-மேகலா இராமமூர்த்தி

மாந்த இனம் மண்ணில் தோன்றிய காலந்தொட்டு அவர்களில் நல்லவர்களும் இருக்கிறார்கள்; தீயவர்களும் இருக்கிறார்கள். நல்லவர்களைவிடத் தீயவர்கள் எண்ணிக்கையில் குறைவுதான் என்றாலும் அவர்களால் விளையும் தீமை மிகப்பெரிது. மொத்த மானுடச் சமுதாயத்தின் மகிழ்ச்சியையும் குலைப்பதற்கு அதுவே போதுமானதாய் இருந்துவிடுகின்றது.

எண்ணிக்கையில் குறைவாயிருக்கும் தீயவர்களின் கை (நல்லவர்களைக் காட்டிலும்) ஓங்கியிருப்பதற்கு என்ன காரணம்?

அவர்களின் தன்னம்பிக்கையும் துணிச்சலுமே காரணம் எனலாம்.

ஆம்! தீயவர்கள் எதையும் துணிச்சலோடு செயற்படுத்தும் திறன் பெற்றவர்களாக இருக்கின்றார்கள். நல்லவர்களோ நாம் இதைச் செய்யலாமா? இதனால் நம் பெயர்கெட்டுப் போக வாய்ப்புள்ளதா? நமக்கு ஏதேனும் சங்கடங்கள் நேர்ந்துவிடுமா? என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருப்பதிலேயே காலத்தைக் கழித்துவிடுவதால் தம் நல்வாழ்வைத் தொலைப்பதோடு, சமூகத்தில் தீமை நிலைபெறுவதற்கும் காரணமாகிவிடுகின்றனர்.

உலகம் நல்லோர் வாழ்வதற்கு அஞ்சும் இடமாக – ஆபத்தான இடமாக மாறியிருப்பதற்கு மேனாட்டு அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டைன் கூறும் காரணம் நாம் சிந்திக்கத்தக்கது

“இவ்வுலகம், மக்கள் வாழ்வதற்கு ஒவ்வாத இடமாக மாறிப்போனதற்குக் காரணம் தீயவர்கள் இருப்பது அல்ல! அந்தத் தீயவர்களை எதிர்த்து மக்கள் ஏதும் செய்யாமல் இருப்பதே!” என்கிறார் அவர். (The world is a dangerous place to live; not because of the people who are evil, but because of the people who don’t do anything about it.)

உண்மைதான்! தீயோரைவிட, அந்தத் தீயோர் செய்யும் கொடிய தீமைகளுக்குத் துணைபோவோரே அதிக ஆபத்தை விளைவிக்கின்றார்கள். ஆதலால் தீயோரைப் போலவே அவர்களும் தண்டிக்கப்படவேண்டியவர்களே என்றுதான் தோன்றுகின்றது.

இக்கருத்துக்கு அரண்சேர்க்கும் நிகழ்வொன்று சைவ சமய அடியார்களில் ஒருவரான சண்டேசுர நாயனார் வரலாற்றில் காணப்படுகின்றது.

பொன்னியாறு பொய்யாது புனல்கொழிக்கும் வளமான சோழநாட்டிலுள்ள திருச்சேய்ஞ்ஞலூரில் எச்சதத்தன் என்பவருக்கு மகனாகத் தோன்றியவர் ’விசாரசருமன்’ எனும் இயற்பெயர் கொண்ட சண்டேசுர நாயனார். அவர் அவ்வூரிலுள்ள மறையவர்களின் பசுக்களை மேய்த்துவரும் பணியைச் செய்துவந்தார். அப்பசுக்கள்மீது மிகுந்த பரிவும் அன்பும்கொண்டு அவைகளுக்குப் புல்லும் நீரும் தம்மால் ஒல்லும்வகையெல்லாம் அவர் அளித்துவந்ததால் அப்பசுக்கள் அவர்மீது கழிபேரன்பைக் காட்டின. அவரை அணைந்துநின்று கறவாமலேயே பாலைப் பொழிந்து தம் பாசத்தைப் புலப்படுத்தின.

பசுக்கள் தன்பால்கொண்ட அன்பால் பொழிகின்ற அந்த ஆன்பாலை (பசும்பால்) வீணாக்கக்கூடாது என்றெண்ணிய சிவநேசச் செல்வரான சண்டேசர், அங்கேயே (மண்ணியாற்றாங்கரையில்) மண்ணில் சிவனுக்குக் கோயில் எழுப்பிச் சிவலிங்கம் அமைத்து அதற்கு அப்பசும்பாலை அபிடேகம் செய்து வந்தார்.

இச்செய்தி ஒருநாள் ஊராருக்குத் தெரிந்துவிட, அவர்கள் எச்சதத்தனை அழைத்து அவர் தம்மகனைக் கண்டிக்குமாறு அறிவுறுத்தினர். ஊரார் சொன்னதன் உண்மையை அறியும்பொருட்டு மறுநாள் காலை சண்டேசுரர் மாடுகளை மேய்க்கும் இடத்தருகே இருந்த ஒருமரத்தின் பின்னே மறைந்திருந்து மகனைக் கண்காணித்து வந்தார் தகப்பனார்.

வழக்கம்போலவே பசுக்கள் பொழிந்த பாலைச் சில பாண்டங்களில் பிடித்துவைத்த சண்டேசுரர், சிவபூசையில் ஆழ்ந்தார். தொலைவிலிருந்து இதனைக் கண்ட எச்சதத்தன், ஊரார் சொல்வதுபோல் தம் மகன் மாடுகளின் பாலை மண்ணில்சொரிந்து வீணடிக்கிறான் என்றே நினைந்தவராய், பிள்ளையின் அருகில் விரைந்து வந்தார்.

சிவபூசையில் சிந்தை ஒன்றியிருந்த சண்டேசர் தம் தந்தை வந்ததைக் கவனிக்கவில்லை. ஆத்திரம் கொண்ட எச்சதத்தன், தம் கையிலிருந்த கோலால் மகன் முதுகில் ஓங்கி அடித்தார். சித்தத்தைச் சிவன்பாலே வைத்திருந்ததால், சண்டேசர் அதனை உணரவில்லை. எச்சதத்தனின் கோபம் உச்சமடைந்தது. அருகே சிறிய பாண்டங்களில் அபிடேகத்திற்காக வைக்கப்பட்டிருந்த பாலைத் தம் காலால் எட்டி உடைத்தார். அதனால் பால்முழுவதும் மண்ணில் சிந்தி வீணானது.

பாண்டங்கள் உடைபடும் ஓசையில் சுயவுணர்வு மீண்ட சண்டேசர், பாலிருந்த பாண்டங்களையெல்லாம் உடைத்துத் தம் தந்தையார் உக்கிரதாண்டவம் ஆடிக்கொண்டிருப்பதைக் கண்டார். சிவாபிடேகத்திற்காக வைக்கப்படிருந்த பால் வீணானது கண்ட அவர் கடுங்கோபம் கொண்டார்.

அந்த அபராதத்தைச் செய்த தந்தையைத் தண்டிக்க நினைத்தார். தன் அருகிருந்த ஆனிறைமேய்க்கும் கோலை எடுத்தார்; உடனே அது மழுவாக மாறியது. அதனை வீசித் தம் தந்தையின் காலைத் துண்டித்தார். பாலை உதைத்து வீணடித்த காலை வெட்டியதோடு சண்டேசர் விட்டிருக்கலாம்! ஆனால் அவர் விடவில்லை! தந்தையின் மறுகாலையும் வெட்டினார். இது அதிகப்படியான தண்டனையாக நமக்குத் தோன்றலாம். ஆனால் இதற்கு அருளாளர்கள் தரும் விளக்கம் கருதத்தக்கது.

“ஒருகால் உதைப்பதற்கு ஊன்றிநின்ற மறுகால்தானே துணைநின்றது? அதனால்தான் சண்டேசர் இருகால்களையும் வெட்டினார் என்பது அவர்கள் தரும் விளக்கம். உணர்ச்சி மிகுந்திருந்த அவ்வேளையில் சண்டேசர் அவ்வளவுதூரம் (சட்டபூர்வாகச்) சிந்தித்துச் செயல்பட்டிருப்பாரா என்பது ஐயத்திற்குரியதே. எனினும், சிவநிந்தனை செய்தவருக்கு, அது தந்தையாகவே இருப்பினும், கடுந்தண்டனை தரவேண்டும் எனும் எண்ணம்  அவர் உள்ளத்தில் ஊடாடியதன் விளைவே இது என்று நாம் ஊகிக்கலாம். நீதிநூல்களின் அறக்கண்கொண்டு கண்டோமானால் இத்தண்டனை பொருத்தமானதாகவே படுகின்றது.

சமூகத் தீமைகளுக்குத் தம் எதிர்ப்பைக் காட்டாது (மவுனமாயிருந்து) துணைபோகும் பொதுமக்களுக்கும் இதனை நாம் பொருத்திப் பார்க்கலாம் அல்லவா? அவ்வாறு நோக்கினால் தீமைக்குத் துணைநிற்கும் அவர்களும் தண்டைக்குரிய குற்றவாளிகளாகின்றனர்.

இன்றைய சூழலில், தீயதை இனங்காணும் திண்மையும் அதனை எதிர்த்துச்
செயலாற்றும் வன்மையும் நல்ல சமுதாயத்தைக் கட்டமைப்பதற்கான அடிப்படைத் தேவைகளாய் இருக்கின்றன.

தீயவை… சமூகத்தின் அறவாழ்வையே கருகச்செய்யும் தீ அவை! சிறுபொறியாய் இருக்கும்போதே அவற்றை அழித்துவிடவேண்டும். இல்லையேல் குற்றமற்ற நல்லோரின் வாழ்வும் ’எரிமுன்னர் வைத்தூறு போல’க் கெடுவதைத் தடுக்கமுடியாது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *