-மேகலா இராமமூர்த்தி

ஆற்றங்கரைகளில்தாம் பெரும்பான்மையான மனித நாகரிகங்கள் தோற்றங்கொண்டன என்பது ஆய்வாளர்கள் கருத்து. நைல் (Nile) நதிக்கரையில் தோன்றிய எகிப்திய நாகரிகமும், யூப்ரடிஸ் (Euphrates), டைகரிஸ் (Tigris) நதிக்கரைகளில் தோன்றிய சுமேரிய (இன்றைய ஈராக்) நாகரிகமும், சிந்துநதிக்கரையில் (Indus River aka Sindhu River) தோன்றிய சிந்துசமவெளி நாகரிகமும் ஆய்வாளர்களின் கருத்துக்கு அரண்சேர்ப்பதாய் அமைகின்றன.

குறிஞ்சி (மலைசார் நிலம்), முல்லை (காடுசார் நிலம்), நெய்தல் (கடல்சார் நிலம்) என்று எத்தனையோ வாழிடங்களை இயற்கை மனிதர்களுக்குத் தந்திருக்க, மருதநிலப்பகுதியாக அறியப்படும் ஆற்றங்கரைகளில் மட்டும் நாகரிகம் தோன்றுவானேன் என்று நாம் வினவலாம்.

“மனிதர்கள் வேளாண்மைசெய்யக் கற்றுக்கொண்டது மருதநிலத்தில் குடியேறிய பின்னர்தான்! நகரங்கள் முதன்முதல் தோன்றியதும் உழவுத்தொழிற்குச் சிறந்த மருதநிலத்திலேயே. உழவுத்தொழிலும் நிலையான குடியிருப்பும், ஊர்ப்பெருக்கமும் நாகரிகம் தோன்றுவதற்குப் பெரிதும் துணை செய்தன. உழவுத் தொழிலால் வேளாண்மையும், பதினெண் பக்கத் தொழில்களும், பிறதொழில் செய்வார்க்கும் போதியவுணவும், வாணிகமும் ஏற்பட்டன. நிலையாகக் குடியிருப்பதனால் உழவன் ’குடியானவன்’ எனப் பெற்றான். ’இல்வாழ்வான்’ என்று திருவள்ளுவரால் சிறப்பித்துச் சொல்லப் பெற்றவனும் உழவனே” என்று ஆற்றங்கரைகளில் நாகரிகம் தோன்றி வளர்ந்ததை விளக்குவார் பாவாணர்.

நம் தமிழகத்தைப் பொறுத்தமட்டில் நல்லதோர் நாகரிகத்தை இங்கே தோற்றுவித்த பெருமை பூ விரியும் சோலைகளைத் தன்பாதையெங்கும் பரப்பிய காவிரியாற்றுக்கு உண்டு. வற்றாத சீவநதியாய், (ஒருகாலத்தில் திகழ்ந்த) காவிரிப்பேராறு தமிழகத்தை…குறிப்பாக, அன்றைய சோழநாட்டை வளங்கொழிக்கும் பொன்னாடாக்கியது வரலாற்றுண்மை! அதனால்தான் சோழநாட்டை ’வளநாடு’ என்றும் அதனையாண்ட அரசனை ’வளவன்’ என்றும் புலவர்களின் பொய்யாச் சிறுநா புகழ்ந்து பாடிற்று. ’சோழவளநாடு சோறுடைத்து’ எனும் பழமொழிக்குக் காவிரியே காரணம் என்பதை யாரே மறுப்பர்?

cauvery1கன்னட நாட்டின் (கர்நாடகா) குடகுமலையிலுள்ள தலைக்காவிரி எனும் பகுதியே காவிரியின் பிறந்தகம். இதனையே ’குடமலைப் பிறந்த தண்பெருங் காவிரி’ என்று மலைபடுகடாமும் குறிக்கின்றது. குட(கு)மலையிலிருந்து துள்ளிக்குதித்துவரும் காவிரிப்பெண்ணாள், ஹசன், மாண்டியா, மைசூரு, பெங்களூரு எனும் பல்வேறு கன்னட மாவட்டங்களைக் கடந்து தன் கடற்காதலனைத் தேடித் தமிழகத்துக்குள் நுழைகின்றாள். தருமபுரி, சேலம், ஈரோடு, திருச்சிராப்பள்ளி என்று ஒவ்வொரு பகுதியாகத் தாண்டி, காதலனைக்காண நெடும்பயணம் மேற்கொண்டுவரும் அவள், சிராப்பள்ளியைக் கடந்ததும் அகண்ட காவிரியாய் ஆர்ப்பரித்து வருகின்றாள். தஞ்சையை நெருங்க நெருங்கத் தன் தலைவனைச் சந்திக்கவேண்டும் எனும் ஆவல் மீதூர, அரிசிலாறு, வெண்ணாறு வெட்டாறு என்று பல கைகளை (இவை காவிரியின் கிளைகள்) நீட்டியபடிப் பாய்ந்தோடி வருகின்றாள் அப் பாவை.

cauvery3முற்காலச் சோழர்களின் பொற்புடைத் தலைநகராய்த் திகழ்ந்த பூம்புகாரில் நுழைந்து, தனக்காக வழிமேல்விழிவைத்துக் காத்திருக்கும் வங்கக் கடலரசனோடு தன் தங்கக் கைகோக்கிறாள் அந்தத் தையல். சம்பு எனும் பெண்தெய்வத்தின் காவலில் இருந்தமையால் ’சம்பாபதி’ எனும் பழம்பெயர்கொண்டிருந்த பூம்புகார் நகரம், காவிரி தன்னுள் புகுந்து செல்வதனாலேயே ’காவிரிப்பூம்பட்டினம்’ எனும் புதுப்பெயர் கொண்டதாக மணிமேகலைக் காப்பியம் குறிப்பிடுகின்றது.

கருநாடகம் தொடங்கித் தமிழகம் ஈராகக் கிட்டத்தட்ட 800 கி.மீ தூரம் பயணிக்கும் காவிரிப்பேராற்றின் நீளமும் பயணத்தூரமும் கன்னடத்தைவிடத் தமிழகத்திலேயே அதிகம் என்பது ஈண்டுக் கருதத்தக்கது.

இனி, தமிழகத்தின் பெருவளத்துக்குக் காரணமாயிருந்த காவிரிப்பேராறு குறித்து நம் பைந்தமிழ் இலக்கியங்கள் செப்புவது என்ன என்பதைக் கண்ணுறுவோம்.

சங்க இலக்கியங்கள் என்று குறிக்கப்படுபவை பாட்டும், தொகையும் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு). இவற்றைப் பதினெண்மேற்கணக்கு நூல்கள் என்றும் அழைப்பர். இச்சங்கநூல்கள் காவிரியாற்றைக் குறித்து ஒன்றல்ல… இரண்டல்ல…முப்பத்தேழு இடங்களில் வாயூறிப் பேசுகின்றன என்பதை அறியும்போது உண்மையில் வியப்பே மேலிடுகின்றது. அவற்றில் சிலவற்றை நாமும் அறிந்துகொள்வோம்!

karikaala_chozanபத்துப்பாட்டு நூல்களில் இரண்டாவதாக வைத்தெண்ணப்படும் பொருநராற்றுப்படை, முடத்தாமக்கண்ணியார் எனும் நல்லிசைப்புலவர் கரிகாற்பெருவளத்தான்மீது பாடியதாகும். 248 அடிகளுடன், ஆசிரியமும் வஞ்சியும் விரவிய நடையுடைத்து இந்நூல். இதன் இறுதிப்பகுதி, புகாரைப் புரக்கும் காவிரியைக் கற்கண்டுச் சொற்கொண்டு வருணிக்கின்றது.

….பன்மாண்
எல்லை தருநன் பல்கதிர் பரப்பிக்
குல்லை கரியவுங் கோடெரி நைப்பவும்
அருவி மாமலை நிழத்தவு மற்றக்
கருவி வானங் கடற்கோள் மறப்பவும்
பெருவற னாகிய பண்பில் காலையும்
நறையும் நரந்தமு மகிலு மாரமும்
துறைதுறை தோறும் பொறையுயிர்த் தொழுகி
நுரைத்தலைக் குரைப்புனல் வரைப்பகம் புகுதொறும்
புனலாடு மகளிர் கதுமெனக் குடையக்
கூனிக் குயத்தின் வாய்நெல் லரிந்து
சூடுகோ டாகப் பிறக்கி நாடொறும்
குன்றெனக் குவைஇய குன்றாக் குப்பை
கடுந்தெற்று மூடையின் இடங்கெடக் கிடக்கும்
சாலி நெல்லின் சிறைகொள் வேலி
ஆயிரம் விளையுட் டாகக்
காவிரி புரக்கு நாடுகிழ வோனே.
(பொரு: 232-248)

கதிரவனின் கடும்வெப்பம் தாளாது கஞ்சாச்செடிகளும் (கஞ்சாச் செடி கடுமையான வெப்பத்தைத் தாங்கக்கூடியது) கருக, மரங்களெல்லாம் பட்டுப்போக, மாமலைகளில் அருவிகள் இல்லாதுபோக, முகில்கள் கடல்நீரை முகந்து மழைபொழிய மறக்க, பெரும் வறட்சியும், வற்கடமும் பூவுலகைப் பீடிக்கும் காலத்தும், நுங்கும் நுரையும் பொங்க ஆரவாரித்துவரும் காவிரிவெள்ளமானது நறைக்கொடி, நரந்தம்புல், அகில், சந்தனம் போன்ற மணப்பொருள்களையெல்லாம் சுமந்துவந்து துறைதோறும் புனலாடும் மகளிர்க்குப் பரிசுப்பொருள்களாய் நல்கும். வளைந்த வாயையுடைய அரிவாளால் அரிந்து குன்றெனக் குவிக்கப்பட்ட நெற்பொலி (நெல்குவியல்) மூ(ட்)டைகள் ஒன்றோடொன்று நெருக்கமாய் அடுக்கப்பட்டிருக்கும் என்று காவிரிதந்த வளம் கவினுறப் பேசப்படுகின்றது இங்கே!

அன்று சோழவளநாட்டின் நெல்விளைச்சல் எவ்வளவு தெரியுமா? ஒருவேலி நிலத்தில் ஆயிரங்கலம் (நெல்) விளையுமாம்! அதுவும் சாதாரண நெல் இல்லை! ’சாலி’ என்று சொல்லப்படும் உயர்ரக நெல்லைப் பயிரிட்டு அமோக விளைச்சல் கண்டிருக்கின்றார்கள் அன்றைய சோணாட்டு உழவர்கள்.

ஆயிரங்கலம் என்றால் எவ்வளவு என்று ஒரு கணக்குப் போட்டுப் பார்ப்போம். ஒருகலம் என்பது 24 படி. அப்படியானால், ஆயிரங்கலம் என்பது 24000 படி. படிக்கும்போதே வாய்பிளக்கிறோமே…விளைவித்துப் பார்த்தவர்களின் பெருமிதத்தை விளக்கிச்சொல்ல வார்த்தை ஏது?

இத்துணைப் பெருமைவாய்ந்த காவிரிபுரக்கும் நாட்டுக்கு உரிமையுடையோனாகிய கரிகால்வளவன் போற்றுதலுக்குரியவன்தானே?

(தொடரும்)

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *