க. பாலசுப்பிரமணியன்

வீட்டுச் சூழ்நிலைகளும் கற்றலும் (2)

education

கற்றலுக்கு ஏதுவாக பெற்றோர்கள் எப்படிப்பட்ட சூழ்நிலைகளை உருவாக்கவேண்டும் என்பது பற்றிய பல கருத்தரங்கங்கள் நாட்டின் பல பகுதிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் உருவாகின்ற சில கருத்துக்களை மனதில் கொள்ளுதல் அவசியம்.

  1. கற்றலுக்கு உதவும் வண்ணம் வீட்டில் அமைதியை காத்தல் அவசியம். பொதுவாக படிக்கும் நேரங்களில் மற்றும் இடங்களில் தேவையற்ற பேச்சுக்களையோ விவாதங்களையோ அல்லது கற்பவர்களின் கவனத்தை சிதைக்கும் அல்லது பாதிக்கும் வகையிலோ பேசவோ அல்லது ஒலிகளை உருவாக்குவதோ உகந்தது அல்ல.
  2. குழந்தைகள் படித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் பெற்றோர்கள் தொலைக்காட்சி மற்றும் கவனத்தை ஈர்க்கும் விளையாட்டுக்கள் ஆகியவற்றைத் தவிர்த்தல் அவசியம்.
  3. குழந்தைகளின் படைப்புத்திறன் கற்றல்திறன் ஆகியவற்றை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு உயர்த்தியோ தாழ்த்தியோ பேசுதல் தவிர்க்கப்படவேண்டும்.
  4. குழந்தைகளை இந்த நேரத்தில் இதைத்தான் படிக்கவேண்டும் என்று வற்புறுத்தாமல் அவர்கள் விருப்பத்தையம் ஆர்வத்தையும் அறிந்து அவைகளை ஊக்குவிக்கும் வண்ணம் பேசுதல் வேண்டும்.
  5. 5. உனக்கு கணக்கு வராது” “உனக்கு யோசிக்கும் திறமை கிடையாது” உன்னால் இதை சாதிக்க முடியாது” என்று அவர்களுடைய தன்னம்பிக்கையை வீழ்த்தும் வகையில் வார்த்தைகளை உபயோகிக்கக் கூடாது.
  6. “எல்லாவற்றையும் மனப்பாடம் பண்ணிக்கொள்” என்று குழந்தைகளை புரியாமல் படிக்க வற்புறுத்தக் கூடாது
  7. அவர்களுடன் அமர்ந்து அவர்களுடைய குறைகளைக் கேட்டறிந்து அதை அவர்களால் எளிதால் முயற்சிகள் மூலம் சமாளிக்கவும் தாங்கவும் வெல்லவும் முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்குதல் அவசியம்
  8. கலை, பாடல், கவிதை, நாட்டியம், விளையாட்டு போன்றவற்றில் ஆர்வம் இருக்கின்ற மாணவர்களுக்கு அந்த ஆர்வங்களைத் தடை செய்யும் வகையிலோ அல்லது அவைகள் வாழ்க்கைக்கு உதவாது என்ற கருத்தை ஏற்படுத்தும் வகையிலோ பேசுதல் நல்லதல்ல. அவர்களுடைய உண்மையான திறன்கள் பள்ளிப்படங்களுக்கு அப்பால் இருக்க அதிக வாய்ப்புக்கள் உண்டு.
  9. அவர்களுடன் உரையாடும் பொழுது அவர்கள் படிக்கும் பள்ளிகளை பற்றியோ அல்லது ஆசிரியர்களைப் பற்றியோ   தரக்குறைவாகவோ கண்டிக்கும் வகையிலோ   கேலிசெய்யும் வகையிலோ பேசுதல் நல்லதல்ல. இதனால் சம்பந்தப்பட்ட பாடங்களில் ஆர்வம் பாதிக்கப்படக்கூடும்
  10. வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் மற்றும் உறவினர்கள் முன்னால் தமது குழந்தைகளின் பிரச்சனைகளை குழந்தைகளை முன்னே வைத்துக்கொண்டு பேசுவதைத் தவிர்க்க வேண்டும்
  11. வீட்டுப் பிரச்சனைகளையும் கருத்து வேறுபாடுகளையும் அவர்கள் முன்னால் வெளிப்படுத்தி அவர்களுடைய உணர்வுகளையும் மனநிலையையும் பாதிக்கப் படுவதை தவிர்க்க வேண்டும்.
  12. இதைப் படித்தாலோ செய்தாலோ இந்தப் பரிசு கிடைக்குமென்றோ இல்லை செய்யாவிட்டால் இந்தப் பொருள் பறிபோகுமென்றோ இரு மாறுபாட்ட கருத்துகளை இணைத்தல் தவிர்க்கப் படவேண்டும்.
  13. ஒவ்வொரு நாளும் அவர்களிடம் ஒரு முப்பது நிமிடங்களாவது அமர்ந்து அவர்களுடன் உரையாடி உறவுகளை பலப்படுத்துக்கொள்ளுதல் அவசியம்.
  14. தவறுகள் செய்யும் பொழுது அவர்களை அறிந்தே காத்தலும் சுட்டிக்காட்டாமல் இருப்பதும் தவறு.
  15. அவர்கள் படிக்கின்ற இடத்தை சுத்தமாகவும் மதிக்கத்தக்க வகையிலும் வைத்துக்கொள்ள உதவ வேண்டும்.
  16. அன்றாடப் பாடங்களைப் படிப்பதற்கான ஒழுக்கத்தையும் விருப்பத்தையும் வளர்த்தல் அவசியம். பெரும்பாலும் இது அவர்களுடன் சரியான நேரத்தில் கூட அமர்ந்து பழக்கத்தை உருவாக்குதல் அவசியம்.
  17. வீட்டில் குழந்தைகள் படித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் அருகில் அமர்ந்து புகைபிடித்தல் மது அருந்துதல் புகையிலை சார்ந்த பொருட்களை உபயோகித்தல் முற்றிலுமாகத் தவிர்க்கப் பட வேண்டும்
  18. ” அவனுக்குப் போதாத நேரம். படிப்பு வராது.” ” அவன் நேரம் இன்னும் சில வருடங்களுக்குச் சரியான நேரமில்லை. பாஸ் பண்ணுவது கடினம்” போன்ற கருத்துக்களை முன்வைத்து அவர்களுடைய முயற்சிக்குத் தடைகள் ஏற்படுத்தக்கூடாது.
  19. சிறப்பான கற்றலுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளைக் கொடுத்துப் பேணுதல் தேவை
  20. அவர்களுடைய சிறிய சாதனைகளையும் பாராட்டுதல் அவசியம்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *