-மேகலா இராமமூர்த்தி

இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான ஒளிப்படத்தை எடுத்தவரும், அதன் தேர்வாளரும் ஒருவரே; அவர்தான், நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியரான திருமதி. சாந்தி மாரியப்பன்! அவருக்கு நம் நன்றியை முதலில் பதிவுசெய்துவிடுவோம்!

bulls-fight

 மாடுகள் ஒன்றோடொன்று முட்டிக்கொள்ளும் இக்காட்சி, ”வடித்த சோற்றுக்கஞ்சி அகன்ற தெருவினில் ஆறாய் ஓட, அந்தக் கஞ்சியாற்றில் நின்றபடி இரு எருதுகள் பொருததாலே அது சேறாய் மாறியது” என்று புகார் நகரத்தின் சோற்றுவளம் பேசும் பட்டினப்பாலை வரிகளை எனக்கு நினைவூட்டுகின்றது.

….அகனட்டிற்
சோறுவாக்கிய கொழுங்கஞ்சி
யாறுபோலப்  பரந்தொழுகி
ஏறுபொரச் சேறாகி… (பட்டினப்பாலை: 43-46)

இக்காட்சி நம் கவிஞர்களுக்கு எத்தகைய நினைவுகளைக் கிளறியிருக்கின்றது என்பதை அறிந்துவருவோம் இனி!

***

ஆறாமறிவை அடையாத உயிர்களெல்லாம் சண்டையின்றிச் சமாதானமாய் வாழ்ந்திருக்க, ஆறறிவு படைத்த மனிதன்மட்டும் எப்போதும் சண்டையிட்டு மண்டையை உடைத்துக்கொள்கிறானே, ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு என்பதை உணர மறுக்கிறானே என்று வருந்துகின்றார் திரு. சி.ஜெயபாரதன்.

காளைச் சண்டைகள்,
கோழிச் சண்டைகள்,
யானைச் சண்டைகள்,
ரோமா புரியில்
மானிட விலங்குச் சண்டைகள்,
அனுதினம்
ஆண் பெண் சண்டைகள்,
ஆயுதப் போர்கள்,
அணுகுண்டு யுத்தம்,
உலகப் போர்கள்,
யுக யுகமாய் நேர்வதைத்
தவிர்த்தாயா ?
தடுக்க நீ முயன்றாயா ?
கலை உலகில்,
சண்டை இல்லாத
திரைப் படங்கள் குறைவு !
சண்டையில்
மண்டை உடைந்தாலும் மாந்தர்
மரணம் அடைந்தாலும்,
சண்டைகள் குறையா !
பிறவிக் குணமாய்ப்
பிறப்புரி மையாய்
பரம்பரை வழக்கமாய்
மரண கீதம் பாடுகிறோம் !
ஆறறிவு படைத்த மனிதா !
ஈரறிவுள்ள எறும்பினம்,
தேனீக்கள்
சேர்ந்து வாழ்வதைக் காணடா !
தேன் திரட்டும்
ஆக்க வினையைப் பாரடா !
ஊக்கமுடன், பொறுமையுடன்,
ஒன்று சேர்ந்து வாழடா !
மூடச் சண்டையில்
நிம்மதி ஏதடா ?
ஒற்றுமையே வேத மென்று
ஓதடா !

***

இவ்வாரம் அதிகமான கவிதைகளைக் காண முடியாதது சற்று ஏமாற்றத்தையே அளிக்கின்றது. 

இனி, இவ்வாரத்தின் சிறந்த கவிதையை உங்கள் பார்வைக்குத் தருகிறேன்.

ஆறாவதாய்

இனத்துடன்
இனம் மோதுவது
மனிதனின் க(வ)லை…

இதை இப்போது
கற்றுக்கொண்டுவிட்டன
கால்நடைகளும்!

மனிதனைப் பார்த்து
மாடுகளுக்கும் வந்தது-
இந்த ஆறாம் அறிவு!

”ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் ஆறாமறிவு பெற்ற மானுடனின் உயர்பண்புகளல்லவா! ஒற்றுமையை விரும்பும் மாடுகளே! நீங்கள் ஒருவரோடொருவர் பொருதழிவதைப் பார்த்தால் அந்த ஆறாமறிவு உங்களுக்கும் வந்துவிட்டதோ என்று எண்ணத்தோன்றுகின்றதே!” என்று வேதனையோடு வேடிக்கை செய்திருக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்அவரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *