க. பாலசுப்பிரமணியன்

 

திருப்பரங்குன்றம்

thiruparamgunram3

 பரங்குன்றத்துப் பேரழகே ! பார்புகழும் விண்ணழகே !

பரமசிவன் விழியிருந்து பறந்துவந்த ஆணழகே!

பழகுதமிழ் மொழிதந்து  பண்பரப்பும்  தமிழழகே !

பாலோடு தேன்கலந்த பல்சுவைப் பெயரழகே !

 

நாதத்தின் தலைவன் நினைப்பினிலே பிறந்தாய்

வேதத்தின் பொருளாக வாழ்வினிலே நின்றாய்

ஞானத்தின் வடிவாக ஞாலத்தைக் கவர்ந்தாய்

காலத்தின் கருவே ! கருணைமிகு கந்தா !

 

பொய்கையில் வளர்ந்த பொதிகைமலைத் தென்றலே

பூமேவும் செங்கமலம் குருபரனுக்குக் கொடுத்தவனே

புரியாத பிரணவத்தை பரமனுக்கும் சொன்னவனே

புதிரான வாழ்வுக்குப்  புதுப்பொருளைக் கொடுப்பவனே !

 

படியாத அகம்கொண்டு பழிகொண்ட சூரனை

பரிவாக அருள்கொண்டு ஆட்கொண்ட அமரா !

பரிசாக தெய்வானைக் கைப்பிடித்த பண்பாளா !

பரங்குன்றம் புகழ்பாடும் மெய்ஞ்ஞான திருவே

 

அவ்வையோடு அகத்தியனுக்கும அருள்செய்த ஆனந்தா !

ஆலவாய் தமிழ்ச்சங்கம் அணிசெய்த அமுதா !

ஆயிரம் பெயர்கொண்டு அழைத்தாலும் அசையாமல்

அடியார்கள்  அன்பிற்கு  அருள்செய்யும் வேலவனே !

 

குன்றுமேல் நீயிருக்கக்  குறைவின்றிப் பார்த்திருந்தேன்

குகையுள்ளே நீஅமர்ந்தால் குமரா என்செய்வேன் ?

குலம்காக்கும் கொழுந்தே நெஞ்சினிலே வருவாயோ?

குறைநீக்கி அறம்காக்கக் குருவாக நிற்பாயோ ?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *