திருசிறுப்புலியூர்-  அருள்மிகு அருமாக்கடல் அமுதன் திருக்கோயில்

 ag

கண்ணுடை விரல்களும் புலியின் நகங்களும்

கைகளில் ஏந்தியே கயிலையான் போற்றிய

கனவுடை முனிவன் வைகுந்தம் வேண்டிட

கனிவுடன் சிவனும்  கேட்டதைத் தந்தான்!

 

அரங்கத்தில் அயர்ந்தவன் அருளினைப் பெற்றே 

அலைமகள் தலைவனின் அடிகளில் அமர்ந்தே

அருளுடை வியாகிரன் அச்சுதன் போற்றிட

அகிலமே வியந்ததே அற்புதம் அனந்தனே !

 

சிந்தையில் சிவனும் மூச்சினில் முகுந்தனும்

விந்தையாய் நிறுத்தியே வேண்டிய  முனிவர்கள்

விழியினில் ஒளியின்றி வழியினை இழந்ததும்

வடிவினில் பாலனாய் அரங்கனும் அருளினான் !

 

 விந்தைகள் நித்தமும் வைகுந்தன் வாசலில்

சிந்தையை அவனிடம் சிதறாமல் தந்திட

மந்தையில் ஆடாய் சென்றிடும் மனதினை

பந்தங்கள் நீக்கியே பக்குவம் செய்வான் !

 

கருடனும் பறந்தவன் சுமைதனைத் தூக்கிடும்

கருவிட   நாகமும் களைப்பின்றித் தாங்கிடும்

கருடனின் பிடியினில் அரவினைக் காத்தாய்

கலங்கிடும் இதயங்கள் காத்திடும் கண்ணனே !

 

கைவிரலில் மலைதூக்கிக் கைவண்ணம் வரைந்தாய்  

காலடியில் காளிங்கனுக்கோ கால்வண்ணம் சொன்னாய் 

காதலுடை ராதைக்கோ தந்தாயுந்தன் கண்வண்ணம் 

கவிதையிலே தேடவோ கண்ணா சொல்வண்ணம் ?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *