பவள சங்கரி

கூகிளில் கடோத்கஜன் – புத்தம் புதிய நாடக ஆக்கம்!
crazy

 

crazy4

crazy5

பொதுவாக நல்லிணக்கத் தூதுக்குழுவினர்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று மக்களுடன் கலந்துறவாடி அந்தந்த நாட்டினருடன் ஒரு ஆக்கப்பூர்வமான சிந்தையை வளர்க்கும் விதமாக நல்ல இணக்கத்தை ஏற்படுத்தி வருவர். இதற்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல வெளிநாடுகள் சென்று நமது பண்பாடு, கலாச்சாரம் அனைத்தையும் வெளிநாட்டு மக்களும் அறியும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தி வரும் கலை, இலக்கிய, இசைக்குழுவினர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. இவர்களுடைய பயணம் வியாபார நோக்கம் மட்டுமே பிரதானமாகக்கொண்டது என்ற குறுகிய வட்டத்தில் ஒதுக்கவும் இயலாது. இதனை உணர்த்தும் விதமாக கிரேசி குழுவினரின் நீண்ட அமெரிக்கப்பயணம் நிரூபித்துள்ளது.

crazy7

கிரேசி நாடகக்குழுவினர் சமீபத்தில் அமெரிக்கப் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து திரும்பியுள்ளனர். ஐந்தாவது முறையான இந்த அமெரிக்கப் பயணம், சென்ற நான்கு முறைகளைக்காட்டிலும் குறிப்பிடும் அளவிற்கு, அரங்கு நிறைந்த காட்சிகளாகவும், இரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப்பெற்றும் வெற்றிகரமான பயணமாக அமைந்துள்ளது குறிப்பிட்டத்தக்கது. திரு கிரேசி மோகன் மற்றும் திரு மாது பாலாஜி அவர்களின் தலைமையில் இயங்கும் இந்நாடகக்குழுவினரின் கடின உழைப்பும், அயராத முயற்சியும் இவர்களை இம்மாபெரும் சாதனைக்கு வழி கோலியுள்ளது. ஆயிரக்கணக்கான அன்பு இரசிக உள்ளங்களின் ஏகோபித்த பாராட்டைப்பெற்று திரும்பியுள்ள மகிழ்ச்சியில் சகோதரர் திரு கிரேசி மோகன் அவர்கள் உளம் நெகிழ்ந்து பகிர்ந்து கொண்டுள்ளார். மீண்டும் விரைவில் அமெரிக்க இரசிகர்களுடன் கலந்துறவாட வாய்ப்புகள் வாசல் விரிந்து காத்திருப்பதையும் உணர முடிகின்றது. நாடக உலகிற்கு இவர்களின் அரிய சேவை பாராட்டிற்குரியது. திரை உலகின் முன்னோடியான நாடக உலகம், திரு கிரேசி மோகன், திரு ஒய்.ஜி.மகேந்திரன், திரு எஸ்.வி.சேகர் போன்ற மிகக் குறிப்பிட்ட சில கலைஞர்களால் மட்டுமே உயிர் பெற்று நடமாடிக்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. பிற்காலத்தில் மேடை நாடக உலகின் நிலை என்னவாகும் என்ற கவலையும் ஏற்படத்தான் செய்கிறது. இவர்களைப்போன்றோர் இதற்கான ஏற்பாடை செய்து, தங்களுக்கான வாரிசுகளை உருவாக்கி மேடை நாடக உலகம் தொடர்ந்து திரையுலகிற்கு ஈடாக வலம் வர வேண்டும் என்று வேண்டுகிறோம்.

crazy1

அமெரிக்காவின், மேரிலாண்ட் ஆளுநர் தமது மாநிலக் காரியதரிசி மூலமாக வாசிங்டன் நகரில் 31.10.16 அன்று, தங்களுடைய ‘கூகிள் கடோத்கஜன்’ என்ற புத்தம் புதிய நாடகம் நடைபெறும் அரங்கில் அளித்துள்ள, ‘Professional excellence award ‘ மட்டுமே இதற்கு பெரும் சாட்சி.

crazy6

crazy2

அமெரிக்காவின், வாசிங்டன், கலிஃபோர்னியா, பிலடெல்பியா, சிகாகோ, சேன் டிய்கோ, சேன்ஜோஸ், கனெக்டிகட், அரிசோனா, டல்லாஸ், ஹூஸ்டன், தம்ப்பா, அட்லாண்டா, நியூயார்க், நியூஜெர்சி போன்ற பலப்பல இடங்களிலும் 1000ற்கும் மேற்பட்ட இரசிகர்களின் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக நாடகம் நடத்தி முடித்து வந்துள்ள கிரேசி குழிவினரின் முதுகெலும்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் திரு கிரேசி மோகன், அவர் சகோதரர் திரு மாது பாலாஜி மற்றும் உடன் பிறப்புகள் என்று திரு கிரேசி மோகன் அவர்கள் குறிப்பிடும் ஏனைய கலைஞர்கள் அனைவரையும் வல்லமை மனமார வாழ்த்தி வரவேற்கிறது. இந்த சாதனை பல்லாண்டு காலம் தொடர்ந்து நடைபெற எல்லாம் வல்ல எம் இறையை பிரார்த்திக்கிறோம்.

crazy8

ஓரிரு திரைப்படங்களில் தலையை காட்டி விட்டாலே தலைகனம் வந்து மக்களை சந்திப்பதை விரும்பாத பல கலைஞர்களுக்கிடையே, நடிப்பு, வசனம், நாடக மேடை, கதை, இலக்கியம், வெண்பா, ஆன்மீகம் என அனைத்துத் தளங்களிலும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் திரு கிரேசி மோகன் அவர்களின் எளிமை பாராட்டுதலுக்குரியது. அனைவரிடமும் பாரபட்சமின்றி இவர் பழகும் தன்மை ஒரு எடுத்துக்காட்டாகும். நம் வல்லமை இதழில் தொடர்ந்து பல ஆக்கங்களை படைத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்தம் ஆக்கங்கள் அனைத்தும் திருமால் திருப்புகழ்  என்ற இந்தப் பகுதியில் காணலாம். அந்த வகையில் இவர் பல்லாயிரக்கணக்கான இரசிகர்களை உலகம் முழுவதும் பெற்றிருப்பதில் எந்த ஐயமும் இல்லை. தனக்கான எந்த விதமான தனிப்பட்ட பெருமையையோ, கவனிப்பையோ எதிர்பார்ப்பதில்லை இந்த பிரபலம் என்பதே இவரை பன்மடங்கு உயர்த்திக்காட்டுகிறது. சென்ற ஆண்டு என் மகனின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சி சென்னையில் வைத்திருந்தபோது, மற்ற நண்பர்களை அழைத்ததுபோல் இவரிடமும் யதார்த்தமாக தொலைபேசியில் அழைத்து விசயத்தைக் கூறியவுடன், மிகவும் மகிழ்ச்சியாக கட்டாயம் கலந்து கொள்வதாகக் கூறியபோதுகூட நான் அந்த நேரத்தில் ஏதோ சமாதானமாகப் பேசுகிறார் என்றே நினைத்திருந்தேன். ஆனால் நிகழ்ச்சி நடக்கும் நாளை நினைவில் குறித்து வைத்து அந்த நாளில் மறக்காமல் நேரில் வந்து எங்கள் குழந்தைகளுக்கு ஆசி வழங்கி, அனைத்து உறவினர்களுடனும் அன்பாகவும், வழமையான அவருடைய நகைச்சுவை பாணியில் பேசி சில மணித் துளிகள் அந்த நிகழ்ச்சியைக் களைகட்ட வைத்துவிட்டார். இந்த எளிமையும், இரசிகர்கள் அனைவரையும் தம் அன்பான உறவுகளாக மதிக்கும் இவர்தம் பெருந்தன்மையுமே இவரை மக்கள் மனதில் நீங்காதொரு இடத்தைப் பிடிக்க வைத்துள்ளது என்றால் அது மிகையல்ல! திரு கிரேசி மோகன் அவர்கள் இன்னும் பல்லாண்டுகள், நீண்ட ஆயுளும், நிறைந்த ஆரோக்கியமுமாக, மென்மேலும் பலப்பல சாதனைகள் புரிந்தவாறு மக்கள் மனதில் நிறைந்திருக்கவேண்டும் என்று உளமார வாழ்த்துகிறோம்.

crazy3

“எனக்கு சாம்பார்ல காய்கறிய முழுசு முழுசா போட்டா பிடிக்கும்னு சொன்னதென்னவோ வாஸ்தவந்தான்.. அதுக்காக அதே பிரின்ஸிபில நீங்க எல்லா காய்கறிக்கும் அப்ளை பண்ணப்டாது. அன்னிக்கு லஞ்ச்டைம்ல கேண்டின்ல டிபன் பாக்ஸ ஓபன் பண்ணி பாக்கறேன். புடலங்கா சாம்பார். எடுத்தா த்ரெளபதி வஸ்திராபரணம் மாதிரி வந்துண்டேயிருக்கு. எங்க ஆஃபீஸ்ல லஞ்ச் டைமே ஆஃப் அன் அவர் தான். இதுல புடலங்காயை எடுக்கறதுக்கே கால் மணி ஆச்சுன்னா எப்படி?”

“மொளச்சு மூணு இலை விடலை../ நீ இன்னும் மொளைக்கவே இல்லியே/””

“பீமாராவ். நீர் பயில்வான் தான். அதுக்காக உம்ம பேனா கூடவா இப்படி இருக்கணும். ஆறு ஓட்டை போட்டா புல்லாங்குழலா யூஸ் பண்ணலாம் போல இருக்கே!”

இப்படி பல்லாயிரம் நகைச்சுவை சரவெடிகளை
அய்யா அம்மா அம்மம்மா, க்ரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் போன்ற நாடகங்களில் வெடிக்கத் தொடங்கி இன்று வரை நம்மையெல்லாம் தீபாவளிக் கொண்டாட்டத்தில் மகிழ்வித்துக் கொண்டிருக்கிறார் இந்த மனிதர். நாடகமேடை, வெள்ளித்திரை இரண்டிலும் வெற்றி வாகை சூடிய இந்த சாக்லேட் கிருஷணர் வெண்ணை மாதிரி அத்தனை பேர் மனதையும் விழுங்கி ஏப்பம் விட்டுவிடக்கூடிய கூகிள் கடோத்கஜரும் ஆவார். மேலும் வெண்பா எழுதும் புலவரும் கூட.

இவற்றையெல்லாம் தாண்டி எனக்கு இவரிடம் பிடித்த விஷயம்.. எனக்குப் பிடித்த ஓவியக்கலையில் இவரும் ஒரு விற்பன்னர் என்பது தான்!

பின் குறிப்பு: இந்தப் பின்னூட்டங்கள் திரு கிரேசி மோகன் அவர்களின் முக நூல் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டவை. இந்த வசனங்களை நினைவு கூர்ந்து வெளியிட்டுள்ள வடக்குப்பட்டி ராமசாமி, கலா வெங்கட், அனன்யா, பாபு பிகே.. கணேச குமாரன் ஆகியோருக்கு நன்றி .

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *