பாவலர்  கருமலைத்தமிழாழன்

 

ஆயிரமாம்   தெய்வங்கள்   உண்டாம்   என்போர்

அறிவிலிகள் !   அறிவொன்றே    தெய்வ   மென்று

பாயிரமாய்    வேதங்கள்    சொல்லும்   சொல்லைப்

பகுத்தறிவாய் !   மாடனைக்கா    டனையும்    போற்றி

மாயிருளில்    மதிமயங்கி    வீழு    வோர்கள்

மதியிலிகள் !    அவலைநினைத்   துமியை   மெல்லும்

வாயினைப்போல்   உள்ளவர்கள்   என்றே   தம்மின்

வரிகளிலே   மூடத்தை    ஓட    வைத்தோன் !

 

சாதிகளின்   வேரறுக்கத்    தன்னு   டம்பின்

சதிநூலை    அறுத்தெறிந்தே    பூணூல்   தன்னை

ஆதிதிரா    விடனென்னும்    கனக   லிங்க

அருந்தோழன்    மார்பினிலே   அணிய   வைத்து

வேதியர்கள்    பறையரென்னும்    வேறு   பாட்டை

வெறிதன்னைப்   போக்குகின்ற   செயலைச்   செய்து

சாதித்த   புரட்சியாளன்     இவனைப்   போல

சரித்திரத்தில்   பெயர்சொல்ல   யாரே   உள்ளார் !

 

தான்உண்ண   உணவின்றி    வறுமை   தன்னில்

தவித்திட்ட   போதினிலும்   கவிதைச்   சோற்றைத்

தேன்சுவையில்   பிறருண்ண   ஆக்கி   வைக்கத்

தெவிட்டாமல்  நாமதனை   உண்ணு   கின்றோம்

ஊன்வருத்தி   அவர்வடித்த   கவிதை   யெல்லாம்

உயிர்துடிப்பை    நமக்கின்றும்   ஏற்றும்   போதும்

ஏன் பிறர்கால்    நத்துதற்கே    ஓட   வேண்டும்

எழுந்திடுவோம்   பாரதிவழி     ஓங்கச்    செய்வோம் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *