-மேகலா இராமமூர்த்தி

மலைமிசைத் தொடுத்த மலிந்துசெலல் நீத்தம்
தலைநாள் மாமலர் தண்துறைத் தயங்கக்
கடற்கரை மெலிக்குங் காவிரிப் பேரியாற்று
அறல்வார் நெடுங்கயத்து அருநிலை கலங்க
மாலிருள் நடுநாட் போகித் தன்னையர்
காலைத் தந்த கணைக்கோட்டு வாளைக்கு
அவ்வாங்கு உந்தி அஞ்சொல் பாண்மகள்
நெடுங்கொடி நுடங்கு நறவுமலி மறுகில்
பழஞ்செந் நெல்லின் முகவை கொள்ளாள்
கழங்குறழ் முத்தமொடு நன்கலம் பெறூஉம்
பயங்கெழு வைப்பிற் பல்வேல் எவ்வி…
(அகம்-126: நக்கீரர்)

குடமலையிலிருந்து தொடர்ந்துவிழுகின்ற காவிரியின் பெருவெள்ளமானது, முதல்நாள் தான் கொண்டுவந்து சேர்த்த மணமிகு மலர்கள் துறைகள்தோறும் பொலிந்துவிளங்க, கடற்கரையையே கரைத்துவிடும் அளவிற்குப் பாய்ந்தோடி வருகின்றது. கருமணல் ஒழுகுகின்ற அவ்வாற்றின் மடுவிலுள்ள நிலைகொள்ளாத நீர் கலங்குமாறு, நள்ளிருளில் ஆற்றைக் கடந்துசென்ற தன் தமையன்மார்கள் விடியற்காலையில் பிடித்துக்கொண்டுவந்து தன்னிடம் தந்த, திரண்ட கோடுகளையுடைய வாளைமீனைக் கையில் வாங்கினாள் கனிமொழிபேசும் பாணர்குலப் பைங்கிளி ஒருத்தி.

மகிழ்ச்சியில் மனம்துள்ள, நெடுங்கொடிகள் அசைவதும், கள் மிகுதியாக விற்கப்படுவதுமான ஒருதெருவின் வழியே நடந்துசென்றாள் அம்மீனை விற்க. (அப்போதே தமிழ்க்குடி கள்குடியில் திளைத்து மகிழ்ந்திருக்கின்றது என்பதை இதன்வாயிலாக அறிகிறோம்!).

தன் வாளைமீனை அத்தெருவில் விற்றவள், அதற்குப் பண்டமாற்றாகக் கடைக்காரர் தந்த செந்நெல்லை வாங்கமறுத்தாள். அவ்வனிதையின் உள்ளக்கிடக்கையை அறியாத அந்த வணிகர், ”நெல் வேண்டாமா? அப்படியானால் வேறென்ன வேண்டுமம்மா உனக்கு?” என்று அன்போடு அவளை வினவ, முத்துக்களாலான ஓர் அணிகலனைத் தொட்டுக்காட்டினாள் அவள்.

கடல்வளங்கொழிக்கும் வேளிர்குல அரசனான ’எவ்வி’யின் ஆட்சி செவ்வையாய் நடக்கும் ஊர் அது! அங்கே அம்மங்கை கேட்டது கிடைக்காமலா போய்விடும்? ”முத்துமாலைதானே வேண்டும்? இந்தா…பெற்றுக்கொள்!” என்று அந்த வணிகரும் கழங்குகளையொத்த பெரிய முத்துக்களால் கோக்கப்பட்ட ஒளிவீசும் மாலையை அவள்கையில் உடனே அளித்துவிட, முத்தைப்பழிக்கும் தன் வெண்பற்களைக் காட்டி முறுவலித்தாள் அந்தப் பாண்மகள்!

சங்கப் பெரும்புலவர் நக்கீரரின் அருந்தமிழ்ப் பாடலிது. இதில் பேசப்படும், கடற்கரையை மெலிக்கும் காவிரிப் பேராற்றை வியப்பதா அல்லது மீனைக் கொடுத்து முத்தாரம் வாங்கிய அந்த வித்தகியை வியப்பதா?  பட்டிமன்றம் வைத்துத்தான் விடைகாண வேண்டும்!

ஆறுகளில் புதுவெள்ளம் பொங்கிவருவதைப் பெருவிழாவாகக் கொண்டாடும் வழக்கம் பண்டைத் தமிழரிடத்து இருந்திருக்கின்றது. அதன் அன்றைய பெயர் ’புதுப்புனல் விழா’ என்பதாகும். அவ்விழாவே இந்நாளில் ’ஆடிப்பெருக்கு’ என்று பெயர்மாற்றம் பெற்றுள்ளது எனலாம். இப்போதெல்லாம் ஆடிமாதத்தில் ஆற்றிலே வெள்ளப்பெருக்கை அவ்வளவாகக் காணமுடிவதில்லை; எனினும், வீட்டிலே சித்திரான்னங்களைத் தயார்செய்து எடுத்துக்கொண்டு, ஆற்றங்கரைகளில் சுற்றஞ்சூழ அமர்ந்துண்ணும் வழக்கம் இன்னமும் சில (கிராம) மக்களிடம் இருந்துவருவது நம் மரபின் எச்சம் இன்னமும் மிச்சமிருக்கின்றது எனும் நம்பிக்கையை நம்முள் விதைக்கின்றது!

சரி, புகார் நகருக்கு அருகிலுள்ள கழார் எனும் காவிரித்துறைக்குச் சென்று அங்கு நடைபெறும் புதுப்புனல் விழாவைக் கண்டுவருவோம்!

சோழ நன்னாட்டின் காவிரிக்கரையில் அமைந்திருந்த வளமான ஊர் கழார். அதனை ஆண்ட குறுநில மன்னன் மத்தி என்பான். அவன்  குறித்துச் சில செய்திகள்… 

சோழரின் ஆட்சியின்கீழ் இருந்த கழார்த் துறையை ஆண்ட பரதவர்கோமானான மத்தி, பெருவீரன். சோழமன்னனின் ஆணைக்கிணங்க, எழினி என்னும் மற்றொரு குறுநில மன்னனோடு போர்புரிந்த மத்தி, அவன் பல்லைப் பிடுங்கிக்கொண்டுவந்து தன் கோட்டைக் கதவின் வாயிலில் பதித்தானாம். கேட்கவே அச்சமாக இருக்கிறதல்லவா? 

அஞ்சத்தக்க பெருவீரனான அந்த மத்தியின் ஊரான கழாரில் புதுப்புனல் விழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாய்க் கொண்டாடப்படுவது வழக்கம். அவ்வாறு புதுப்புனல் விழா நடைபெறவிருந்த நன்னாள் அது! மன்னன் கரிகால்வளவனும் அவனுடைய கலிகொள் சுற்றத்தாரும் கழார்த் துறையில் வந்து கூடிவிட்டனர் விழாக்காண!

கரிகாலனின் அருகே அமர்ந்திருந்தாள் அவன் ஆசைமகள் ஆதிமந்தி. அவள் முகத்திலேதான் எத்தகைய மந்தகாசப் புன்னகை! இருக்காதா பின்னே…? இன்னும் சற்றுநேரத்தில் அவள் காதற்கணவனும், ஆட்டத்தில் தேர்ந்தவனுமான ’அத்தி’ காவிரிப்புனலில் நீச்சல்நடனம் நிகழ்த்தி அனைவரையும் மகிழ்விக்கக் காத்திருந்தான். அந்த பூரிப்புதான் ஆதிமந்தியின் முகத்தில் புன்னகையாய்ப் பூத்திருந்தது! (ஆட்டத்தில் தேர்ந்தவன் என்பதாலேயே அவன் ’ஆட்டனத்தி’ என்றழைக்கப்பட்டான்; அவன் சேரமன்னன் என்று குறிக்கப்படுகின்றான்.)

ஒளிமிகுபொறிகள் அவன் சேவடிகளில் திகழும் வீரக்கழல்களில் மின்ன, கஞ்சத்தாளம் ஒலிக்க, இணையில்லா ஆணழகனான அத்தி தன் ஆட்டத்தைத் தொடங்கினான். அனைவரும் இமைக்க மறந்து அவன் நடனத்தையே பார்த்திருக்க, திடீரென்று பாய்ந்துவந்த காவிரியின் பெருவெள்ளமானது அத்தியை அடித்துச்சென்றுவிட்டது. இதனைச் சற்றும் எதிர்பாராத அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

உண்மையில் நிகழ்ந்ததாக இலக்கியங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள இச்சம்பவத்தைத் தன் அகப்பாடல் ஒன்றில் அழகாய்ப் பயன்படுத்தியுள்ளார் சங்கப் புலவர் பரணர்.

சேரிப்பரத்தையைத் தேடிச்சென்ற ஒரு மருதநிலத் தலைவன், அவளிடமிருந்து மீண்டு, தன் பழைய காதலியான இற்பரத்தையை நாடி வருகின்றான் (காதல்மன்னன் போலிருக்கிறது!). அவனைக் கண்ட இற்பரத்தை தன்முகத்தில் இகழ்ச்சிக்குறிப்புத் தோன்ற, ”என்னருமைத் தலைவனே! அத்தியின் அழகைக்கண்டு நயந்த காவிரிப்பெண்ணாள், அவனைக் கவர்ந்துசென்று கடலில் ஒளித்ததுபோல், சேரிப்பரத்தை உன்னை என்னோடு சேரவிடாது கவர்ந்துசென்று ஒளித்தாலும் நான் உன்னிடம் ஊடல் கொள்ளமாட்டேன்; உன்னை வெறுக்கவும் மாட்டேன்” என்று பகடிசெய்வதாக இப்பாடல் அமைந்துள்ளது.

மலிபுனல்  பொருத  மருதொங்கு படப்பை
ஒலிகதிர்க்  கழனிக்  கழாஅர்  முன்துறை
கலிகொள்  சுற்றமொடு  கரிகால்  காணத்
தண்பதம்  கொண்டு  தவிர்த்த  இன்னிசை
ஒண்பொறிப்  புனைகழல்  சேவடி  புரளக்
கருங்கச்சு  யாத்த  காண்பின்  அவ்வயிற்று
இரும்பொலப்  பாண்டில்  மணியொடு  தெளிர்ப்பப்
புனல்நயந்து ஆடும் அத்தி அணிநயந்து
காவிரி கொண்டு ஒளித் தாங்கு  மன்னோ!
நும்வயிற்  புலத்தல் செல்லேம்…
(அகம்: 376 – பரணர்)

நீச்சல்நடனம் ஆடிய அத்தியைக் கவர்ந்துசென்ற காவிரிப்பெண்ணாள், அவனைக் கடலில் ஒளித்தாள் என்கிறார் பரணர். அந்த ஆடலரசன் உயிரோடு மீண்டானா? அல்லது…கடலிலேயே மாண்டானா? என்ற பதைபதைப்பு நமக்கும் ஏற்படவே செய்கின்றது.

இதற்கான விடை விரைவில்!

(தொடரும்)

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *