செண்பக ஜெகதீசன்

நாணகத் தில்லா ரியக்கம் மரப்பாவை

நாணா லுயிர்மருட்டி யற்று.

       –திருக்குறள் –1020(நாணுடைமை)

 

புதுக் கவிதையில்…

 

செய்யக் கூடாததைச் செய்ய

நாணும் குணம்

இதயத்தில் இல்லாதவரின்

உயிர் இயக்கம்,

மரபொம்மையைக் கயிற்றில் கட்டி

உயிருள்ளதுபோல் இயக்கி

ஏய்த்தல் போன்றதே…!

 

குறும்பாவில்…

 

உள்ளத்தில் நாணமில்லாதவரின் உயிரியக்கம்,

கயிற்றில் கட்டி மரபொம்மையை

உயிருள்ளதாய் இயக்குதல் ஒப்பதே…!

 

மரபுக் கவிதையில்…

 

செய்யத் தகாதன செய்வதற்கே

     செயலில் உளத்தில் நாணமிலார்

உய்யும் உலக வாழ்வினிலே

     உலவித் திரியும் இயக்கமது,

பொய்யாய் இயக்கப் பொம்மையதைப்

   பிடித்துக் கட்டி கயிற்றாலே

மெய்யாய் இயக்கும் இயக்கம்போல்

  மேதினி யதனில் இழுக்காமே…!

 

லிமரைக்கூ…

 

தகாதவை செய்ய நாணாதார் வாழ்வு,

மரப்பொம்மையை கயிற்றில் கட்டி இயக்குதல்போல்

ஆகுமே அகில வாழ்வில் தாழ்வு…!

 

கிராமிய பாணியில்…

 

வெக்கப்படு வெக்கப்படு

மனசார வெக்கப்படு

கெட்டதுசெய்ய வெக்கப்படு..

 

வாழ்க்கயில இதுக்கு

வெக்கப்படாதவன் ஆட்டமெல்லாம்

வெத்தாட்டமாப் போயிடுமே,

மரப்பொம்மய கயத்திலகட்டி

மனம்போல ஆட்டுறமாதிரி

மதிப்பில்லாமப் போயிடுமே..

 

அதால,

வெக்கப்படு வெக்கப்படு

மனசார வெக்கப்படு

கெட்டதுசெய்ய வெக்கப்படு…!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *