நாகேஸ்வரி அண்ணாமலை

அமெரிக்காவின் நியுயார்க் மாநிலத்திலுள்ள யூடிகா என்னும் ஊரில் உள்ள, போதைப்பொருள் விற்றதற்காகக் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சீர்திருத்தச் சிறையில் நடந்த கொடுமையைப் பற்றி அறியும்போது குலை நடுங்குகிறது.

ஜூலை ஆறாம் தேதி திடீரென்று இந்தச் சிறையைக் கண்காணிக்கும் நாற்பது அதிகாரிகள் சிறைக்கு வந்து அங்கு இருக்கும் கைதிகளைத் துன்புறுத்த ஆரம்பித்தார்கள்.  மூன்று நாட்களுக்கு முன்னால் ஒரு அதிகாரி சிறையில் காயமடைந்ததாகவும் அதற்கு சிறைக் கைதிகளே காரணம் என்று அனுமானித்து முப்பத்திரெண்டு கைதிகளுக்கும் மேலானவர்களை அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார்கள். அந்த அதிகாரி வளைக்கக்கூடிய ஒரு நாற்காலியில் அமர்ந்து கால்களை முன்னால் உள்ள ஒரு மேசையில் வைத்துக்கொண்டு ஒரு நாவலைப் படிக்க முயன்றிருக்கிறார். ஆனால் கண்களை என்னவோ மூடிக்கொண்டிருந்தார். திடீரென்று அந்த நாற்காலியிலிருந்து விழுந்து தலையில் காயம் பட்டு மயக்கம் அடைந்திருக்கிறார்.  இரு கைதிகள் அதைக் கண்டு அவருக்கு உதவ விரைந்திருக்கிறார்கள்.  அதிகாரிகள் தங்களுக்கு அவசர உதவி தேவைப்பட்டால் உதவி கோருவதற்காக வைத்திருந்த அவசர அலார பட்டனை அழுத்த முயன்றிருக்கிறார்கள்.  கண் விழித்த அவர் ‘வேண்டாம்’ என்று கூறியும் அதற்குள் அவர்கள் பட்டனை அழுத்திவிட்டார்கள்.  உதவிக்கு வந்த அதிகாரிகள் அதிகாரி காயமடைந்திருப்பதையும் அவர் அருகே இரண்டு கைதிகள் இருப்பதையும் பார்த்து அவர் காயமடைந்ததற்கு அந்தக் கைதிகள்தான் காரணம் என்றும் அது திட்டமிட்டுச் செய்த சதி என்றும் கூறி அவர்கள் இருவரையும் தனி செல்லுக்கு மாற்றித் துன்புறுத்தியிருக்கிறார்கள். அந்த அதிகாரிக்கு நடந்தது பற்றிய உண்மையை அறிய அந்த அறையில் கேமரா எதுவும் இல்லை.  இந்தச் சம்பவம் நடந்த பிறகு அந்த அதிகாரி இரண்டு மாத மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார்.  பத்திரிக்கைக்காரர்கள் அவரைப் பேட்டி காண முயன்றபோது ஒத்துழைக்கவில்லை.  அதன் பிறகு அந்தக் கைதிகள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒருவரை மட்டும் இன்னொரு சிறைக்கு மாற்றியிருக்கிறார்கள்.  சிறையில் இன்னொரு கைதி அடிக்கடி அந்த அதிகாரியிடம் ‘ஒரு நாள் நீங்கள் இந்த நாற்காலியிலிருந்து விழுந்துவிடப் போகிறீர்கள்’ என்று ஜோக்கடிப்பாராம்.  அதேபோல் விழுந்திருக்கிறார்!

அந்த அதிகாரி நாற்காலியிலிருந்து கீழே விழுந்து மூன்று நாட்கள் கழித்து – அதாவது ஜூலை ஆறாம் தேதி – அதிகாரிகள் சிறைக்கு வந்து முப்பத்தி இரண்டு கைதிகளைப் பலவாறாகத் துன்புறுத்தியிருக்கிறார்கள்.  இவர்கள் உண்மையில் என்ன நடந்தது என்று கைதிகளை விசாரிக்க வந்தவர்கள்.  கைதிகளிடம் கடுமையாக நடந்துகொண்டால்தான் உண்மையை வரவழைக்க முடியும் என்று நினைத்து அவர்களைத் துன்புறுத்தியிருக்கிறார்கள்.  கூச்சலிட்டுக்கொண்டு உள்ளே நுழைந்த அதிகாரிகள் கைதிகள் எல்லோரையும் தரையில் படுக்குமாறு ஆணை பிறப்பித்திருக்கிறார்கள்.  சிலரைச் சுவரில் மோதி அவர்கள் மூக்கை உடைத்திருக்கிறார்கள்; ஒருவரின் ஆசனத் துவாரத்தில் இரும்புக் குழாய்களை நுழைத்திருக்கிறார்கள்; ஒருவரின் நெஞ்சில் மேல் ஏறி நின்றுகொண்டு பலவாறாக அவரை உதைத்திருக்கிறார்கள்; ஒரு வெள்ளை இனக் கைதி அதிகாரி விழுந்ததற்கு கைதிகள் யாரும் பொறுப்பில்லை என்று சொன்னதற்கு அவரை ‘வெள்ளை இனத்தவனான நீ எதற்காக இவர்களைக் காப்பாற்ற முயல்கிறாய்?’ என்று மிரட்டியிருக்கிறார்கள்.  அங்குள்ள கைதிகளில் கிட்டத்தட்ட எல்லோரும் கருப்பர்கள் மற்றும் ஹிஸ்பானியர்கள்.  ஹெர்னியா ஆபரேஷன் செய்துகொண்ட ஒரு கைதியை உதைத்துத் தரையில் தள்ளிவிட்டு எழுந்திருக்கும்படி கூறிய அதிகாரி கைதி எழுந்திருக்க முயன்றபோது அவர் ஆபரேஷன் செய்துகொண்ட இடத்திலேயே உதைத்தாராம்.  தன்னுடைய பால் அடையாளத்தை (sex identity)  மாற்றுவதற்காக மருந்துகள் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஒரு கைதியின் மருந்துகளைத் தரையில் போட்டு மிதித்து ஒரு அதிகாரி பாழாக்கினார்.  அவர் படித்துக்கொண்டிருந்த ஆண்டர்ஸன் கூப்பெர் என்னும் பெயர்பெற்ற பத்திரிக்கையாளர் எழுதிய புத்தக்கத்தை (இவரும் ஓரின ஈர்ப்பு இனத்தைச் சேர்ந்தவர்.  அவரும் அவருடைய தாயும் அவருடைய அந்த நிலையை எப்படிக் கையாண்டார்கள் என்பது பற்றிய புத்தகம்) கிழித்துப் போட்டிருக்கிறார்கள்.  கைதிகளின் உடைமைகளைத் தரையில் போட்டுப் பாழாக்கியிருக்கிறார்கள். வெள்ளை இனக்கைதிகளை நோக்கி, ‘நீங்கள் நம் இனத்திற்கே இழிவு தேடிக் கொடுப்பவர்கள் என்று கூறினாராம் ஒரு அதிகாரி.  கருப்பு இனத்தைச் சேர்ந்த கைதிகளையும் ஹிஸ்பானிய இனத்தைச் சேர்ந்த கைதிகளையும் அவர் காட்டிக் கொடுக்கவில்லை என்பதால் அவர்களை இப்படி வசைபாடியிருக்கிறார்கள்.  முப்பத்தி இரண்டு கைதிகளையும் அடித்துத் துன்புறுத்திய பிறகு அந்த இடம் புயல் அடித்து ஓய்ந்த இடம்போல் இருந்ததாக ஒரு கைதி கூறியிருக்கிறார்.

அதன் பிறகு கைதிகளை அந்த இடத்தைச் சுத்தம் செய்யச் சொன்னார்களாம்.  அவர்கள் முன்னாலேயே கைதிகளின் உடைமைகள்மேல் அதிகாரிகள் சிறுநீர் கழித்தார்களாம்.

‘இதையெல்லாம் வெளியில் சொன்னால் மறுபடி வந்து உங்களைத் தொலைத்துவிடுவோம்’ என்று மிரட்டினார்களாம்.  அப்படியும் எப்படியோ இந்தக் கொடூரம் வெளியே தெரிந்து நவம்பர் 2-ஆம் தேதி இரண்டு பெரிய அதிகாரிகள் பதவியிலிருந்து தற்காலிகமாகப் பதவிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சட்டம் கோலோச்சும் அமெரிக்காவில், ஒளிவுமறைவில்லாத ஆட்சியை (transparent government) வலியுறுத்தும் அமெரிக்காவில், ஒபாமா ஜனாதிபதியாக இருக்கும் அமெரிக்காவில் இப்படி நடந்திருக்கிறது.  வெள்ளை இனம்தான் உயர்ந்தது என்று நினைக்கும், கருப்பர்கள், புதிய குடியேறிகள் (இதில் சிலர் விசா இல்லாமல் திருட்டுத்தனமாக வந்தவர்கள்), மாற்றுத் திறனாளிகள், ஏழைகள், பால் உணர்வில் மாறுபட்டவர்கள் ஆகியோர்களின் நலன்களுக்கு எதிராகப் பேசிவரும் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக ஆவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.  இவர் ஜனாதிபதியான பின் அமெரிக்காவில் இவர்களின் நிலை என்ன ஆகும் என்று எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *