-தமிழ்த்தேனீ

எதைச் செய்தாலும் முழுமனதோடு செய்யும் போதுதான் முழுப்பலனும் கிடைக்கிறது. இதைத்தான் அர்ஜுனனுக்கு  கிருஷ்ண பரமாத்மா  கீதையில் சொன்னார். இந்தக்  கருத்தை உணர்த்தவே கீதை பிறந்தது! இதென்ன  புதுக் குழப்பம் என்கிறீர்களா?  குழப்பமே இல்லை விளக்குகிறேன்.

என் துணைவியாரிடம் ஒரு சந்தேகம் கேட்டேன்  கீதையை ஏன் போர்க்களத்திலே  கிருஷ்ணன்  அர்ஜுனனுக்கு உபதேசித்தார் . எதற்காக  உபதேசித்தார்  அவருக்கு வேறு இடமே வேறு சந்தர்ப்பமே கிடைக்கவில்லையா  என்று!  அதற்கு  என் துணைவியார்  அங்கேதானே  என் உறவினர்களுக்கே எதிராக நான் போரிடவேண்டுமா  என்று  அர்ஜுனன் யோசித்தான்   என்றாள்.  அது மட்டுமல்ல  அர்ஜுனனின் அஞ்ஞானத்தைப் போக்கவும்  தான் கீதோபதேசம் செய்தார் கிருஷ்ணன்  என்றாள்.

lord-krishna-arjun-mahabharatஅர்ஜுனனுக்கு  அஞ்ஞானம் இருந்தது உண்மையா  என்று கேட்டேன்; என் துணைவி ஆமாம் என்றாள். அப்படியானால்  தன் வெற்றிக்காகவோ தர்மத்தைக் காக்கவோ கூட  உறவினர்களையும்  பல பெரியவர்களையும் கொல்ல மாட்டேன்  என்பது அஞ்ஞானமா  அது தர்மமில்லையா  என்றேன்.   ஆமாம்  அது அஞ்ஞானம்தான்  தர்மம் என்றாலும் கூட  அதர்மம் என்றே   வைத்துக் கொண்டாலும் கூட  போர்க்களத்திலே வந்து போர் புரியமாட்டேன்  என்று சொல்வது  நியாயமே இல்லையே.  அதனால்தான்  அந்தக் குழப்பத்திலிருந்து  அர்ஜுனனைத் தெளிய வைக்கவே   அங்கேயே  கீதோபதேசம் செய்தான்  கிருஷ்ணன்  என்றாள்.

நீ சொல்வது  ஒரு வகையில் நியாயமாகவே படுகிறது.  இருந்தாலும்  இன்னும் சில  விளக்கங்கள் இருக்கிறது அதையும் விளக்கிவிட்டு  அதன் பிறகு நீ சொல்வதை  நான் ஒப்புக்கொள்வதா  அல்லது நான் சொல்வதை நீ ஒப்புக் கொள்கிறாயா  என்பதை முடிவு செய்யலாம் என்று சொல்லிவிட்டு, கிருஷ்ணன் அதர்மத்தை  அழிக்க  தர்மத்தை  நிலைநாட்ட  நீ இந்தப் போரை நடத்தித்தான் ஆகவேண்டும்;  உன் உறவினர்களுக்கும் பெரியவர்களுக்கும் எதிராக அஸ்திரங்களைப் பயன்படுத்தியே ஆகவேண்டும்;   இல்லையென்றால் உலகிலே  தர்மம்  வெல்லும் என்கிற நீதியே  செத்துப் போகும்;  இது நியாயமா  என்றவுடன்  அதை உணர்ந்த  அர்ஜுனன்  சரி கிருஷ்ணா  நான் போர் செய்கிறேன் என்று ஒப்புக் கொண்டாலும்  மனமில்லாமல் போரைத் துவக்குகிறான் அர்ஜுனன். அப்போது  கிருஷ்ணன் இரு  அர்ஜுனா போரைத் துவக்காதே   துவக்குவதற்கு முன் என் சந்தேகத்தைத் தெளிவித்துவிட்டு போரைத் துவக்கு  என்கிறான் கிருஷ்ணன்.

சொல் கிருஷ்ணா என்ன சந்தேகம் உனக்கு என்று கேட்ட அர்ஜுனனைப் பார்த்து இப்போது  உன் மனதிலே  நான் சொல்வது நியாயமாகப் படுகிறது;  அதனால் போரைத் துவக்குகிறாய்  என்றான்.    ஆமாம் அதில் என்ன  சந்தேகம் என்கிறான் அர்ஜுனன்.   அதில்தான்  சந்தேகமே  மீண்டும் வேறு யாரேனும் என்னைவிடத் திறமையாக வாதம் புரிபவர் வந்து  நீ செய்வது   அதர்மம்  என்று  அவருடைய  வாதத் திறமையால்  நிரூபித்துவிட்டால் அது உன் மனதுக்கு நியாயமாகப் பட்டால் போரை நிறுத்திவிடுவாயா மீண்டும் என்கிறான் கிருஷ்ணன்.

அர்ஜுனன்  கிருஷ்ணா  நீ என்னைக் குழப்புகிறாய்  இப்போது என்ன சொல்ல வருகிறாய் என்றான்.   பதில் சொல்  உன் மனதிலே வேறு யாராவது நீ செய்வது  அதர்மம் உன் உறவினர்களுக்கு எதிராக  என்று உன்னை உணரவைத்துவிட்டால் போரை நிறுத்திவிடுவாயா?      கிருஷ்ணா   நான் நன்றாக உணர்ந்திருக்கிறேன்  அதர்மத்தை  கைக் கொள்ளுபவன்  அதற்குத் துணை செல்பவன் யாராயினும் நமக்கு எதிரிகளே  என்று  ஆனாலும்  அவர்கள்  செய்த  கொடுமைகள்  அதிகம் என்றும் உணர்ந்திருக்கிறேன்.   அதனால்தானே  இந்தப் போரே ஏற்பட்டது.

இவைகளையெல்லாம் நான் உணர்ந்துதான்  இருக்கிறேன்;  ஆனாலும் என் மனம் மயங்குகிறது. இப்படி  என் உறவினர்களையும்   பிதாமகர் போன்றோர்களையும் கொன்று  நான் வெற்றி பெற்று  தர்மத்தை  நிலைநாட்ட வேண்டுமா? இப்படிப்பட்ட பாவகாரியத்தை செய்துதான்  நான்  என்னை நிலைநாட்டிக் கொள்ள வேண்டுமா? இது தேவைதானா?  என்று என் மனம் மயங்குகிறது;   ஆனாலும் போரைத் துவக்கிவிட்டால் நிறுத்த  மாட்டேன் பின் வாங்கமாட்டேன் என்கிற உறுதி இருக்கிறது எனக்கு.;  நீ சந்தேகப் படாதே  என்றான்  அர்ஜுனன். ஆகவே சீக்கிரமாக போரைத் துவக்கிவிடலாம் என்றான் அர்ஜுனன்.

உன் பதட்டம்  எனக்குப் புரிகிறது  அர்ஜுனா  என்று சொல்லிவிட்டு  சரி  அர்ஜுனா எக்காரணத்தைக் கொண்டும்   நீ பாதியிலே போரை  நிறுத்துவாயா  என்றான் கிருஷ்ணன்.    அது எப்படி முடியும்  பாதியிலே  தடுமாற  முடியுமா நடத்தித்தானே  ஆகவேண்டும்; அதனால்தான் இப்போதே  யோசித்தேன்  என்றான் அர்ஜுனன். எனக்குப் புரிகிறது  அர்ஜுனா நீ  விவேகி எதையும் முன்கூட்டியே  யோசிப்பாய்  இருந்தாலும் எனக்கு சந்தேகம்;  அதனால் கேட்டேன் என்றான்  கிருஷ்ணன்.   கிருஷ்ணா  உனக்கு ஏன் இவ்வாறு சந்தேகம் வருகிறது  என்றான் அர்ஜுனன். சரி  விடு  ஏதோ சந்தேகம் வந்தது அதனால் கேட்டேன்  என்றான் கிருஷ்ணன். என்ன இன்னமும் என் மேல் நம்பிக்கை இல்லாமல் பேசுகிறாய் கிருஷ்ணா  சரி போரைத் துவக்குவோமா  என்றான் அர்ஜுனன்.

துவக்கலாம்  அதற்கு முன்  எனக்கு ஏன் சந்தேகம் வந்தது என்று கேட்டாயே  அதைத் தெளிவு படுத்திவிடுகிறேன்; ஏற்கெனவே  எல்லாம் யோசித்துத் தர்மத்தை நிலை நாட்டத்தானே,   அதர்மத்தை அழிக்கத்தானே  போர்புரிவது என்று முடிவெடுத்தோம்;  போர்க்களத்திலே வந்து குழம்பிவிட்டாயே  அதனால்தான்  கேட்டேன்.   இப்போது நீ தயாரா  போர் செய்ய?  என்றான் கிருஷ்ணன்.  ஆமாம் தயார்  என்றான் அர்ஜுனன்.

நன்றாக ஒரு முறைக்கு இரு முறை யோசித்துக் கொள். கொல்வதென்று  முடிவெடுத்துவிட்டால்   நன்றாக யோசித்துக் கொள்;  நன்றாக யோசித்து முழுமையாகக் கொல் நடுவிலே தயங்காதே    என்றான் கிருஷ்ணன்.        என்ன  கிருஷ்ணா   மறுபடியும் குழப்புகிறாய் என்ற அர்ஜுனன்  தன் மனதிலிருந்து தப்பித்து  போரைத் துவக்கிவிட்டால் குழப்பம் தெளிந்துவிடும்  என்னும்  பக்குவமில்லாத  குழப்பத்தில்  சரியோ தவறோ  செய்துவிடுவோம் என்கிற  மன நிலையில் அவசரப்பட்டான் அர்ஜுனன்.  கிருஷ்ணா  சீக்கிரம் போரைத் துவக்கலாம்  என்று பதட்டமாக அறிவித்தான் அர்ஜுனன்.

அர்ஜுனா  கோபித்துக் கொள்ளாதே அவசரப்படாதே,  ஒரு செயலை தொடங்குவது எளிது; ஆனால் தீர்க்கமாக ஆராய்ந்து  தீர்க்கமான முடிவெடுத்து   தொடங்க வேண்டும்   நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய் உன் உறவினர்கள் பிதாமகர்கள் ஆகியோரை எதிர்த்துப் போர்செய்யப் போவதாக, அவர்களை நோக்கி உன் அஸ்திரங்களை ஏவப்போவதாக… இல்லை அர்ஜுனா நீ  என்னை நோக்கி உன் அஸ்திரங்களை ஏவப் போகிறாய்  என்றான் கிருஷ்ணன்,       என்னது!  என்ன சொல்கிறாய் கிருஷ்ணா  என்றான் அர்ஜுனன்!

அர்ஜுனா   நீ அறியாத  விஷயமா,  பஞ்சபூதங்களும்  இந்தப் ப்ரபஞ்சமும்  உன் உறவினர்களும்  பிதாமகர்களும் நீயும் நானுமே  எல்லோருமே  என்னுள் அடக்கம்  என்று நீ ஏற்கெனவே அறிவாய்  ஆனால் மறந்துவிட்டாய். இப்போது யோசி  இவர்களில்  நீ யாரை நோக்கி  அஸ்திரத்தை ஏவினாலும்   அந்த  அஸ்திரம் என்னை நோக்கித்தானே வரும்  என்றான் கிருஷ்ணன் பரிதாபமாக  முகத்தை வைத்துக் கொண்டு.   இது நியாயமா  உனக்கு உதவி செய்ய  வந்த  என்மேலேயே  நீ உன் அஸ்திரத்தை விடுவாயா  அதுதான்  என் வருத்தமே என்றான் கிருஷ்ணன்.

 அதிர்ந்து போனான் அர்ஜுனன்! ஆமாம்  நானெப்படி இதை மறந்தேன்  அய்யோ  நான் உன்னையே நோக்கியா  அஸ்திரத்தை விடப் போகிறேன்  இது என்ன  குரூரமான  தலையெழுத்து  எனக்கு;   உண்மைதான்  நான் செய்வது நியாயமே இல்லைதான்   இப்போது எனக்குப் புரிகிறது   ஏதோ  ஒரு உள்ளுணர்வினால்தான்  நான்  போர் செய்ய மாட்டேன்  என்று  தடுமாறியிருக்கிறேன்  என்பது  இப்போது நன்றாகவே புரிகிறது   என்றான்  அர்ஜுனன்.  நல்ல வேளை  எனக்கு  கிருஷ்ணா  சரியான  நேரத்தில் உணர்த்தினாய்  என்றான் அர்ஜுனன் .

ஒரு கணம் அவனையே புன்னகையுடன்  பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் அர்ஜுனா  எனக்கு  அவ்வளவாக  சாதுரியம் போதாது. அதனால் பயந்தேன்  வேறு யாராவது  உன்னைக் குழப்பி விடப் போகிறார்களே  என்று   ஆனால் நானே இப்போது உன்னைக் குழப்பிவிட்டேனே. நல்லவேளை நான் உன்னை சந்தேகப்பட்டது சரியாகத்தான் இருக்கிறது.   அப்படியானால் அதர்மத்துக்கு  எதிராக நீ போர் புரியப் போவது இல்லை  என்பதைத்  தீர்மானமாக  முடிவெடுத்துவிட்டாயா  என்றார்  கிருஷ்ணன்.

ஆமாம்  அதுதான்  சரி  என்றான் அர்ஜுனன் தீர்மானமாக. அப்படியானால் சற்று நேரத்துக்கு  முன்  ஏன் கிருஷ்ணா உனக்கு என்மேல் சந்தேகம் வருகிறது   நம்பிக்கை இல்லாமல் பேசுகிறாய் என்று கேட்டவனும் நீதானே  இப்போது  மாறி மாறிப் பேசுகிறாயே?  ஏன் எனக்கு உன் மேல சந்தேகம் வராது?  என்றான் கிருஷ்ணன்.

அர்ஜுனன் தன்னுடைய உறவினர்கள் பிதாமகர் பீஷ்மர்   போன்றவர்களுக்கு எதிராக என் அஸ்திரங்களா என்று  மலைக்கிறான். அப்படி ஒரு மலைப்பு  அர்ஜுனனுக்குள் இருந்தால்  அவனுடைய  அஸ்திரங்கள் பயனற்றுப் போகும்.   அப்படி  அரைகுறை மனதோடு அர்ஜுனன் ஏவும் அஸ்திரங்கள்  எதிராளியைத் தாக்காமல் அவர்கள் முன்னே  பலனற்றுக் கீழே விழுந்து போகும்; அதனால் அதர்மம் வெற்றிபெற அதுவே வாய்ப்பளிக்கும்;  தர்மம்  தோற்றுப் போகும்   என்பதை  உணர்ந்த  கிருஷ்ணனே சற்றுப் பயந்துபோனான் என்பதே  உண்மை.

கிருஷ்ணனுக்கு  பயமா  என்றால் அது பயமல்ல   விவேகம் வருவதை முன்கூட்டியே  அறியக் கூடிய  திறன் என்றுதான் கொள்ளவேண்டும். கிருஷ்ணன் ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்தான்.   அவன் மனதுக்குள் தூங்குபவனை எழுப்பி விடலாம் தூங்குவது போல்  நடிப்பவனை எழுப்ப  முடியாதென்று சொல்வார்கள்.  ஆனால்  தூங்குவது போல் ஒரு மயக்கத்தில் இருக்கும் இவனை எப்படியேனும் எழுப்பியே தீரவேண்டுமே  அஞ்ஞானத்தில் மூழ்கி இருக்கும் இவனை எப்படியேனும்   தெளியவைக்க வேண்டுமே    என்று கிருஷ்ணனே  கவலைப்பட ஆரம்பித்தான்.

அதன் விளைவுதான்  இவனுக்கு  இப்போதே கீதையின் சாரத்தை உணர்த்தவேண்டும்   என்னும் முடிவு  அதுதான் போர்க்களத்திலே  கீதோபதேசம் செய்ய  எடுத்த தீர்மானத்தின் ஆரம்பம். கீதோபதேசத்தின் முடிவிலே  கடமையைச் செய் பலனை நீ எதிர் பாராதே;  அந்தப் பலனை  நீ செய்த  கடமைக்கேற்ப  வடிகட்டி  நல்லதை அளிக்கவே நான் இருக்கிறேன்  என்று அர்ஜுனனுக்கு புரிய வைக்கவே  போர்க்களத்தையும் அந்தப்  பொன்னான நேரத்தையும்   தேர்ந்தெடுத்தான் கிருஷ்ணன்.

ஆகவே  கிருஷ்ணன் அர்ஜுனனின்  அரைகுறை மனதை முழுமைப்படுத்த வேண்டும் என்றுதான்  கீதையையே உபதேசித்தான். கிருஷ்ணன்   தீர்மானமான குரலில்  அர்ஜுனா மன்னனும் நானே; மக்களும் நானே; மரம் செடி கொடியும்  நானே. என்னிலே அத்தனையும் அடக்கம்  இப்போது நீ  உன் அஸ்திரங்களை அவர்களை நோக்கி விடப்போவதில்லை என்னை நோக்கியே விடப்போகிறாய். ஏனென்றால் என்னுள் எல்லாமே அடக்கம்  ஆகவே  நீ அதிர்ச்சி அடைய  ஒன்றுமே இல்லை;  என்னுள் அடக்கமாய் இருப்பவைக்கு சொந்தக்காரன் நான்தானே.

நானே உன்னை அனுமதிக்கிறேனே; நீ என்னை நோக்கி உன் அஸ்திரங்களை செலுத்த அதிகாரம் அளிக்கிறேனே;  அதற்குப் பிறகும் உனக்கு என்ன தயக்கம்? ஆகவே தயங்காமல் முழு மனதோடு  என்னைச் சரணடைந்து உன்   அஸ்திரங்களை  என் மேல் விடு. அதனால் வரும் பாவ புண்ணியங்கள் பலாபலன்கள்  எல்லாமே  என்னைத்தான் சாருமே அன்று உன்னைச் சேராது;  அதற்கு நான் பொறுப்பு.  இப்போது  புரிகிறதா?  என்று அர்ஜுனனின்  மயக்கத்தையும்  சந்தேகத்தையும் தீர்த்து வைத்து  அர்ஜுனன் ஒரு கருவிதான் செலுத்துபவன் கிருஷ்ணனே  என்று அவனுக்கு உணர்த்தவே கீதை பகன்றான்.  அர்ஜுனன் தெளிந்தான் அதர்மம்  அழிந்தது.

ஆகவே இப்போது  புரிகிறதா? எதைச் செய்தாலும் முழுமனதோடு செய்யும் போதுதான் முழுப்பலனும் கிடைக்கிறது; அரைகுறையான மனதோடு செய்யும்போது  அதன் பலனும் அரைகுறையாகவே நிற்கிறது; இதை உணர்த்தவே    கிருஷ்ண பரமாத்மா  கீதை பகன்றான்.

“பரித்ராணாய சாதூனாம் விநாசாய சதுஷ்க்ருதாம்
 தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே”

எப்பொழுதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம்  தலை எடுக்கிறதோ அப்பொழுதெல்லாம் தர்மத்தை நிலைநாட்ட நான் அவதரிப்பேன்; யுகம் யுகமாக என்பது கீதாசாரம்.  ஆகவே எதைச் செய்தாலும் அரைகுறை மனதோடு செய்யாதே!  முழுமையான மனதோடு செய்! அப்போதுதான் முழுமையான பலன் கிடைக்கும் என்பதை உணர்த்தவே  கீதை பிறந்தது. அந்தக் கீதையை அப்போதே போர்க்களமாயிருந்தாலும் பரவாயில்லை என்று  கீதோபதேசத்தை அங்கேயே  செய்தான் கிருஷ்ணன்   என்றேன் நான்   ஆமாம் உண்மைதான் என்று ஒப்புக்கொண்டாள்  என் சகதர்மிணி.

அதோடு  நிறுத்தி இருக்கலாம்  நான் மிகவும் யோசனை செய்து பேசிய மொத்தப் பேச்சையும்  ஒன்றுமில்லாமல் ஆக்கி விட்டாள்  ஒரே  ஒரு கேள்வி கேட்டதன் மூலமாக.    அந்தக் கேள்வி:      டாஸ்மாக்  கடை வரும்போது  நீங்க வேகமா காரை ஓட்டிகிட்டு வந்துருவீங்களா?  இல்லே  மெதுவா  காரை ஒட்டிகிட்டு வருவீங்களா?  என்றாள்.

நான் மெதுவாத்தான் காரை ஓட்டிகிட்டு வருவேன்;  ஏனென்றால்  என் மேல் எனக்கு நம்பிக்கை  இருக்கிறது; டாஸ்மாக் கடைக்கு நான் போக மாட்டேன் என்று;    அதுமட்டுமல்ல… எப்படிப்பட்ட தடங்கல் வந்தாலும் சமாளிக்க  முடியும் என்று.   ஆனால் வேகமாகக்  காரோட்டி வந்தால் வேண்டுமென்றே  யாரேனும்  குறுக்கேவந்து விழுந்து தகராறு ஏற்படலாம்;  அல்லது  விபத்தே  கூட  ஏற்படலாம்;  ஏனென்றால்   செய்யும் காரியங்களைத்  தன்னம்பிக்கையோடு  தெளிவாகச்  செய்தால்தான்  ஆபத்திலிருந்து தப்பி   எதிராளியிடம் தோற்காமல் வர முடியும் என்று சொல்லிச் சமாளித்தேன்.  ஆனாலும் பெண்கள் புத்திசாலிகள்தான்!

                                                  சுபம்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *