மீனாட்சி பாலகணேஷ்

கானின் வாழைக்கனியும் மாவின் கனியும்!

பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் அழகியல் பார்வையில் பல தொன்மங்களையும், புராணக் கதைகளையும், கற்பனைக் கதைகளையும் கொண்டு திகழ்ந்தாலும் பல பாடல்கள் அவற்றினை இயற்றிய புலவோரின் திறமையில் அணிநயம், சந்தநயம் கொண்டு மிளிர்வதுஅவற்றினைப் பயில்வோருக்கு மிக்க இன்பம் பயப்பதாகும்.

அவ்விதத்தில் இன்று நாம் காணப்போவது புதுக்கோட்டை சமஸ்தானம் திருப்புல்வயலில் எழுந்தருளி இருக்கும் குமரக்கடவுள் மீது வீரபத்திரக்கவிராயர் அவர்கள் இயற்றியுள்ள குமரமலைப் பிள்ளைத்தமிழிலிருந்து இரு பாடல்கள் ஆகும். இவை சிறுபறைப் பருவத்திற்கானவை.

முற்றும் கற்றுணர்ந்த பெரியோர், சந்தநயம் தோன்றி விளங்கப் பாடுவதில் அருணகிரியாரை விஞ்சியவர் கிடையாதென்பர். அதற்கொப்ப இப்பாடல் ‘முத்தைத்தரு,’ என்ற திருப்புகழை நினைவு படுத்துகின்றது. இத்திருப்புகழில் தகப்பனாகிய சிவபிரானுக்கு முருகப்பெருமான் பிரணவ மந்திரத்தின் பொருளுரைத்த செய்தி கூறப்படுகிறது.

ame1
இப்பிள்ளைத்தமிழ்ப்பாடல், சந்தநயம் மட்டுமின்றி அருணகிரியாரின் திருப்புகழ் போன்றே அதே தொன்மத்தைப் பொதிந்து அமைந்துள்ளது மிக்க வியப்பைத் தருகின்றது. அருணகிரிநாதரின் திருப்புகழின் சந்தத் தாக்கத்தினை இப்பாடல்களில் உணரலாம். முதற்கண், முதல்பாடலை அதே சந்தநயத்திலேயே பாடிப்பார்த்துக் கொள்ளலாமே!

முச்சுடர் முக்கண் முதற்கட வுட்கொர்
முதற்படு பிரணவ மா
முற்பொரு ளைத்தெரி வித்தகு ருக்கண்
முகத்தருள் விழியுடை யாய்
இச்சக மற்றுள வெச்சக முற்றினு
மிச்சக மொடுபுகழ் வோய்
இக்குவி லிக்குயர் மைத்துன செச்சை
யியக்குறு மழகளி றே
கச்சப மொத்த புறத்தடி மைக்குழல்
கட்கய லகலிகை யாய்க்
கற்சிலை யைச்செய் பதத்தர் மகிழ்ச்சி
கருத்தெழ வருசுதை யாங்
கொச்சை மொழிக்குயி லைப்புண ருத்தம
கொட்டுக சிறுபறை யே
கொற்றவ யிற்கும ரச்சிலை யுற்றவ
கொட்டுக சிறுபறை யே.

(குமரமலைப்பிள்ளைத்தமிழ்- சிறுபறைப்பருவம்- வீரபத்திரக் கவிராயர்)

அருமையான சந்தநயம்! கருத்துச்செறிவு! பொருள்நயத்தையும் காணலாமா?

சூரியன், சந்திரன், நெருப்பு ஆகிய மூன்று சுடர்களும் மூன்று கண்களாக விளங்கும் முதற்கடவுள் சிவபிரான்! அவனுக்கு, அந்த முழுமுதற்பொருளுக்கு, பிரணவ மாமந்திரத்தின் பொருளை உணர்த்தியருளிய குருநாதன் குமரப்பெருமான்! இதனைத்தான் அருணகிரிநாதரும், ‘முக்கட்பரமற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்து,’ எனப்பாடினார்.

தனது ஆறுமுகங்களிலும் இலங்கும் அருள்பொழியும் விழிகளை உடையவன் அக்குமரன். இந்த உலகம் (இச்சகம்) மற்றும் இருக்கின்ற எல்லா உலகங்களிலும் (எச்சகம்) இவனைக்காணும் அனைவரும் ஆசையுடன் (இச்சகம், இச்சை) புகழ்ந்து போற்றுகின்றனர். இடுக்கண் (இக்கு) வருங்காலத்து உடன்வந்து காப்பவன் அவனே! ‘மைத்துன!’ என்பதனை விளியாகக் கொள்ளலாம்.

செச்சை எனப்படும் சந்தனக்குழம்பினைப் பூசிய இளமையான யானைக்கன்று போன்றவன் இச்சிறுகுமரன்.

ame2
தனது திருவடி பட்டதனால் ஒரு கற்சிலையை (கருங்கல்லை) அகலிகையாய் உருக்கொள்ளச்செய்த ‘பதத்தவர்’ எனத் திருமாலை, இராமனைப் புலவர் போற்றுகிறார். அகலிகையை, ‘ஆமைபோலும் (கச்சபம் ஒத்த) புறங்கால்களைக் கொண்டவள், மைபோலும் கருங்குழலினள், கயல்விழியாள்,’ எனவெல்லாம் வருணிக்கிறார். அவள் செய்த தாழ்ந்த செயலுக்குப்பின்பும் இத்தகைய உயரிய வருணனைக்கு எவ்வாறு உரியவளாயினாள் எனும் வியப்பெழுகின்றது! தவறையுணர்ந்து அதன்பலனை கற்சிலையாய்க்கிடந்து அனுபவித்தவள்; இராமன் திருவடிபட்டுத் தன் சுய உருவான அகலிகையாய் மாறி அவனுடைய திருவருளுக்கும் உரிமையானவள்; ஆகவே இந்த வருணனைக்கும் அருகதை உடையவள் எனத் தெரிவிக்கிறார் போலும்!

அவ்வாறு செய்த இராமனாகிய திருமாலின் மனம் மகிழுமாறு வள்ளிக்குறமகளை மணந்துகொண்டவன் இக்குமரன். அக்குறவள்ளியோ மழலைமொழி பேசும் குயில் போன்றவள்.

‘இத்தகு செயல்களைச் செய்த உத்தமனாகிய குமரனே, உனது சிறியபறையை முழக்குவாயாக! கொற்றவனே! வில்லேந்திய குமரனே! சிறுபறையை முழக்குவாயாக!’ எனப்புலவர் வேண்டுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. சிலை என்பதற்கு மலை எனவும் அகராதியில் ஒரு பொருள் உண்டு. ஆகவே, ‘கிரௌஞ்ச மலையைப்பொடி செய்த முருகனே,’ எனவும் பொருள் கொள்ளலாம். முருகனை நாம் வேலேந்திய வடிவத்தில் மட்டுமே அறிந்தவர்களாதலின் வில்லேந்திய வடிவம் சிறிது ஆச்சரியத்தினை விளைவிக்கும்!

(திருவையாற்றில் ஐயாறப்பர்- அறம் வளர்த்த நாயகி திருக்கோவிலில், முருகப்பெருமானின் ஒரு சிலைவடிவம் வில்லேந்திய நிலையில் காணப்படுகிறது.)

*****

காணப்போகும் அடுத்தபாடல் சந்தநயத்துடன் அருமையான சொல்நயமும் செறிந்தமைந்து படிப்போரைக் களிப்பெய்த வைக்கின்றது. முதல்பாடலைப் போலவே இதனையும் சிறிது பாடிப்பார்த்துவிட்டுப் பின் பொருளைக் காணலாம்.

கானின் வாழைக் கனியொடு மாவின்
கனியும்வி ருப்பமு றுங்
காமரு மேனிக் கோமள செல்வக்
கடவுளர் நாய கமே
மானின் மானக் கயல்விழி கூரும்
மடவியர் நட்புற மெய்
வாடியு நேடித் தீநர கெய்தும்
வகையற வேநினை யே
கோனென் பாரைப் பரகதி சேர்மின்
குறைக டவிர்ப்பி ரெனக்
கூரிய ஞானப் பேறருள் சைவக்
குலமொளிர் தீப கமே
தேனின் னீபப் புயசயி லேச
சிறுபறை கொட்டுக வே
திருவ மிகுத்திடு குமரம லைக்கிறை
சிறுபறை கொட்டு கவே.

(குமரமலைப்பிள்ளைத்தமிழ்- சிறுபறைப்பருவம்- வீரபத்திரக் கவிராயர்)

‘கானகத்தில் விளையும் வாழைக்கனியொடு மாமரத்தின் கனியும் விருப்பமுறும் அழகான திருவடிவம் கொண்டு கடவுளர்கட்கெல்லாம் நாயகன் போலும் விளங்குபவனே!’ என விளிக்கிறார். புரியவில்லையே! சிறிது குழப்பம் தான் நமக்கு. புலவரின் சொல்லாடல் அத்துணை அழகான உட்பொருள்செறிந்தது!

இங்கு ‘கானின் வாழைக்கனி’ என அவர் குறிப்பிடுவது வள்ளிநாயகியைத்தான். (கானின் வாழ் ஐ கன்னி- வள்ளி). பிரமிப்பாக இல்லை? கானகத்தில் வாழும் அழகிய குறமகளான வள்ளி எனும் கன்னி! அடுத்து மா எனும் யானையின் மகளான கன்னி- தெய்வயானை எனும் தேவகுஞ்சரி! (மா இன் கன்னி- தேவகுஞ்சரி) கன்னி என்பது பாடலுக்காகக் கனி எனப்பட்டது. ஆகவே வள்ளியும் தேவகுஞ்சரியும் விரும்பும் திருமேனி அழகன் குமரன் என இப்போது தெளிகிறோம்.

‘மானினுடையதைப் போன்றதும், அழகான மகரமீனைப் போன்றதும், கயலைப்போன்றதுமான விழிகளால் தமது விருப்பத்தைத் தெரிவிக்கும் பெண்களின் நட்பைக்கொண்டு, உடல்மிக வாடிடும் வண்ணம் தேடிச்சென்று தீயாகிய பாழ்நரகத்தை எய்துகின்ற செயலை ஒழிக்க வழியின்றி, உன்னிடம் வந்துற்று, உன்னையே ‘அரசே, கோவே, காக்க,’ என வேண்டுபவர்களை மேலான பரகதிக்குச் செலுத்துபவன் நீ! குறைகளைப் போக்குபவன் நீ! உயர்ந்த ஞானப்பேற்றினையும் அருளுபவன் நீ! சைவநெறி தழைக்கவந்து ஒளிரும் தீபம் போன்றவனும் நீயே!

‘தேன் சொரியும் கடம்பமலர்மாலைகளை அணிந்த தோள்களை உடையவனே! மலைவாழ் முருகனே! சிறுபறை கொட்டுவாயாக! செல்வவளம் கொழிக்கும் குமரமலைக்கிறைவனே சிறுபறை முழக்குவாயாக!’ என வேண்டுகிறார்.

இப்பாடலின் கருத்தும் அருணகிரிநாதரின் பாடலில் காணும் கருத்துக்களைப்போலவே உள்ளது ஆச்சரியத்தை விளைவிக்கின்றது. ‘மங்கையரின் மையலில் மயங்கி உழலும் மானிடப்பிறவியாகிய என்னை மீட்டு உன் திருவடியில் சேர்த்துக்கொள்வாய்,’ என வேண்டும் பாங்கு அருணகிரிநாதரின் பாடல்களின் கருத்துக்களைப் பிரதிபலிக்கின்றது.

மீனாட்சி க. (மீனாட்சி பாலகணேஷ்)
{முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,
கற்பகம் பல்கலைக் கழகம், கோவை,
நெறியாளர்: முனைவர் ப. தமிழரசி,
தமிழ்த்துறைத் தலைவர்.}

********************************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *