க. பாலசுப்பிரமணியன்

 

திருவெள்ளியங்குடி –  அருள்மிகு  கோலவல்வில் இராமர் திருக்கோவில்

 ag

மாபலியின் மமதையை மூவடியில் அடக்கிவிட 

மாதவனின் மனமறிந்து மருண்டான் சுக்கிரன

மாயவனின் உளமறிந்தும் மனமுவந்த மன்னனின்

மங்கல நீர்வழியில் மலர்வண்டாய் மாறிநின்றான் !

 

ஒளியிழந்த துளைதன்னில் வருநீரை வழிமறித்து

ஒளிந்திருந்த சுக்கிரனின் விழியொளியைப் பறித்து

பழிதீர்த்த பரந்தாமா ! கருணைமழை கார்மேகா!

விழிகொடுத்த விக்ரமா! உலகாளும் உத்தமனே !

 

மூவடியால் உலகளக்க முன்னவனே முடிவணங்க

திருவடியால் அளந்தவனும் திருவோணம் தந்துவிட 

பொன்னடியே அரங்கா! விண்ணுறையும் என்னுயிரே!

சீரடியைக் கொண்டேன் சிந்தையிலே வந்தருள்வாய்!

 

அமரர்கள் இருப்பிடமே அழகெனச் சொல்லி

மாயவன் திறமையில் மனக்குறை கொள்ள

மாதவன் மனம்கவர் ஆலயம் அமைத்தே

மண்ணில் நிகரில்லா மாயத்தைத் தந்தவனே !

 

குழலேந்திக் கவர்ந்தாய் கோபியர் மனமெல்லாம்

வில்லேந்தி வந்தாய் மனையாளைக் காத்திடவே

புள்ளேரிப் பறந்தாய் கஜேந்திரனின் குரல்கேட்டு

விதியேந்தி வந்தேன் மதிக்காக்க வருவாய் ! 

 

அரவணையில்  உறங்கியது போதுமய்யா பரந்தாமா

மார்கழியும் பிறந்ததுவே மனம்குளிர்ந்து எழுந்திடுவாய்

பாரனைத்தும் வேண்டிநிற்கும்  நின்பதம் கொடுப்பாயோ

பாற்கடலின் தேனமுதில் பங்கெனக்கும் தருவாயோ ?

 

 

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *