மீனாட்சி பாலகணேஷ்

தென்திருப்பேரை முகில்

கிடந்தும் தவழ்ந்தும் இருக்கும் குழந்தை உருண்டு புரண்டெழுந்து அழகாகக் குத்துவிளக்கு போல எழுந்தமர்ந்து கொள்ளும்போது அதனைக்காணும் தாயின் மகிழ்ச்சி அளவிட இயலாதது. குழந்தையிடம், ‘கை வீசம்மா கைவீசு,’ என்றும், கைகளைக்கொட்டிச் சப்தமெழுப்பிச் சப்பாணி ( சஹ+ பாணி= சப்பாணி) கொட்டவும் கற்றுக் கொடுக்க முயல்வாள் அன்னை.

சந்தன மரங்கள் அடர்ந்து செறிந்த சோலைகளைக்கொண்ட ஊர் திருப்பேரை எனும் திருமாலின் தலமாகும். இங்கு சின்னஞ்சிறுவனான, கருமுகில்வண்ணனான ஒரு குழந்தை உள்ளான். தெய்வக்குழந்தையான திருப்பேரை நாதனவன். பெயரும் மகரக்குழைக்காதன்! அவனைச் சப்பாணி கொட்டுமாறு வேண்டும்போது அக்கரங்களால் அவன்செய்த செயல்களைக் கூறுவது தானே முறைமை? அதற்கு நம் புலவரின் கற்பனை வளம் ஊற்றாகப் பெருகுகிறது!

தன் சிவந்த கரங்கள் இன்னும் சிவக்கச் சப்பாணி கொட்டி விளையாடுகிறான் அந்தக்குட்டன்! யாரவன்? அவன் செய்த அரும்பெரும் செயல்களைப் பெருமையுடன் அடியாரான புலவர் விளக்குவதனைப் பார்க்கலாமா?

am
விசுவாமித்திரர் ஆகிய பெருந்தவ முனிவர்களின் தவத்தினை நாசம் செய்து பெரும் குற்றம்புரிந்து வந்த கருமை நிறங்கொண்ட தாடகை எனும் ஒரு அரக்கியை வதைத்தான். அவளுடைய கொடிய உயிரினைக் குடிக்கும் வண்ணம் வில்லினில் கணைகளைத் தொடுத்தான்; அவளை மிக எளிதாகக் கொன்றும் விட்டான். அவனே ஸ்ரீராமன் எனும் தசரதன் குலக்கொழுந்து. ‘இராமன் கணைகளைத் தொடுத்துத் தாடகையை அழித்தான்,’ என மட்டும் கூறாது, அதனை இன்னுமே விளக்கி, அக்கொடியவளின் உயிர் எவ்வாறு போயிற்றென விளக்குவதும் இன்னொரு புலமைநயம்: அம்பினால் அடிபட்டவளின் உடலிலிருந்து கொழுங்குருதி பெருக்கெடுக்கின்றது. நரிகள் அவளைச் சுற்றிச் சூழ்ந்து தசையினைப் பிடுங்கி உண்கின்றன. இயமன் இவ்வண்ணம் அவளது உயிரைக் குடிக்குமாறு செய்தான் ‘இராமன் எனும் இந்தத் தென்திருப்பேரையூர் உறையும் சிறுவன்’ என அவன் மேலேற்றிக் கூறுவார் புலவர்.

தாடகை வதத்தைப்பற்றிக் கம்பர் கூறுகிறார்:

am1

‘மார்பில் தைத்த அம்பினால் உண்டான புண்ணிலிருந்து பெருகிய இரத்தம் மாலையின் செவ்வானப் பரப்பு தரையில் வீழ்ந்ததுபோல, பாலைவனம் முழுதும் கடலாக மாறும்படி விழுந்து பரவியது,’ என்றும், ‘தாமரைமலரில் வாழும் பிரமனுக்கு ஒப்பான மாமுனி விசுவாமித்திரனின் கட்டளையை மறுக்காதவன் இராமன்; அவன் செய்யும் முதல்போர் (கன்னிப்போர்) இது. எமன் ஒருபக்கம் இந்த அரக்கர்குலத்தின் உயிரை உண்ணவேண்டும் எனும் ஆசையால் திரிந்து கொண்டிருக்கிறான்; ஆனாலும் வாளேந்திய அரக்கர்களைக் கண்டு அவனுக்கு ஒரு தயக்கம்; அச்சம். இன்று அவனுடைய ஆசையும் கொஞ்சம் நிறைவேறியது!’ எனவும் கவிதைநயம் மிளிரக் கூறுகிறார்.

வாச நாள்மலரோன் அன்ன மாமுனி பணி மறாத
காசு உலாம் கனகப் பைம்பூண் காகுத்தன் கன்னிப்போரில்
கூசிவாள் அரக்கர் தங்கள் குலத்து உயிர்குடிக்க அஞ்சி
ஆசையால் உழலும் கூற்றும் சுவை சிறிது அறிந்தது அன்றே.
(தாடகை வதைப்படலம்)

கம்பரின் சொல்லாற்றலின் தாக்கத்தை இப்பிள்ளைத்தமிழ்ப் பாடல்களிலும் உணர முடிகின்றது. இவன் இவ்வாறு தாடகையினை அழித்ததனால் கௌசிகன் எனும் விசுவாமித்திர முனிவனின் வேள்வி வேதமுறையினின்று வழுவாமல் நடைபெறுமாறு முடித்தும் தந்தான்.

am2

பின்பு மிதிலைநகரினை அடைந்து சொல்லுதற்கரிய புகழ்படைத்த சனக மாமன்னன் வசமிருந்த வில்லினை (சிவதனுசை) முறிக்கிறான் அச்சிறுவன். எவ்வாறு? சும்மா முறிக்கவில்லை; கண்டதுண்டமாக ஒடித்துவிட்டான் எம்முடைய இந்தக்கோமகன் என்கிறார் புலவர்.

கம்பர், ‘கையால் எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்,’ என்றார். கணப்பொழுதினில் வில்லை உடைத்து விட்டானாம் இராமன். இப்புலவர் இன்னும் ஒருபடி மேல்போய், ‘பலதுண்டங்களாக உடைத்து விட்டான்,’ என்கிறார்! ‘ஆகா’ எனத் தலையசைத்து இரசிக்கிறோம்!

இவனுடைய இச்செயல் சிவசங்கரக்கடவுளின் கண்களைக் குளிர்வித்ததாம்.

இந்தத் தென்திருப்பேரை முகில் வண்ணக் குழந்தையை புகழ்வாய்ந்த செயல்களைச் செய்த தனது கைகளைக்கொண்டு சப்பாணி கொட்டி அருளுமாறு வேண்டுகிறார் புலவர்.

கம்பரைப்போல இவனது கைவண்ணத்தை அழகுறக் காட்டியருளுகிறார்.

அருமையான கற்பனை! கம்பர் வழியிலேயே சென்று தமது பிள்ளைத்தமிழ் நூலை வடிவமைத்துள்ள புலமைநயம் புதுமை!

கக்கக் கொழுங் குருதி நரிபிடுங்கத்தசை
கவர்ந்துயிர் குடிப்ப மறலி
கருநிறத் தாடகையை வதை படுத்தசிலைக்
கடை குழைத்தடிகணை தொடுந்
தொக்கிற் பெருந்தவக் கௌசிகன் வேள்வியும்
சுருதிநூல் முறை முடித்துச்
சொல்லரிய மிதிலாபுரிச் சனகன்வில்
கண்டதுண்டப் படுத்து மெங்கோன்
செக்கச் சிவக்குங் கொழும்பவள வார்க்கதிர்ச்
செஞ்சுடாவி மணிமுடிச்
சிவசங்கரக் கடவுள் கண்கள்களி கூரச்
சிறந்தருள் புரிந்து சங்கு
சக்கரத்துணை செங்கை யொக்கச் சிவப்பவொரு
சப்பாணி கொட்டி யருளே,
சந்தனச் சோலைசெறி தென்திருப்பேரை முகில்
சப்பாணி கொட்டி யருளே
(ஸ்ரீ மகரக் குழைக்காதர் பிள்ளைத் தமிழ்- சப்பாணிப்பருவம்)

 

இந்நூலின் பாட்டுடைத்தலைவனை இராமனாகக்கொண்டு அவன் சிவதனுசை முறித்து, சானகியை மணந்ததையும், தாடகை முதலான அரக்கர்களையும் அழித்த வீரச்செயல்களையும், இன்னும் பலவற்றையும் புலவர் பாடியுள்ளார். இந்நூலை இயற்றியவர் இன்னாரென அறிய இயலவில்லை. இனிய எளிய சொற்களைக்கொண்டு மிக அருமையாக இப்பிள்ளைத்தமிழ் நூல் அமைந்துள்ளது.

அடுத்து சிற்றில் பருவத்திலிருந்து ஒரு மாறுபட்ட கற்பனைகொண்ட பாடலைக் காணலாமா?

சிறுவன் திருப்பேரைநாதன் சிறுமிகள் இழைத்து விளையாடும் சிற்றிலைக் காலால் எற்றி உதைத்து அழிக்க முற்படுகிறான். அச்சிறுமிகள் மிகுந்த வாக்குசாதுரியத்துடன் அவனுடன் வார்த்தையாடுவது நமக்கு வியப்பினைத் தருகின்றது!

இவர்கள் பாடுபட்டு வண்டல் மண்ணைக்கொழித்து, பதமாக நீர்சேர்த்துப் பிசைந்து, சிற்றில் இழைத்திருக்கிறார்கள். சிற்றில் இழைத்து விளையாடும்போது தாய் தந்தையாராகத் தம்மைக் கருதிக்கொண்டு பாவைகளை வைத்தும் விளையாடுவார்கள் சிறுபெண்கள். சிற்றிலை அழிக்க இச்சிறுவன் ஓடோடி வருகிறான். இவனோ அரசகுமாரன்; அவனிடம் ஒரு சிறுபெண், பெரிய பெண்மணி போல நீட்டி முழக்கிக் கூறுகிறாள்: “ஆசையாக, அன்பாக இந்தக் குழந்தையை நான் மார்போடு அணைத்துக்கொண்டு முலைப்பால் கொடுக்கிறேன். பின்பு அமுதம்போலும் புனல்நீரில் நீராட்டி, அதன் அழகான கடைக்கண்களுக்கு மையும் தீற்றியுள்ளேன். கழுத்தில் பொன்னாரத்தைத் திருத்தமாக அணிவித்து, பட்டாடையும் உடுத்தியுள்ள எனது குழந்தைக்கு புகழ்வாய்ந்த பெரியோனான உனது பெயரையே நான் இடுவேன். எப்போது? நாங்கள் பாடுபட்டுக் கட்டியுள்ள மாளிகை, மாடங்கள், அரங்கங்கள், வேதிகை கொண்ட இச்சிற்றிலை நீ அழிக்க ஓடோடி வரலாகாது காண்பாய்! எங்கள் சிற்றிலை அழிக்கமாட்டேன் எனக்கூறினால் நானும் கூறியபடி என் குழந்தைக்கு உன் பெயரை இடுவேன். நாங்கள் சின்னஞ்சிறு பேதைப்பெண்கள்; காலால் எங்கள் சிற்றிலை நீ எற்றினால் உன் மென்மையான (அடியார் தொழும்) திருவடியில் வண்டல் துகள்கள் ஒட்டிக்கொண்டு உறுத்துமே ஐயா!

“ஆகவே அலைகள் வீசும் பொருநை நதிக்கரையிலமைந்த திருப்பேரையின் நாதனே! சிற்றில் சிதையேலே!” என வேண்டுவதாகப் பாடியுள்ளார். ஒப்பற்ற கற்பனை நயம்கொண்டு, சிறுமித்தன்மையின் பேதைமையையும் விளக்கிக்காட்டும் இனிய பாடல்.

அன்போ டணைத்து முலைகொடுத்தின்
அமுதூற்றறிருக்கும் புனலாட்டி
அருங்கட் கடைக்கஞ் சனமெழுதி
ஆரந் திருத்திப் பட்டுடுத்தி
உன்பே ரிடுவே னென் குழவிக்
குள்ள தயவாற் றனிசமைத்த
உயர்மா ளிகையு மாடரங்கும்
ஒளிர்வே திகையு நீயழிக்க
வன்பா லோடி வரவுனக்கு
வழக்கன் றுலகிற் சிறுபேதை
மகளி ருந்து விளையாடும்
வண்டற் றுகள்சே வடிபடுமே
தென்பே ரையினங் குலநாத
சிறியேஞ் சிற்றில் சிதையேலே
திரையார் பொருநைத் தடந்துறைவா
சிறியேஞ் சிற்றி்ல் சிதையேலே
(ஸ்ரீ மகரக் குழைக்காதர் பிள்ளைத் தமிழ்- சிற்றிற்பருவம்)

மேலும் காட்சிகளைக்கண்டு மகிழ்வோம்.

மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}

********************************

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இலக்கியச் சித்திரம் – இனிய பிள்ளைத்தமிழ்-29

  1. இதில் முதல் பாடலில் மறலி எனும் சொல் தவறுதலாக மறவி என்று பாடப்பட்டு உள்ளது. தவறுக்கு வருந்துகிறேன்.- மீனாட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *