படக்கவிதைப் போட்டி – (91)

பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

15592017_1186125674774963_1708252129_n

112795645n05_rஷாம்னி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (24.12.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுக்களும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

editor

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

Facebook Twitter Flickr 

Share

About the Author

editor

has written 1162 stories on this site.

நிர்வாக ஆசிரியர், வல்லமை மின்னிதழ்

10 Comments on “படக்கவிதைப் போட்டி – (91)”

 • சி.ஜெயபாரதன்
  சி. ஜெயபாரதன் wrote on 20 December, 2016, 23:48

  பெண்ணடிமை

  சி. ஜெயபாரதன், கனடா

  தலையாட்டிப் பொம்மைகளா
  தாய்க் குலத்து
  வாய்பேசா வனிதையர் ?
  சாவி கொடுத்தால்
  சலங்கை ஒலி
  தாளமிடத்
  தாவியாடும் பாவைகளா ?
  பாரதி ராஜா தேர்ந் தெடுக்கும்
  திரை உலகத்
  தேனிலவு வானிலவுத்
  தேவதையரா ?
  தொப்புள் கொடி அறுந்ததும்
  அப்பனுக்கு அடிமை !
  தாலிக் கொடி ஏறியதும்
  போலிப் புருசனுக்கு அடிமை !
  வேலைக்குப் போன
  ஊழியத்தில்
  மேலதிகாரிக்கு அடிமை !
  வாழ்க்கையில்
  உனக்கில்லாத பட்டமா ?
  விதவை, மலடி,
  உடன்கட்டை ஏறடி !
  வரதட்சணை வர்த்தகி !
  புகுந்த வீட்டில்
  மாமியாருக்கு அடிமை !
  ஆணைப் பெற்றவள் நீ !
  பெண்ணைப் பெற்றவளும் நீ !
  ஆயினும்
  இல்லமும், நாடும் உனக்குப்
  பொல்லாத சிறைதான் !
  தலையாட்டம் நின்று
  தலை நிமிர்ந்து
  விதியை எதிர்க்கி றாயோ
  அன்றுதான்
  விடுதலை உனக்கு !

  +++++++++++++

 • Radha viswanathan wrote on 21 December, 2016, 17:51

  பாவை புகட்டும் பாடம்

  அசைவு உண்டு உற்று நோக்க‌
  அணுவின் ஒவ்வொரு துகளிலும்

  ஆட்டம் ஆரம்பமாகிறது
  அசைவுகள் தொடர தொடர‌

  அசைவுகளும் ஆட்டமும்
  அடங்கியதே இவ் வாழ்க்கை

  அசைவுகளும் ஆட்டமும் இல்லாவிடில்
  அனைத்தும் ஆவியில்லா ஜடமாகுமே

  இதையே உணர்த்துகிறானோ
  இறைவனும் ஆடலரசனாக‌

  பார்க்கும் நமக்கு இந்த‌
  பாவையின் ஆட்டமும் பள்ளிக்கூடமே

  கற்க பாடமும் பல உண்டு இவளிடத்தில்
  கவனித்துப் பார்க்கும் நமக்கு

  இருக்கிறது இவளுக்கு என்றும்
  சுதந்திரம் சுழன்று சுற்றி ஆட–ஆனால்

  வஞ்சி இவளின் ஆட்டம் என்றும்
  வரம்பும் எல்லையும் மீறுவதில்லை

  ஆடும் ஆட்டத்திற்கும் எங்கும்
  இடம், பொருள், ஏவலுண்டாம்

  எல்லை மீறா ஆட்டம் தருமாம்
  என்றும் எல்லோருக்கும் இன்பம்

  இதனை எடுத்து இயம்புகிறாள்
  இந்தப் பாவை தன் தலை ஆட்டத்தில்

 • நாகினி
  நாகினி wrote on 22 December, 2016, 20:01

  பிடித்து ஆட்டு.. 

  கொடுமை கண்டு துடித்தெழ
  .. கொடுப்பினை இல்லையெனப் பெண்மகவு
  கொலுவீற் றிருந்தால் உரிமை
  …கொடுத்திடுவார் என்றுன தெண்ணத்தீ
  கொடியைத் தகர்த்தெ றியுந்நல்
  .. கொள்கைப் படிகளில் ஏறிநின்று
  *கொழுத்தா டுசெய்திடும் ஈனர்கள்
  .. கொண்டை பிடித்தாட்டு கண்ணே!

   *கொழுத்தாடு=சண்டை
  … நாகினி

 • சி.ஜெயபாரதன்
  சி. ஜெயபாரதன் wrote on 22 December, 2016, 22:11

  பெண்ணியம்

  சி. ஜெயபாரதன், கனடா

  கரகம் ஆடுவாள் இந்தக்
  காரிகை !
  கொலுவில் குந்தி யிருப்பாள்
  கோமகள் !
  கோல மிடுவாள்
  காலைப் பொழுதினில் !
  தாளத்துக் கேற்ப உடலைக்
  குலுக்கி ஆடுவாள் !
  வீணை போல் மேனி !
  மீனைப் போல் நீள் விழிகள் !
  தங்க ரதம் போல்
  வருவாள் !
  பாடுவாள் ! நாடுவாள் !
  ஓடுவாள் ! சாடுவாள் !
  தேடுவாள் ! கூடுவாள் !
  சூடுவாள் !
  வாள் ! வாள் ! வாள் !
  வனிதை
  ஓர் கூரிய வாள் !
  ரோஜா முள் !
  ஆனால்
  ஆயுதம் இல்லாத உறை !

  ++++++++++++++

 • ராதா விஸ்வநாதன் wrote on 23 December, 2016, 7:04

  நாளின் அவர்களின் கவிதையில், சொற்கள் இலக்கண நாரில் அழகாக தடுக்கப் பட்டுள்ளன.

 • ராதா விஸ்வநாதன் wrote on 23 December, 2016, 7:07

  தட்டச்சு தவறாக வந்து விட்டது. நாகினி என்று படிக்கவும்

 • நாகினி
  நாகினி wrote on 23 December, 2016, 8:10

  ராதா விஸ்வநாதன்  🙂  அழகாக தடுக்க/தொடுக்கப்பட்டுள்ளன (எது சரியோஓ).. தொ.. த வாகி மீண்டும் தட்டச்சுப்பிழையோ.. ஹ்ஹஹா .. மிக்க நன்றிம்மா 

 • முனைவர் மா.பத்ம பிரியா,எஸ்.எஃப்.ஆர்.மகளிர் கல்லூரி,சிவகாசி. wrote on 24 December, 2016, 19:24

  தலையாட்டிகள்

  எதிர்கேள்வி கேளாத எதிர்காலமே!
  நம்முள்ளே எத்தனை தலையாட்டிகள்
  தலையின் பயனே தலையாட்டவா
  தமையனே!
  தன்மானமில்லா தள்ளாடும் தமிழனமே!
  தலைமை கண்டு தலைகுனியும் தலைவனுக்கா
  உன்தலை ஆட வேண்டும்
  எத்தனை தலைமை வந்தாலும்
  ஏன்னென்று கேளாது தலையாட்டும் தலைவனுக்கா
  உன் தலை வீழ வேண்டும்
  பகுத்தறிவில்லா பாமர தலையாட்டிகள்
  பாவம் ஆட்டினால் பரவாயில்லை
  பட்டதாரி கூட்டமும் சேர்ந்தா தலையாட்டும்
  பதறும் நெஞ்சுள்ளே கதறும் தமிழ்மானம்
  புரட்சியாளர் வந்து போன புண்ணிய பூமியிது
  பொய் புரட்டு ஆதிக்கத்தை வேடிக்கை பார்க்கிறது
  விழிப்புணர்வில்லா வாக்காளத் தலையாட்டிகளால்
  ஆளும் வர்க்கத்தை ஆதரிக்கும்
  அரசியல் தலையாட்டிகள் நம்முள்ளே
  இலவசத்தில் மயங்கிய மக்களால்
  இலஞ்சத்தில் மிதக்கும் இரக்கமில்லா தலையாட்டிகள்
  தலைகுனிவு தமிழனுக்கா
  தலைநிமிர்ந்து பாருங்கள்
  தயவுகூர்ந்து தலையாட்டிகளே
  தளிர்க்கும் பிஞ்சுகளை தலையாட்டிகளாய் மாற்றாதீர்

 • செண்பக ஜெகதீசன்
  Shenbaga jagatheesan wrote on 24 December, 2016, 20:01

  ஆடாதே…

  ஆடும் பொம்மை ஆட்டமென
  அமைந்த உலக வாழ்வினிலே
  ஓடும் இந்த மாந்தரெல்லாம்
  ஒன்று மறியா தாடுகின்றார்,
  கேடு செய்தும் ஏமாற்றியும்
  குவித்த பொருளும் நிலைப்பதில்லை,
  நாடு செயலில் நல்லதையே
  நாளும் நலமாய் வாழ்ந்திடவே…!

  -செண்பக ஜெகதீசன்…

 • சரஸ்வதிராசேந்திரன்
  saraswathiRajendran wrote on 25 December, 2016, 19:17

  ஆட்டுவித்தால் யாரொருவர்
  ஆட மாட்டார் உலகினில்
  ஆட்சிப் பீடத்தைப் பிடிக்க
  அள்ளி அள்ளி கொடுத்து
  ஆடவைக்கும் வஞ்சிப் பெண்ணின்வரம்பு மீறல்
  ஆட்டுவிப்பிற்கு ஆடுகின்றார்
  அமைச்சர் யாவரும் பதவிஆசையில்
  தன் மானத்தை அடகு வைத்து
  தலயாட்டி பொம்மைகளாய் மாறுவது
  தலைவிதியா ? இல்லை இறைவனின் சதியா ?
  அக்கிரமங்களுக்கு தலையாட்டும்
  பொம்மையாய் மானிடர் இருக்கும் வரை
  தலை நிமிர்வு தமிழகத்திற்கும் அவர்தம்
  எதிர்கால வாரிசுகளுக்கும் இல்லை ஒரு போதும்
  வேதனையும் சோதனையும் தமிழக மக்களுக்கே !
  சரஸ்வதி ராசேந்திரன்

Write a Comment [மறுமொழி இடவும்]


+ 8 = twelve


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.