அமைகிறது.

war-eles-hampi_thumb

நன்மக்கட்பேறு:

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.       (குறள் -61)

 

என வள்ளுவர் தன்னையே முன்னிலைப்படுத்திக் கூறுதலால் மக்கட்பேற்றின் மேன்மையினையும், உயர்வினையும் அறியமுடிகின்றது. அக்காலத்தில் ஒவ்வொரு தாயும் நன்மக்கட் பேற்றினைப் பெறுதல் தன்னுடைய கடமைகளுள் ஒன்றாக எண்ணியதை, ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே (புறம்,312:1) என்ற புறநானூற்றுப் பாடலடியால் உணரமுடிகின்றது. மேலும், தன் கடமை மட்டும் அல்லாது மகனை நல்ல சான்றோனாக உருவாக்குதல் கணவனின் கடமை எனவும், போர்க்கருவிகளை வடித்துத்தருதல் கொல்லனின் கடமை எனவும், சிறந்த வீரனாக உருவாக்குதல் வேந்தனின் கடமை எனவும், இத்தகு நற்பண்புகளைப் பெற்ற காளை போர்க்களத்திலே பகைவரின் யானைகளைக் கொன்று மீளுதல் கடமை எனவும் வீரத்தாய் அடுக்கிக் கொண்டே செல்லுதலால் ஒரு தாயின் கடமையும் பொறுப்புணர்ச்சியும் என்னவென்பது கூறாமலேயே விளங்கும்.

புலியின் கல்லளை:

மறக்குலத்தாய்த் தனக்குரிய கடமையென நினைத்து வீரத்திருமகனைப் பெற்றெடுத்த பெருமையில் இல்லாளுக்குரிய பணிவிடைகளை ஆற்றியிருக்கும் வேளையில், ஒருநாள் தன்மகனைக் காணாது தன்னை நோக்கிக் கேட்ட மருமகளிடம், (அண்ணன் மகள்) பெருமிதத்துடனும், கம்பீரத்துடனும் ”என் மகன் எங்கே எனக்கேட்கிறாய்? யான் அறியேன்; புலி தங்கிப்போகிய குகை (ஈன்ற வயிறு) இதுவே. வேட்டைக்குப்போகும் புலியெனத் தோன்றுவான் மாதே போர்க்களத்திலே” என்கிறாள்.
இதனை,
சிற்றில் நற்றூண் பற்றி, நின்மகன்
யாண்டுளனோ? என வினவுதி; என்மகன்
யாண்டு உளன் ஆயினும் அறியேன்; ரும்
புலி சேர்ந்து போகிய கல்அளை போல
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத் தானே(புறம்: 86)     

எனக் காவற்பெண்டு பாடிய பாடலால் அறியமுடிகின்றது.

மறக்குலத்தாயின் மாண்புகள்:

ஆணின் வெற்றிக்குப்பின் பெண் இருக்கிறாள் என்பர். இருந்தும் பெண்ணுக்குத் துணையாகத் தந்தையாகவும், கணவனாகவும், மகனாகவும் ஓர் ஆண் இருக்கிறான் என்பதும் உண்மையே. அவ்வகையில் மறக்குலத் தாய் ஒருத்தி தன்னைக் காத்தற்கு யாரும் இல்லாத நிலையில், போர்ப்பறை ஒலிகேட்டு நாட்டிற்கும் நாட்டு மன்னனுக்கும் வெற்றியைத் தேடித்தரும் போரில் தன் குடும்பத்தினரின் பங்களிப்பும் கட்டாயம் வேண்டும் என நினைக்கிறாள். எனவே, விளையாடிக் கொண்டிருக்கும் தன் சிறு வயது மகனுக்குப் போர்க்கோலம் பூணுவித்துக் களத்துக்கு அனுப்புகிறாள்.

இப்பெண்ணின் தந்தையோ முன்னர் நடைபெற்ற போரில் யானையை வென்று அதனால் மாண்டவன். நேற்றைய போரிலே இவளது கணவனும் ஆநிரைகளைக் காக்கும் பொருட்டு இறந்துள்ளான். இந்நிலையில்தான் தன் ஒரே மகனையும் இன்று போருக்கு அனுப்புகிறாள். இக்காட்சிதனைக் கண்ட ஒக்கூர் மாசாத்தியார் அவர்கள், உள்ளத்துணிவுடன் அச்சத்தைத் தரும் இச்செயலினைச் செய்யும் இத்தாயின் எண்ணம் கெடுக என்பதுடன், மூதின் மகளீர் ஆகுதலால் இத்தகு எண்ணம் எழுதல் இயல்பே எனப் பாடுகிறார்.

இக்காட்சிதனை,
கெடுக சிந்தை; கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
—— —— —— ——
இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி,
வேல்கைக் கொடுத்து, வெளிதுவிரித்து உடீஇப்,
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
ஒருமகன் அல்லது இல்லோள்,
செருமுக நோக்கி
ச் செல்க என விடுமே(புறம்: 279)

என்ற புறப்பாடலால் அறியமுடிகின்றது. இவ்வரலாற்றுப் பதிவால் மறக்குலத்தாயின் வீரஉணர்வும், நாட்டுப்பற்றும் கூறாமலேயே விளங்குகிறது.

இத்தகு மறக்குலத்தாயின் மகன் ஒருவன் போர்க்களம் சென்றவன் இன்னும் வீடு திரும்பவில்லை. இம்மறவனோடு சென்ற மற்ற வீரர்கள் வீடு திரும்பிய நிலையினில் அவர்களின் விழுப்புண் குணமடைய; அவர்களின் மனைவியர் வேம்பின் கிளைகளை ஒடித்தும், காஞ்சிபாடியும், நெய்யுடை கையராக வீட்டிலே உள்ளனர்.மேலும், வெண்சிறு கடுகினைப் புகைத்துக் கொண்டும் இருத்தலால் எல்லா வீடுகளிளும் ‘கல்’லென்ற ஆராவாரம் கேட்கின்றது. இத்தகு நிலையில் தன் மகன் மட்டும் வீடு திரும்பாததைக் கண்டு பதறாது, வருந்தாது களத்திலே இன்னும் பகைவர் உள்ளனர் போலும் எனவேதான் மகன் வரவில்லை. அவர்களையும் முற்றிலும் ஒழித்தே வீடு திரும்புவான் என நினைக்கும் தாயின் உள்ளமும், துணிவும், மகன்மீது கொண்ட நம்பிகையும் என்னவென்று கூறுவது. இந்நிகழ்வுதனை விளக்கும் விதமாகப் புறநானூற்றிலே பாடல்(296) ஒன்று இடம்பெற்றுள்ளதைக் காணமுடிகின்றது.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தாய்: 

மணமுடிந்து ஆண்டுகள் பலவாகித் தவமாய்த் தவம் இருந்துபெற்ற பிள்ளை, போர்க்களத்திலே பகைவரின் களிற்றினை வீழ்த்தித் தானும் மாண்டான் என்னும் செய்திகேட்டு, அவனை ஈன்ற பொழுதைவிட, போரிலே வெற்றிவாகை சூடி வீரசொர்க்கம் அடைந்தான் எனும் செய்தி கேட்டு களிப்பெய்திய தாயைப்பற்றி,

மீன்உண் கொக்கின் தூவி அன்ன
வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே  (புறம்,277:1-4)

எனப் பூங்கணுத்திரையார் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. மகனின் இறப்பு கேட்டுக் கலங்காது மகிழும் தாயின் நிலையை நோக்க, ஒரு பொருளைப் பெற்ற காலத்தைவிட அதனால் உண்டான பயன்பெறும் காலமே மகிழ்வாகும் என்பதுபோல், வீரக்குடியில் பிறந்த ஒருவன் போர்க்களத்திலே பகைவரை வென்று மாய்வதே பெருமை என்பதை உணர்ந்தவள் இம்மறக்குலத்தாய் என்பது புலனாகிறது.

போர்க்களம் சென்று மீள்வோரிடம் தன் மகனைப்பற்றி விசாரிக்கும் தாயிடம், அவன் புறமுதுகிட்டு இறந்ததாகக் கூறுகின்றனர் அறியாத சிலர். இச்சொல் கேட்டு கொதிப்படைந்த தாய், என் மகன் புறப்புண்பட்டு இறந்திருப்பானானால் அவன் பாலுண்ட மார்பை இவ்வாளால் அறுத்தெறிவேன் எனப் போர்க்களம் நோக்கிச் செல்கிறாள். பிணக்குவியல்களைத் தன் வாளால் புரட்டிப் பார்க்கிறாள். அப்போது ஓர் உடலைப் பார்த்து ஆனந்தம் அடைகிறாள். ஏனெனில் தன் மகன் புறப்புண்பட்டு இறக்காது போரிட்டு விழுப்புண்பட்டே வீரமரணம் அடைந்துள்ளான் என்பதே அதற்கு காரணம். இதனை,

நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
முளரி மருங்கின், முதியோள் சிறுவன்
படைஅழிந்து மாறினன் என்று பலர் கூற,
மண்டுஅமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன்
முலைஅறுத் திடுவென், யான் எனச் சினைஇக்
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூஉ,
ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே (புறம்: 278)

என்ற புறப்பாடலின் வழி உணரமுடிகிறது.மற்றொரு தாய், பகைவரால் வெட்டுண்டு சிதைந்து கிடக்கும் தன் மகனின் உடலைப் போர்க்களத்திலே பார்த்துக் கலங்காது, அவன் பகைவரை வீழ்த்தியே சொர்க்கம் எய்தினான் என்பதை அறிந்து, அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்வை விடப் பன்மடங்கு பெருமிதமும் மகிழ்வும் அடைகிறாள். இதனால் அவளது வற்றிய மார்பிலே பால்ஊறிச் சுரக்கிறது. இத்தகு காட்சிதனை விளக்கும் விதமாக,

“இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய
சிறப்புடை யாளன் மாண்புகண் டருளி
வாடுமுலை ஊறிச் சுரந்தன
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே(புறம்,295:5-8)

என மற்றுமொரு புறப்பாடல் அமைந்துள்ளதையும் காணமுடிகிறது. இவ்வாறு தன்மகன் போர்க்களத்திலே இறந்தான் என எண்ணி வருந்தாது மகிழ்வடையும் மறக்குலத்தாயின் மாண்புகளை வார்த்தைகளால் விளக்கிக் கூறுதல் என்பது இயலாத ஒன்றே.

மன்னர்களுக்கு ஆபத்துதவிகளாகவும், மெய்க்காப்பாளர்களாகவும் பல வீரர்கள் இருந்துள்ளனர் என்பது நாம் அறிந்ததே. இத்தகு வீரர்களை ஈன்ற மறவர்களின் தாய், தாய்ப்பாலோடு நாட்டுப்பற்றையும், வீர உணர்வையும் சேர்த்தே ஊட்டி வளர்த்துள்ளாள். இவ்வாறு வளரும் தன் மகன் பிறவிப்பயனாக மன்னருக்காகவும், நாட்டிற்காகவும் உயிர் நீத்தான் என்பதை அறிந்து மகிழ்வெய்தியதை அறியும்போது, ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தாயாக இருந்தாள் என்பது புலப்படுகிறது. ‘தாயைப் போல பிள்ளை’ என்பதால் இத்தகு மறவர்களின் தாயும் அரசிக்கும், இளவரசிக்கும் ஆபத்துக்காலங்களில் உயிர்காக்கும் தோழிகளாக இருந்துள்ளனர் என்பதும் வரலாறு பேசும் உண்மையே. இவ்வாறான பெண்களின் வாழ்வியல் விழுமியங்களைப் புறநானூறு பல இடங்களில் பேசிச்சென்றுள்ளதை நாம் காணமுடிகின்றது.

***

முனைவர்கு.சக்திவேல்
உதவிப்பேராசிரியர்

தமிழாய்வுத்துறை
அ.வ.அ.கல்லூரி(தன்னாட்சி)
மன்னன்பந்தல்-609305

                

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *