எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!

1

பவள சங்கரி

64p1

எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு தமிழ் இலக்கியத்துக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு வல்லமையின் மகிழ்ச்சியான வாழ்த்துகள்.

வண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள் வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)

cropped-e0ae89e0aeafe0aeb0e0aeaae0af8de0aeaae0aeb1e0aea4e0af8de0aea4e0aeb2e0af8d-1வண்ணதாசன்

p47dதந்தை எட்டடி பாய்ந்தால் மகன் பதினாறு அடி பாய்வார் போல. எஸ்.கல்யாணசுந்தரம் என்ற தன் இயற்பெயரைத் தானே மறந்துவிடும் அளவிற்கு, தானே சூடிக்கொண்ட புனைப்பெயர்களை நிலைநிறுத்திக்கொண்டவர். கல்யாண்ஜி என்று தனக்குத்தானே மரியாதையாக விளித்துக்கொள்ளும் அவர்தம் தன்னம்பிக்கை என்னை வெகுவாகக் கவர்ந்த விசயம். ஆனாலும் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பேட்டியில் அவருடைய அந்தப் பெயருக்கான விளக்கத்தைப் படித்தபோது அவர்மீது இருந்த அபிமானம் மேலும் பன்மடங்கானது. ”கல்யாண்.சி என்ற முன்னெழுத்தைச் சற்று நகாசு வேலை செய்து கல்யாண்ஜி ஆக்கினேன். அக்காலத்தில் கல்யாண்ஜி, ஆனந்த்ஜி போன்ற இந்தி இசையமைப்பாளர்கள் ஆட்சி செலுத்தி வந்ததும், அவர்கள் இசையால் நான் ஈர்க்கப்பட்டதும் ஒரு காரணம். வண்ணதாசன் எனது முன்னோடி எழுத்தாளர் வல்லிக்கண்ணனின் பாதிப்பில் பெயர் கொண்டது” என்று சொல்லியிருந்தார்.

“மனிதன் என்று இருந்தால், அவ்வப்போதாவது மண்ணில் காலோ கையோ பட வேண்டாமா? வீடும் சரி, வேலை பார்க்கிற இடங்களும் சரி, சாலைகளும் சரி… பாதங்களுக்கும் மண்ணுக்கும் உள்ள உறவை அடியோடு நிராகரித்துவிட்டன. மண் வாசனை மாதிரி வியர்வை வாசனையையும் ஒழித்துக்கட்டிவிடுவார்கள்போல…” வண்ணதாசன் அவர்கள் மண் மீதும், மனிதம் மீதும் கொண்டுள்ள மாறாக்காதலை வெளிப்படுத்தும் சொற்கள் இவை.

29630399பரிசு பெற்ற நூல்

எழுத்துலகில் தனக்கென ஓர் தனிப்பட்ட பாணியை உருவாக்கிக் கொண்டவர் இவர். ஓய்வுபெற்ற ஒரு வங்கி அதிகாரிக்குரிய அத்தனை இலட்சணங்களும் அவர்தம் படைப்புகளில் மிளிர்வதைக்காணலாம். ஆம், வாழ்க்கையின் உச்சத்தில் இருப்பவர்களையும், நொந்துபோய் கீழ்மட்ட நிலையில், வறுமையின் பிடியில், வாங்கிய கடனை அடைக்கவும் வழியற்ற ஏழ்மையில் கூனிக்குறுகி வேதனையில் அல்லல்படும் பலதரப்பட்ட மனிதர்களையும் ஒருசேர சந்திக்கும் வாய்ப்பைப்பெற்றவர், அதனை வெறும் வருமானத்திற்கான பணியாக மட்டும் பார்க்காமல் மனிதர்களின் ஆழ்மனங்களை ஊன்றிப் படித்திருக்கிறார் என்பதையும், ஒவ்வொருவரின் இன்ப துன்பங்களையும் உடனிருந்து உணர்ந்தவராக இருந்திருக்கிறார் என்பதை அவருடைய ஒவ்வொரு எழுத்தும் நமக்கு உணர்த்துவதை மறுக்கவியலாது.

பிரபல இலக்கிய விமர்சகரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான திரு தி.க.சிவசங்கரனின் மகன் இவர். சக மனிதர்களிடம் நிறைவான அன்பும், நெகிழ்ச்சியும் கைவரப்பெற்றவர். இவையனைத்தையும் தம் எழுத்துகளில் தாராளமாக வெளிப்படுத்துபவர். மனிதர்களை இவர் பார்க்கும் பார்வையில் எங்கிருந்து இப்படியொரு தனித்தன்மை வருகிறது என்று ஆச்சரியத்தில் ஆழ்த்துபவர். வயதுக்கு மீறிய முதிர்ச்சியை அவர்தம் எழுத்துகளில் காணலாம். தொன்மையான நெல்லை மண்ணின் மணமும், குணமும் தாமே கலந்தைகொள்ளும் அளவில் இவர்தம் படைப்புகள் பல கனவுகளையும், வன்மங்களையும், வரைவிலக்கணங்களையும் மிக யதார்த்தமாக வெளிப்படுத்துவது.

சிலகாலம் முன்பு திரு வண்ணதாசன் அவர்களின் தந்தையார் உயர்திரு தி.க.சி அவர்களை நம் வல்லமைக்காக நேர்காணல் செய்தபோது, தம்முடைய பெருமைகள் அனைத்தையும் கடந்தவராக, மிகவும் நெகிழ்ச்சியான மனநிலையுடன், தம்மை ‘வண்ணதாசனின் தந்தை நான்’ என்று பூரிப்புடன் அறிமுகம் செய்துகொண்ட தருணத்தில்,

மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்

என்ற குறளை நினைவூட்டுவதாகவே இருந்தது. அந்த எளிய மனிதரின் மகனான இவரும் அந்த எளிமையில் தம் தந்தையாருக்கு சற்றும் சளைத்தவர் அல்லர் என்பதைத் தம் ஒவ்வொரு செயலிலும் உணர்த்துபவர்.

’போய்க் கொண்டிருப்பவள்’ என்ற அவருடைய சிறுகதையில் ஒரு புகைப்படக்காரரை அவர் விளக்கும் விதம் பாருங்கள்… அவர் எழுத்தின் வலிமை புரியும்!

”விருத்தா புகைப்படக்காரன் என்பதால் என்னைவிடப் பிரகாசிக்க முடிந்தது. அவர்களை வெவ்வேறு தோற்றங்களில் மிகச் சலுகையான நெருக்கத்தில் எடுத்துக் கொண்டிருந்தான். புகைப்படம் எடுக்கும்போது ஒவ்வொரு தடவையும் அவன் வேறு மனிதனாகி விடுகிறான். நான் ஒருவன் நிற்கிறேன் என்றோ அவள் அன்னம் என்றோ, அவர் இன்னார் என்றோ நினைக்கிறதை ஒழித்து வெவ்வேறு பரிமாணங்களுக்கு அந்த புகைப்படத்தை இட்டுச் செல்கிற முழுக் கவனத்துடன் இயங்குவான். புன்னகைக்க வைக்கிற கோணங்கித் தனங்களைப் பிறர்போல பிரயோகிக்காமல் நெற்றி இறுகி இறுகி புருவமத்தியில் ஒரு பள்ளம் விழுந்து கொண்டே போக, எதிரிலிருப்பவர்களை அவர்களின் பாவனைகளிலிருந்து உதறி எடுத்த ஒரு சட்டென்ற நொடியில் பிடிப்பான். சேலை மடிப்புகளை நீவிவிடுவது, காலணி மேல் மடங்குகிற கால்சட்டைகளை ஒழுங்கு செய்வது போன்ற எதுவுமின்றி ஆடைகள் எல்லாம் இடையூரு அல்ல ஒரு நல்ல புகைப்படத்திற்கு என்ற வகையில் இயல்பின் சுபாவமான அவிழலில் எல்லாம் அதனதன் இடத்திலிருக்க, ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு ஜீவனை வருத்தியிருப்பான்.”

“நட்சத்திரத்தையெல்லாம் யாரோ உலுக்கிப் பறித்துக்கொண்டுவிட்டதை போல வானம் மொட்டையாக இருந்தது” என்பார் வடிகால் என்ற சிறுகதையில்.

15578969_10153947670941386_6852705848575819340_n
நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன் இந்த திருநெல்வேலிக்காரர் என்றால் அது மிகையில்லை. தோட்டத்துக்கு வெளியே சில பூக்கள்,சமவெளி,பெயர் தெரியாமல் ஒரு பறவை,கிருஷ்ணன் வைத்த வீடு, ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இவரின் பல சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. .தமிழக அரசின் கலைமாமணி விருது, இலக்கியச் சிந்தனை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் தற்போது ‘சாகித்திய அகாடமி விருது’ பெற்று அவ்விருதிற்கும் பெருமை சேர்த்துள்ளார். இவருக்கு வள்ளி என்ற அன்பு மனைவியும், சங்கரி என்ற மகளும், .ராஜு என்ற மகனும் உள்ளனர். கல்யாண்ஜி என்ற பெயரில் அற்புதமான கவிதைகளை எழுதிக்குவித்துக் கொண்டிருப்பவர்.

“இலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிருத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும். . நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது” என்று வெற்று அலங்காரத்திற்காகப் பேசுபவர் இவர் இல்லை என்பதை வாசகர்களை உணரச்செய்யும் இவருடைய நேர்த்தியான எழுத்துகளும், அன்பில் தோய்ந்த இனிமையான மொழிகளும்! இன்னும் பல படைப்புகளுடன், பல விருதுகளையும் பெற்று பல்லாண்டுகள், ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளுடன் மனைவி, மக்களுடன் நிறைவான வாழ்வை வாழவேண்டும் என்று உளமார பிரார்த்திக்கிறோம்.

விருது பெற்றோர் பட்டியல்
விருது பெற்றோர் பட்டியல்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “எழுத்தாளர் வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!

  1. வண்ணதாசன் என்ற கல்யாண்ஜீ என்ற நண்பர் ஒரு சிறந்த படைப்பாளர்; An uncompromising writer; சிறந்த படைப்பபாளி அமரர் தி.க.சி.யின் மைந்தர். அவருக்குத் தரப்பட்டதால் சாகித்ய அகடமி விருதின் மதிப்பு உயர்ந்தது. வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *