நிர்மலா ராகவன்

பயிரை மேய்ந்த வேலி

%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d

“அந்தப் பெண்ணின் பின்னணி உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்ட குரல் ஆசிரியர்களின் பொது அறையில் என்னெதிரில் வந்து அமர்ந்திருந்தவருடையது. ஐம்பதுக்கு மேற்பட்ட வயதையே தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு, பதினான்கு வயது மாணவிகளைத் தம் இச்சைக்குப் பணிய வைக்கத் தயங்காதவர் அவர்.

`வதைக்கு உள்ளானால், உடனே எதிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், பிறரிடம் அதைப் பகிர்ந்துகொண்டு, அதை நிறுத்தும் வழியைப் பார்க்கவேண்டும்!’ என்று நான் வகுப்பில் எப்போதோ கூறியதை நினைவு வைத்துக்கொண்டு, இரண்டு மாணவிகள் என்னிடம் அவருடைய லீலைகளைத் தெரிவித்திருந்தனர்.

நான் பள்ளிக்கூடத்தின் மேலிடத்துக்குப் புகார் செய்ததை அறிந்து, என்னை வசப்படுத்திக்கொள்ள நினைத்திருப்பார்!

தான் செய்த தவறு சரிதான் என்று என்னை நம்ப வைக்க முயற்சி செய்கிறாரா? எனக்கு ஆத்திரம் பெருகியது. விருட்டென எழுந்து அப்பால் சென்றேன்.

“இவள் மிகவும் ANTI-SOCIAL! பிறருடன் கலகலப்பாகப் பழகத் தெரியவில்லை,” என்று என்னைப்பற்றிய குற்றச்சாட்டை ஒருத்தியிடம் கூறியிருக்கிறார். எல்லாம், அது என் காதில் விழுந்து, நான் இளகிவிடுவேனோ என்ற நப்பாசைதான்!

“இந்தமாதிரி மனிதரை என் நண்பர் என்று கூறிக்கொள்வதைவிட, நான் உம்மணாமூஞ்சியாகவே இருந்துவிட்டுப்போகிறேன்!” என்றேன், அலட்சியமாக.

தான் செய்வது காதில் விழுந்தாலும், மற்றவர்கள், `பெண்கள் விரும்பித்தானே இப்படி செய்கிறார்!’ என்று அவரை ஆதரிக்க, அவர் வேறு பல முயற்சிகளைக் கையாண்டார். தினமும் ஏதாவது கேக் வகைகளோ, பஜ்ஜி போன்ற தின்பண்டங்களோ வாங்கிவந்து, தலைமை ஆசிரியையிடம் கொடுத்து, எல்லா ஆசிரியர்களுக்கும் விநியோகிக்கச் செய்வார்.

என் முறை வந்ததும், நான் அதை வாங்க மறுத்துவிடுவேன். வற்புறுத்துவார்கள், ஒவ்வொரு நாளும். என் பதில் என்னவோ ஒரே மாதிரிதான் இருக்கும்: `NO THANKS’.

விளையாட்டுத் தினத்தன்று மாணவ மாணவிகளுக்குப் பரிசுப்பொருட்கள் வாங்க நிறைய காசு கொடுத்தார். அது போதாதா, பிறரது கணிப்பில் அவர் உயர!

அந்த சமயம், `பாலியல் வதை’ என்ற தலைப்பில் தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சி நடக்கப்போவதாக அறிவித்திருந்தார்கள். ஒரு தினசரியின் சார்பில் நான் கலந்துகொண்டேன்.

`ஒரு மாணவி தான் வதைப்படும்போது, அதை பெற்றோரிடமோ, ஆசிரியரிடமோ தெரிவிக்க வேண்டும்,’ என்றாள் நிகழ்ச்சியை நடத்துபவள்.

“ஆசிரியரே வதைத்தால்?’ என்னையுமறியாமல் என் குரல் எழும்பியது.

என் குரலுக்கென ஒரு தனி மூளை உண்டு. பல சந்தர்ப்பங்களில், நானே எதிர்பாராமல், அது ஆக்ரோஷமாகக் கிளம்பிவிடும்.

ஒரு பிடி கிடைத்த மகிழ்ச்சியுடன், என்னை நிறையக் கேள்வி கேட்டாள். பலமான வற்புறுத்தலுக்குப் பிறகு, எந்த மாநிலம் என்று மட்டும் சொன்னேன்.

அடுத்த நாளே ஆரம்பித்தது தலைவலி. மேலதிகாரிகள் என்னை விசாரணை செய்ய ஆரம்பித்தார்கள்.
“எதற்காக இப்படிச் செய்தீர்கள்?”

“என் பேரக்குழந்தைகளுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும் பள்ளிக்கூடம் என்பது ஒரு பாதுகாப்பான இடமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்!”

“நல்லவேளை, என் குழந்தைகள் இருவரும் ஆண்கள்!” என்றான் ஒரு மடையன்.

“இதைக் கேளுங்கள்!” என்று ஆரம்பித்து, எங்கள் பள்ளியில் ஒரு பையனிடம் மாடிப்படியிலேயே முறைகேடாக ஒரு தாற்காலிக ஆசிரியர் நடந்துகொண்டதை நான் கேள்விப்பட்டதாகச் சொன்னேன்.
அவர்கள் பதறிப்போனார்கள். உண்மையிலேயே எனக்கு அந்த ஆசிரியர் யாரென்று தெரியவில்லை. என்னிடம் கூறியதோ ஒரு ஆண். அவரையும் நான் விட்டுக்கொடுக்கவில்லை.

“தொலைகாட்சிக்கு ஏன் போனீர்கள்? யாரிடமாவது சொல்லியிருக்கலாமே!”

“பள்ளிக்கூடத்தில் இதுபற்றி நான் பலமுறை புகார் கொடுத்தும், ஒருவரும் எதுவும் செய்யவில்லை. அந்த மனிதருக்குப் பயந்து, சில பெண்கள் பள்ளிக்கூடத்துக்கே வருவதில்லை!” என்று பொங்கினேன். “ஆசிரியர் ஒருவர் அதெப்படி ஒரு பெண்ணைத் தனியாக அழைத்துப்போய், தகாத முறையில் நடக்கலாம்?”

அவர்கள் சற்று அயர்ந்து போனார்கள்.

“நீங்களும்தான் இப்போது தனியாக எங்கள் இருவருடன் இருக்கிறீர்கள்!” என்றான் இன்னொரு மடையன்.

“நான் இங்கு — தலைமை ஆசிரியையின் அறைக்கு — வந்திருப்பது எல்லாருக்கும் தெரியும்,” என்று பதிலடி கொடுத்தேன்.

அவர்கள் கேள்விக்கணையால் என்னை துளைத்ததைப் பொறுக்க முடியாது, “இங்கு தப்பு செய்தது நான் இல்லையே! என்னை ஏன் இப்படிப் போட்டு வாட்டுகிறீர்கள்?” என்றேன்.

“எங்கள் கலாசாரத்தில் இதெல்லாம் தப்பே இல்லை, தெரியுமா?” என்றபோது, நான் பதிலே சொல்லவில்லை. வெறித்தபடியிருந்தேன்.

சம்பந்தப்பட்ட ஆசிரியரும் பெண்ணும் ஓரினம். நான் வேற்றினத்தவள். அதுதான் அவர்களுக்கு ஆத்திரம், `இவள் என்ன நம்மைக் காட்டிக்கொடுப்பது?’ என்று.

நடந்தது தப்புதான் என்று அவர்களுக்கும் தெரியும். ஆனால், பிரச்னையே இல்லை என்று கண்ணை மூடிக்கொண்டுவிட்டால், அதற்கான தீர்வைத் தேடவேண்டாமே!

(அதுவரை பள்ளிக்கூடங்களில் இம்மாதிரியான செக்ஸ் வதை நடப்பதாக எவரும் வெளியில் சொல்லவில்லை. இப்போது, இருபத்து ஐந்து வருடங்களுக்குப்பின், அம்மாதிரிக் குற்றம் புரியும் ஆசிரியர்களை வேறொரு பள்ளிக்கு மாற்றம் செய்தால் போதாது, எங்காவது அலுவலகத்தில் மேசைமுன் உட்காரும் வேலை கொடுத்துவிடலாம் என்று யோசிக்கிறார்கள்).

அவர்கள் சற்று திக்குமுக்காடிவிட்டு, “ம்.. அவரையும் விசாரிப்போம்,” என்றார்கள். ஸ்ருதி இறங்கியிருந்தது.

அதன்பின் அந்தக் கபட ஆசிரியரை இன்னும் அதிகமாக வறுத்தெடுத்து, அவரது காலம் முடிவதற்குள், ஓய்வெடுத்துக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்கள்.

அவர் என்னைப் பார்க்கும்போதெல்லாம் நடுங்கினார். எனக்கு நிறைவாக இருந்தது.

அவரது சொரூபம் புரியாத மாணவர்கள், ஒரு காரை மலர்களால் அலங்கரித்து, மேளதாளத்துடன் தடபுடலாக அவரை வழியனுப்பினார்களாம். இதுவும் நான் கேள்விப்பட்டதுதான். என்னைத்தான் வேறு பள்ளிக்கு மாற்றல் செய்து விட்டிருந்தார்களே!

குற்றம் செய்தவர்கள் தப்பிக்க, தட்டிக் கேட்பவர்களைப் படாத பாடு படுத்துகிறது அதிகார வர்க்கம்.
இதனால்தான், `மற்றவர்கள் எப்படியோ தொலைகிறார்கள்! நாம் நன்றாக இருந்தால் சரி!’ என்று பலரும் அசிரத்தையாக இருக்கிறார்கள்.

பிறகு, `இது கலிகாலம்! அதனால்தான் உலகம் ஒரேயடியாக சீர்கெட்டுக் கிடக்கிறது!’ என்று எதையோ பழிப்பார்கள், தாமும் இவ்வுலகத்தின் ஓர் அங்கம்தான் என்பது புரியாது.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *