திரு மணிமாடக்கோயில்

அருள்மிகு பத்ரி நாராயணப் பெருமாள் திருக்கோவில்

ag

மணிமாடங்கள் ஆயிரம் இருந்தாலும்  மாதவனே

மனத்துள்ளே நீயிருக்க மணிமாடக் கோயில்தானே

அணியின்றி அரங்கத்தில் அயர்ந்தாலும் அழகனே

அணியே ! வான்தோட்டக் கனியே ! வந்தருள்வாய் !

 

இமயத்தில் இருந்தாலும் இதயத்தைத் தொடுவாய் 

இணையேது உனக்கென்றும் இருள்நீக்கும் திருவே

பனிமூடும் வாழ்க்கைக்குப் பகலவனே பத்ரிவாசா

பணிகின்றேன் பாதங்கள் பரிவுடனே வந்திடுவாய் !

 

பணியின்றி பாற்கடலில் படுத்தாலும் பரந்தாமா

புவியாளும் திறனெல்லாம் புன்னகையில் வைத்தாயே

பிணிதீர்க்கும் மருந்தென்று யாரறிந்தார் உன்னுள்ளம்

விழிநிறையும் எழிலன்றோ திருமகளுறை திருமாலே !

 

உறியடித்த பிள்ளையிடம்  உளம்தொலைத்த கோபியர்கள்

உரிமையுடன் விளையாட  உன்னெழிலைத் தேடிவந்தார்

உன்னுருவம் எத்தனையோ உலகங்கள் வியந்ததய்யா

உலகெல்லாம் ஓருருவம் உன்னுருவமென அறிந்ததய்யா !

 

கண்ணிமைகள் மூடியவர் கற்பனையில் வடித்துன்னை

கண்ணனென்றும் கருநீலமெனக் காதலால்  சொன்னார்

கண்ணொளியின்  கரைகடந்த வண்ணமன்றோ கண்ணா

மின்னொளியும் வெட்கிவிடும் பகல்வண்ணப் பரந்தாமா !

 

கனியமுதும் கறியமுதும் சாத்தமுதும் படைத்தாலும்

சொல்லமுதைக் கேட்டதுமே செவிசாய்க்கும் சுந்தரனே

விண்ணமுது உண்டவர்கள் வந்தாலும் வரிசையிலே

கண்ணமுது கண்டபின்னே வேறமுது வேண்டுவரோ ?

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *