-தமிழ்த்தேனீ

”எத்தனை தடவை சொல்றது கதவைத் திறந்தா  முழுசு திற… இப்பிடி அரைகுறையாத் திறக்காதே!  போகும்போது வரும்போது  கால் விரலைப் பதம் பாக்குதுன்னு”  என்று  எரிந்து விழுந்தார் முருகன். ”எதுக்கு அத்தனை தடவை சொல்றீங்க?  ஒருதடவை சொல்லிட்டு நிறுத்த வேண்டியதுதானே?”  என்றாள் ரோஷமாக வள்ளி. ”இத்தனை தடவை  சொல்லியே மாத்திக்க மாட்டேங்கற  இதுலே உனக்கு ரோஷம்வேற வருது; ஒரு தடவை சொல்லும்போதே  மாத்திகிட்டா நான் ஏன் மறுபடியும் சொல்லப் போறேன்?” என்றார் முருகன். ”சரிங்க எதுக்கெடுத்தாலும் கோவப்பட்டு கத்திகிட்டு இருக்கறதே  உங்களுக்கு வழக்கமாபோச்சு!” என்றாள் வள்ளி. ”ஆமாம் நான் என்ன  பயித்தியக்காரனா  சும்மாக் கத்த…?  நானும் பொறுமையாச் சொல்லிப்பாத்துட்டு அதை நீ காதிலேயும் வாங்கறதில்லே… மனசிலேயும் வாங்கறது இல்லேன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம்தானே  கத்தறேன். என்னைக் கத்தவிடாமே இருக்கியா நீ?  நானும் அமைதியா இருக்கணும்னுதான் பாக்கறேன். முடியலையே…!”  என்று அலுத்துக் கொண்டார் முருகன்..

”சரி, சரி இனிமே பாத்துச் செய்யறேன் கத்தாமே இருங்க!”  என்றாள் வள்ளி; ”என்னை அடக்காதே  நீ! ஒரு தடவை சொன்னவுடனே அதை மாத்திக்க!” என்றார் முருகன்.  வள்ளி அவரையே  உற்றுப்பார்த்துவிட்டு  படுக்கைஅறைக்குப் போய்ப் படுத்துக் கொண்டு புத்தகம் படிக்க ஆரம்பித்தாள். முருகன் வந்து  கம்ப்யூட்டரில் உட்கார்ந்து   எதையாவது  முகநூலில் எழுதலாம் என்று ஆரம்பித்தார்; ஆனாலும் அவர் மனம்  இவ கொஞ்சமாவது மதிக்கறாளா, புரிஞ்சிக்கறாளா  என்றே யோசித்துக் கொண்டே இருந்தது. சற்றுநேரம் கழித்துச் ”சரி… சாப்பிட வாங்க!”  என்றாள் வள்ளி. தட்டுக்களை எடுத்துக் கழுவி மேசையில் வைத்துவிட்டுச் சமையலறைக்குப்போய் சாதம், கறி எல்லாவற்றையும் எடுத்து வர அவரும்  உதவி,  எல்லாவற்றையும்  கொண்டுவந்து வைத்துவிட்டுச் சாப்பிட உட்கார்ந்தனர் இருவரும். அவரை மறந்து ரசித்து  சாப்பிட்டுக்கொண்டே இருந்தார்.

வள்ளியின் குரல்… ”நல்லா இருக்கா?” என்றாள். ”உண்மையிலேயே  நல்லா இருக்கு அதான் ரெண்டாவது தடவை குழம்பே போட்டுகிட்டேன்!”  என்றார் சற்றே தணிந்த  குரலில். ”அது சரி… நல்லா  சமைக்கறே, ருசியா  சமைக்கறே… ஆனா, சொன்னதைக் கேக்கவே  மாட்டேங்கறையே  ஏன் கொஞ்சம் அனுசரிச்சுப் போனாத்தான் என்னவாம்?” என்றார். சாப்பாட்டு மேசையிலேகூட  எதுக்காவது என்னைத் திட்டிகிட்டே இருப்பீங்களா  சாப்பிடுங்க என்றாள் வள்ளி. நான் இப்போ உன்னை என்னா திட்டினேன். நான் பேசினாவே அதைத்  திட்றதுன்னு ஏன் எடுத்துக்கறே  என்றார் முருகன். வள்ளிக்குப்  புரைக்கேறியது.   பதறிப்போய் யாரோ நினைக்கறாங்க உன்னை…  இந்தா… தண்ணி குடி என்றார் முருகன்.

சாப்பிட்டு முடித்ததும் மீண்டும் உணவு வகைகளை உள்ளே கொண்டு வைப்பதற்கு உதவிவிட்டுக்  காலையிலேருந்து  வேலை செஞ்சுகிட்டே இருக்கே.  போயி கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடும்மா. நான் இந்த மேஜையைத் துடைக்கறேன், கதவெல்லாம் சாத்தித் தாப்பாள் போட்டுட்டு அப்புறம் கம்ப்யூட்டர்லே உக்கார்ரேன், கவலைப்படாமே  கொஞ்சநேரம் தூங்கி எழுந்திரு என்றார் கனிவாக.  வள்ளியும் சரி என்று சொல்லிவிட்டு உள்ளே போய்ப்படுத்தாள். சற்று நேரத்திலே சத்தமே காணுமே என்று எட்டிப் பார்த்தார் முருகன். வள்ளி ஆழ்ந்து தூங்கிக் கொன்டிருந்தாள். இவளுக்கு மட்டும் எப்பிடி படுத்தவுடனே தூக்கம் வருதுன்னு தெரியலே என்று நினைத்துகொண்டு மனதுக்குள் சிரித்தபடி வந்து கணிணியில் உட்கார்ந்தார்.

ஐந்து நிமிடத்திலே தொலைபேசி அழைத்தது.  ஐயோ பாவம்  இவ தூங்கிட்டு இருக்காளே நாம் யாருன்னு பாப்போம்  என்று தொலைபேசியை எடுத்தார் . மறுபுறத்தில் வள்ளியின் தங்கை லதா.  வள்ளி எப்பிடி இருக்கே என்றாள். நல்லா இருக்கேன் லதா  நீ எப்பிடி இருக்கே  என்றாள்  வள்ளி உற்சாகமான  குரலில். சரி  நாம ஏதோ ஒட்டுக்கேக்கறோம்னு நெனைச்சுப் போறாங்க என்று நினைத்து ரிசிவரை வைத்தார் முருகன். ஐய்யயோ  என்று பதட்டமாக  வள்லியின் குரல் கேக்கவே  ஓடிப்போய்  என்னாச்சு வள்ளி என்றார் முருகன். ஒண்ணுமில்லேங்க  லதாகிட்டே பேசிகிட்டு இருக்கேன் என்றாள் வள்ளி. அதுக்கு ஏன் ஐயய்யோ… அப்பப்பான்னு ஒரு அலறல் மெதுவாப் பேசேன் என்றார் முருகன்.  அந்தப் பக்கம்  லதா  என்ன  உங்க வீட்டுக்காரர் கோவமா பேசறாரு என்றாள். அது ஒண்னுமில்லே  நீ சொன்னியே  அந்த  ஆளைக் கட்சியைவிட்டு நீக்கிட்டாங்கன்னு;  அதுக்கு ஐயய்யோன்னு சொன்னேனே அதுக்குதான்  வேறொண்ணுமில்லே  என்றபடி  சரி  அதுக்குப்புறம்  என்ன ஆச்சு என்றாள் சாவதானமாக.  மீண்டும் வந்து  கணிணியில் உட்கார்ந்தவருக்கு ஏதேதோ யோசனைகள்.   திருமணம் ஆனதும்  சத்திரத்திலிருந்து  அவர்கள் தங்கிஇருந்த  குடித்தன வீட்டிற்கு வந்ததும் பக்கத்திலே நிற்க வைத்து ஆரத்தி எடுத்தார்கள்.  இந்தப் பக்கம் யாரோ ஏதோ கேட்டதற்கு பதில் சொல்லிவிட்டு திரும்பிப் பார்த்தால்  வள்ளியைக் காணவில்லை.  எல்லோர்  எதிரிலும் தேடினால் கிண்டல் செய்வார்களே என்று  உள்ளே போனார்  முருகன், அங்கே சமையற்கட்டில் அம்மா நான் பாத்துக்கறேன், நீங்க  கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க  என்று தன் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள் வள்ளி. அன்று தானாகவே வந்து பொறுப்பெடுத்துக் கொண்ட வள்ளி இன்றும் பொறுப்பிலிருந்து  விலகாமல் நிர்வாகம் செய்துவருகிறாள்.

சரி  சும்மா உக்காந்து  யோசனை செய்து கொண்டே  இருக்கறதைவிட ஏதேனும் உருப்படியாக செய்யலாம் என்று  கணிணியிலிருந்து எழுந்து கார் ஷெட்டுக்கு போயி  காரைத் துடைக்கலாம் என்று போய்ப்பார்த்தால்  கார் சுத்தமாக இருந்தது. எல்லா வேலையையும் இவளே செஞ்சிருவா, எதுக்காவது உதவிக்குக் கூப்புடுவா  அதைப் போயி செய்யலாம்னா அதையும் இவளே செஞ்சிருவா. அவசரக் குடுக்கை என்று மனதுக்குள் சிரித்தபடி இப்பிடி அறுபத்தி ஐஞ்சு வயசாகியும்  உதவிக்கு ஒரு வேலைக்காரி கூட வெச்சிக்காமே இவளே உழைக்கறா, தோட்டத்தைச் சீரா வெச்சிக்கறா, எல்லாச் செடிக்கும் தண்ணி கொட்டி  இவளைப் பார்த்தாவே  எல்லாச் செடியும்  மரமும்  பூக்கொடியும்  இவ கைபட்டவுடனே மகிழ்ந்து போயி  பூவாக் கொட்றது, பழமாக் கொட்றது.

நல்ல ராசியான  கை;  அது மட்டுமில்லே!  நல்ல  விகல்பமில்லாத  மனசு, பக்தி எல்லாம் இருக்கு, ஆனா  கொஞ்சம் பொறுமையை வளத்துண்டா  நல்லா இருக்கும் என்று நினைத்துக்கொண்டு  மீண்டும் கணிணியில் வந்து உட்கார்ந்தார்  முருகன். இந்தாங்க காப்பி  குடிங்க என்றாள் வள்ளி. காப்பியை நீட்டியபடி, இவ இப்பத்தானே  தூங்கிட்டு இருந்தா  அதுக்குள்ளே  ஏன் எழுந்து  காப்பி போட்டா என்று நினைத்தபடி  ஏம்மா  கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுன்னு சொன்னேனே என்றா முருகன். இல்லே  மணியாச்சு  சாயங்காலம் கடைக்குப் போயி கொஞ்சம் மளிகை சாமான் வாங்கணும்; நாளைக்கு நம்ம எதிர்வீட்டு  பால்கிருஷ்ணனும்  லக்‌ஷ்மியும் யூஎச்லேருந்து வராங்க.  அவங்களுக்கு  காலையிலே ஏதாவது செஞ்சு எடுத்துட்டுப் போயி குடுக்கணும் என்றாள். மாலை கடைக்குப் ரெண்டு பேரும் போயி எல்லாம் வாங்கிட்டு வந்தாச்சு. சரி, சீக்கிரமா படுத்துத் தூங்கு. காலையிலே அஞ்சரை மணிக்கெல்லாம் எழுந்துக்கறே  என்றார் முருகன். சரி என்று சொல்லிவிட்டு  இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு   வள்ளி நான் போயி தூங்கறேன் என்றபடி உள்ளே போனாள்.

எல்லாக் கதவும் போட்டிருக்கா என்றெல்லாம் பார்த்து எல்லாவற்றையும்  பூட்டிவிட்டுச் சமையற்கட்டில் கியாஸ் மூடிஇருக்கான்னு பாக்கலாம்ன்னு போனா  கியாசை சரியாவே மூடலே, அவருக்கு கோவம் கோவமாக வந்தது. எவ்ளோ ஆபத்து எத்தனை தடவை சொன்னாலும் கேக்க மாடேங்கறா சரியா மூடினா என்ன என்கிற கோவத்தோடு அதைச் சரியாக மூடிவிட்டு, படுக்கை அறைக்குள் நுழைந்து  ஏம்மா வள்ளி  அந்த  கியாசை சரியா மூடுன்னு எத்தனை தடவை சொல்றது  என்றார்.    சரியா மூடலையா  நீங்கதான் மூடிட்டு வாங்களேன்; அதுக்கு ஏன் இப்பிடித் திட்றீங்க  என்றாள் வள்ளி, அவருக்கு  வந்த கோவத்திலே நான் இப்போ என்ன திட்டினேன்  ஏதாவது  தகாத வார்த்தை சொன்னேனா நல்லதைச் சொன்னா திட்றேன் திட்றேங்கறியே  இது நியாயமா?  என்றார். சரி சரி எனக்கு தூக்கம் வருதுன்னு சொல்லிட்டு  திரும்பிப் படுத்தாள் வள்ளி.

முருகன் கோவத்தை  அடக்கிக் கொன்டு  மீண்டும் கணினியின் முன்னால் வந்து உட்கார்ந்து  தன்னையே  சமாதானப்படுத்திக் கொண்டு தொலைக்காட்சிப் பெட்டியை உயிர்ப்பித்தார். செய்திகள்  வாசிப்பது  என்று முக்கியமான செய்தியை தப்பும் தவறுமான தமிழில் சொல்லிக் கொண்டிருக்கிறாள் ஒரு பெண்மணி. உள்ளே இருந்து  ஏங்க அந்த  டீவீ சத்தத்தைக் குறைங்க…  தூக்கமே வரலே  என்றாள் வள்ளி. இவ   நம்மை ஒண்ணுமே நிம்மதியாச் செய்ய விடமாட்டா  என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு  சரி சரி  நான் எது செஞ்சாலும் ஏதாவது  சொல்லு   மனுஷனை நிம்மதியா  விடாதே என்றார்  எரிச்சலுடன். தொலைக்காட்சிப் பெட்டியை அணைத்துவிட்டு .

தூங்கும்போதுகூட ஏதானும் திட்டிகிட்டே இருக்காதீங்க வந்துபடுங்க. நேத்து கூட   சரியாத் தூங்கலை நீங்க! இன்னிக்கு  மதியமும்  கொஞ்சநேரம் படுக்கலே  முதுகெல்லாம் வலிக்கும் என்றாள். அடடா இவ என்னிக்கு நம்மைப் புரிஞ்சிப்பா  நமக்கு எது  நிம்மதியா இருக்கும்னு புரிஞ்சிக்கவே மாட்டளா இவ என்று மனதுக்குள் வருந்தியபடி எல்லாம் வரேன் நீ தூங்கு என்றார்  எரிச்சலுடன். அவருக்கு ஒரு சந்தேகம் வந்தது கல்யாணம் ஆகி நாற்பது வருஷம் ஆச்சு.  இன்னமும் இவ என்னைப் புரிஞ்சு நடக்கமாட்டேங்கறாளே.  மனுஷன் என்ன ரோபோ மாதிரியா நடந்துக்க முடியும் உணர்ச்சியே இல்லாம  ஏன் இவளுக்கு ஒண்ணும் புரியலே.

அவருக்கு திருமணமான புதுசில் சம்பளம் 500 ரூபாய், அந்தக் காலத்திலேருந்து  இவருடைய  எல்லாக் கஷ்டநஷடங்களுக்கும் ஈடுகொடுத்து,  சிக்கனமா இருந்து பிள்ளைகளுக்கெல்லாம் திருமணம் செஞ்சு பேரன் பேத்தியெல்லாம் பாத்தாச்சு. அதெல்லாம் சரி… இவ நம்மோட குடும்பத்துக்காகவே  உழைச்சிகிட்டு இருக்கா,   அதெல்லாம் இல்லேன்னு சொல்லையே. ஆனா இவ இன்னமும்  கல்யாணம் ஆனப்போ இருந்தா மாதிரியே  இருக்காளே;  நான் எந்த நல்லதைச் சொன்னாலும் திட்றேன்னே  எடுத்துக்கறாளே எப்போத்தான் புரிஞ்சு நடந்துக்குவாளோ என்று கோவம் வந்தது.

பேருந்தில் எங்காவது  சென்றால் கூட பக்கத்திலே  இடம் கிடைக்கலேன்னு முன்னாடி  பெண்கள் இருக்கையிலே இவ போயி  உக்காந்துகிட்டு இருந்தாலும்  அப்பப்போ  இவளையே பாத்துகிட்டு  ஜன்னல் ஓரமா உக்காந்திருக்காளே கையை வெளியே நீட்டாமே இருக்கணுமேன்னு கவலைப்பட்டு உக்காந்து இருக்கற  இடத்திலேருந்து எழுந்துபோயி  அவ பக்கத்திலே நின்னு  கையை வெளியே நீட்டாதேன்னு சொன்னா இவரோட  அக்கறையை கொஞ்சமும் புரிஞ்சிக்காமே  எனக்கு தெரியும் என்று முறைச்சிண்டே பதில் சொல்லுவா இவ. நாம இவளைத் தாங்கு தாங்குன்னு தாங்கறோம்னு கொஞ்சமாவது புரிஞ்சிக்கறாளா இவ. நமக்கு இவமேலே எவ்ளோ அன்பு இருக்குன்னு கொஞ்சமாவது யோசிக்கறாளா  எதுவும் கிடையாது! என்று யோசித்துக் கொண்டே இருந்தவரை  என்ன ஆச்சு மணி பதினொண்ணு சீக்கிரம் வந்து படுங்க; முதுகு வலிக்கப் போவுது. எப்பொப் பார்த்தாலும் அந்தக் கம்ப்யூட்டர் முன்னாலே உக்காந்து,கண்ணைக் கெடுத்துக்கறீங்க. சரி  கிச்சன்லே பாலு காச்சி வெச்சிருக்கேன் ஒரு டம்ளர் பாலாவது குடிச்சிட்டு வந்து படுங்க என்று வள்ளியின் குரல் கேட்டது. அவருக்கு திடீர்ன்னு ஒரு சந்தேகம் ஆமா! இவ என்னைப் புரிஞ்சிக்கலேன்னு கோவப்படறோமே  நாம இவளைப் புரிஞ்சிகிட்டு இருக்கோமான்னு?  அது மட்டுமில்லே நாம இவளை நேசிக்கிறோமான்னு சந்தேகம் வந்தது. அவரையே அவர் அலசிக்கொண்டிருந்தார்.

இது வரைக்கும் இவளைத் தவிர வேற யாரையாவது எந்தப் பெண்ணையாவது  தப்பான கண்ணோட்டத்தோட பாத்திருக்கோமா  இல்லே, எப்பவும்  இவளுக்கு நல்லதைத்தானே சொல்றோம்;  ஒவ்வொரு புருஷன் மாதிரி  சுயநலமா இல்லையே நாம  இவளுக்கு ஒண்ணுன்னா  பதறிப் போறோம், இவளைக் கலந்து ஆலோசிக்காம இது வரைக்கும்  எதுவுமே செஞ்சதில்லையே நாம,  அம்மாவை எவ்ளோ நேசிச்சேனோ  அதே மாதிரிதானே  இவளையும் நேசிக்கறோம், இந்த உலகத்திலேயே நான் அதிகமா நேசிச்ச  எங்க அம்மாவுக்கு டாக்டர்   கான்ஸர்ன்னு  சொன்ன போதிலேருந்து   என்னைவிட  அதிகமா அவங்களைப் பத்தி தெரிஞ்சிகிட்டு அவங்களுக்கு  சிரிச்சமுகம் மாறாம  பாத்துப்பாத்து பணிவிடை  செஞ்சவதானே இவ.

எனக்குக் கூட  அம்மாவைப் பத்தி அவ்ளோ தெரியாது;  ஆனா இவளுக்கு  அம்மாவைப் பத்தி தெரியாததே கிடையாதே. அப்பிடிப்பட்ட  இவ!  இப்போ ஏன் எப்போப் பாத்தாலும்  சிடுசிடுப்பா  மாறிப்போனா?  எத்தனையோ உறவுக்காரங்க செஞ்ச துரோகம் அதையெல்லாம் தாங்கித் தாங்கித்தானோ இவளுக்கு  சிரிக்கவே மறந்து  ஒரு யந்திரமா ஆயிட்டாளோ.  இந்த  எல்லாத்தையும் நானும்தானே தாங்கினேன் அதை மறந்துட்டாளோ இவ?  நானும்தானே  அவ்ளோ துரோகத்துக்கு நடுவிலேயும் இவளையும் நல்லா பாத்துகிட்டேன். எனக்கு மட்டும் இவ மேலே உண்மையான  ஆசை இல்லாமலா  எல்லாம் செஞ்சேன். இவளுக்குத் தெரியாமே ஒரு துரும்பைக் கூட நான் நகத்தினது இல்லையே. இவளுக்கு எந்த விதத்திலேயும் ஒரு சின்னத் துரோகம் செய்யாமே  அப்பிடியே  பாதுகாத்து பாதுகாத்துதானே  பறவை அடை காக்கறா மாதிரி கூடவே வாழ்ந்திருக்கேன். அதுனாலே இவளோட மனசுக்கும் தெரியும்  நாம இவளை எவ்ளோ நேசிக்கறோம்னு.  ஆனா சிலபேருக்கு  அன்பை வெளியிலே காட்டத் தெரியாது. அதைப் புரிஞ்சிகிட்டதுனாலேதானே இவ என்ன சொன்னாலும் கேட்டுகிட்டு அமைதியா போறேன்.   அதுக்காக  இவங்களுக்கே  ஆபத்து ஏற்படக் கூடிய  சில விஷயங்களிலே விட்டுக் குடுக்க முடியலையே! எப்பிடி வேணா போகட்டும்னு சுயநலமா இருக்க  முடியலையே!  அதான் கத்தறேன். எந்த ஒரு வினாடியும் நடிக்காமே உண்மையா  வாழணும்னு  நாம  வாழறோம்; உண்மையா வாழறோம்!  அது இவளுக்கு எங்கே புரியப் போகுது. ஒரு நாள் புரியும்! இவளுக்கும் புரியும்  ,இவளுக்கு மட்டுமில்லே. நான் எப்போ பார்த்தாலும் சண்டை  போட்டுகிட்டே இருக்கேன்,  நான் கோவக்காரன்னு, சண்டைக்காரன்னு  நெனைச்சிகிட்டு இருக்கற  பிள்ளைங்களுக்கும் புரியும்.

வாழ்க்கையிலே  அதுக்கும் ஒருநாள் வரும். இவங்களுக்கு புரியுதோ இல்லையோ  நான்  உண்மையாத்தான் வாழறேன். அதுனாலே நாமும் இவளைக் மனசாரக் காதலிக்கறோம், சந்தேகமே இல்லே!  நிச்சயமா  நாம இவளை நேசிக்கறோம் இவளை மட்டும் இல்லே  நம்ம பிள்ளங்களையும் நேசிக்கறோம். அதிலே எந்தச் சந்தேகமும் இல்லேன்னு தீர்மானமாக  ஒரு எண்ணம் வந்தது  அவருக்குள்.  எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டுக்  கதவெல்லாம் பூட்டிஇருக்கான்னு பாத்துட்டு  அப்பிடியே  மனசுக்குள்ளே  எல்லாத் தெய்வங்களையும் வேண்டிகிட்டுத் தெய்வமே இவளுக்கும் என்னோட  எல்லாக் குழந்தைகளுக்கும், எல்லாருக்குமே தீர்க்க ஆயுசும் தீர்க்க சுமங்கலித்தனமும், தீர்க்க ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் குடு ஆண்டவான்னு வேண்டிகிட்டு  படுத்தார். பக்கத்திலே நீல விளக்கின் லேசான ஒளியிலே வள்ளி தூங்குவது தெரிந்தது.  வள்ளி மாத்திரை சாப்டியா என்றார். எல்லாம் சாப்டாச்சு தூங்கவிடுங்களேன் என்று எரிந்து விழுந்தாள் வள்ளி, சிரித்துக் கொண்டே ஐ லவ் யூ  என்றார். அவளிடமிருந்து ஒரு பதிலும் இல்லே. நான் சொன்னது உனக்கு கேட்டுதா?   நான் உன்னைக் காதலிக்கிறேன் என்றார் அழுத்தம் திருத்தமாக. சரி சரி  தூங்கும்போது எழுப்பி இதைச் சொல்லணுமா?  உங்களுக்கு சொன்னாக் கோவம் வருது!  நிம்மதியாத் தூங்கவிடுங்க காலையிலே  சீக்கிரம் எழுந்துக்கணும்  என்றாள் வள்ளி..

மனதுக்குள்  இதான்,  இந்த திமிருதான் எனக்கு இவகிட்ட  பிடிச்ச விஷயமே, அதெப்பிடி கல்யாணம் ஆன புதுசிலே எப்பிடி மனசை வெச்சிருந்தாளோ  அப்பிடியே புதுக்கருக்கு அழியாமே இன்னும்  குழந்தை மாதிரியே  மனசை வெச்சிருக்கா  இவ என்று  மனதுக்குள் ஆச்சரியப்பட்டபடி  மனதுக்குள் சிரித்துக்கொண்டு  அவளுக்கு   நன்றாகப் போர்த்திவிட்டுவிட்டு  மீண்டும்  ஐ லவ்  யூ  என்றார். பாதித் தூக்கக் கலக்கத்தில்  நீங்களும் மாத்திரை சாப்பிட்டுட்டு படுங்க என்றாள் வள்ளி.

சுபம்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *