உயர் மதிப்பு நோட்டுகளின் தடையும் அதனுடைய தாக்கமும்

1

பவள சங்கரி

தலையங்கம்

உயர் மதிப்பு நோட்டுகள் 500, 1000 தடை செய்யப்பட்டு 60 நாட்கள் ஆகிவிட்டன. புதிய ₹2000, 500 தாள்கள் புழக்கத்தில் வந்துவிட்ட சூழலில் சுமாராக 15,000 கோடி உரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளன. இதனுடைய தாக்கங்கள் குறித்த ஆய்வு செய்யவேண்டிய நிலையில் உள்ளோம். நாட்டின்மீது பற்றுகொண்டுள்ள மக்கள் இத்திட்டத்தினால் ஏற்பட்டுள்ள பல இன்னல்களுக்குப் பிறகும் வரவேற்றுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. வங்கிகளிலிருந்து பண அட்டைகள் மூலம் பெறப்படும் பணத்தின் தொகை அதிகரிக்க வேண்டிய அவசியமோ, காசோலைகள் மூலம் பெறப்படும் தொகைகள் அதிகரிக்க வேண்டிய தேவையக்காட்டிலும் இத்திட்டம் வெற்றி பெற அனைத்து ஏடிஎம் களிலும் பணத்தாள்கள் நிரப்பப்பட வேண்டியதே உடனடித் தேவையாக உள்ளது. தங்கு தடையற்ற முறையில் தங்கள் பணத்தை எளிமையாகப் பெற முடிந்தால் மட்டுமே இத்திட்டம் மேலும் வெற்றியடையும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இன்று நூற்றுக்கு தொன்னூறு சதவிகிதம் ஏடிஎம்கள் மூடப்பட்டே உள்ளன என்பது வருத்தத்திற்குரிய செய்தி. ஆரம்ப நாளிலிருந்தே அனைத்து ஏடிஎம்களும் சரி செய்யப்பட்டு பணம் நிரப்பப்பட்டிருந்தால் பொது மக்களுக்கு இத்தனை இன்னல்கள் வந்திருக்காது. 60 நாட்கள் ஆகியும் இப்பிரச்சனை இன்னும் சரி செய்யப்படாதது வேதனைக்குரியதுதான். ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி பணம் கையிருப்பில் இருந்தும் அந்தந்த வங்கிகளின் ஏடிஎம் நிரப்பப்படாமல் இருக்கின்றன. வங்கி நிர்வாகத்தில் உள்ளவர்கள் முற்றும் துறந்தவர்களோ, சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களோ அல்ல என்பதையும் இது உணர்த்துகிறது. அவர்களும் கவனிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட வேண்டியது இத்திட்டத்தின் வெற்றிக்கு அவசியமானதாக உள்ளது.

எத்தனை பெரிய சிறந்த திட்டமாக இருப்பினும் அதனுடைய வெற்றி என்பது அடித்தள மக்களைச் சென்றடைய வேண்டும். இல்லாவிட்டால் அது தோல்வி அடைந்ததாகவே கருதப்படும் என்பதில் ஐயமில்லை. கருப்புப் பணம் மட்டுமன்றி கள்ளப்பணமும் ஒழிக்கப்பட்டிருக்கலாம். தீவிரவாதிகளுக்கு கிடைக்கப் பெறாமலிருந்த எல்லைப் புறங்களிலும் தீவிரவாதம் நடைபெறும் இடங்களிலும் நிகழ்வுகள் குறைந்திருக்கின்றன. ஆனாலும் இதைப்பற்றியெல்லாம் கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கு புரிந்துகொள்ளவோ அறிந்து கொள்ளவோ சாத்தியங்கள் குறைவு. அவர்தம் அன்றாட பிரச்சனைகள் குறையும் விதமாக, செலவினங்களின்போது இது தெரியவேண்டும். அப்பொழுதுமட்டுமே தாம் பட்ட இன்னல்களுக்கு பலன் கிடைத்ததாக நிறைவளிக்கக்கூடும்.

ரியல் எஸ்டேட் துறையில் விற்பனைகள் மிகவும் குறைந்துவிட்டாலும் விற்பனைத் தொகை குறைந்தபாடில்லை. மத்திய அரசு வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. ஆனால் அனைத்து வங்கிகளும் அதைத் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அளிக்கவில்லை என்பதே வருத்தத்திற்குரிய உண்மையாகும். மத்திய ரிசர்வ் வங்கி தன்னுடைய ஆணைகள் மூலமாக இதைக்கட்டாயப்படுத்தலாம் என்பது மக்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

நுகர் பொருட்கள் விலைகள் குறைய வேண்டும். அதாவது நம்முடைய உரூபாய் மதிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். பெட்ரோலியப் பொருட்களின் விலை தாறுமாறாக ஏறி, பெட்ரோல் லிட்டருக்கு ₹ 70 ஆக மாறிவிட்டது. சாதாரண காலங்களில் அதாவது பழைய ₹ 500, 1000 நோட்டுகள் தடை செய்யப்படுவதற்கு முன்பிருந்ததைவிட மிகவும் அதிகரித்துள்ளது. அந்நிய பணப்புழக்கத்தில் நம் உரூபாய் நோட்டுகளின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதையே இது காட்டுகிறது. உரூபாயின் மதிப்பைக் குறைக்கும் நடவடிக்கைகள் போல நமது உரூபாயின் மதிப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம். நம் உரூபாயின் மதிப்பை மற்றவர்கள் நிர்ணயிப்பதைவிட நாம் நிர்ணயிக்க வேண்டிய காலம் இது. குறைந்தபட்சம் டாலருக்கு நிகரான உரூபாயின் மதிப்பு 50 ற்கும் குறைவாக வரவேண்டும். இதனுடைய தாக்கம் அனைத்துத் துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்த வேண்டும். உதாரணத்திற்கு ஒரு சதுர அடியின் விலை ₹ 3000 லிருந்து ₹1000 ற்கு வரவேண்டும். முத்திரைத் தாள் கட்டணங்களும், அரசு நிர்ணயிக்கும் மதிப்பீடுகளும் குறைக்கப்படவேண்டும். இதுபோன்று அனைத்து மக்கள் உபயோகப்படுத்தும் பொருட்கள் உணவுப் பண்டங்களிலிருந்து காய்கறி வரை இதனுடைய பாதிப்பு இருக்க வேண்டும்.

அரசினால் ஏற்பட்ட பாதிப்புகள் மட்டுமே செயல் வடிவில் இருப்பதைத் தவிர்த்து அரசின் நற்சொற்களும் செயல் வடிவில் இருக்க வேண்டும். ஆனால் அரசு அறிவித்த பணப்பரிமாற்றக் கட்டணங்கள் இன்னும் வங்கிகளில் நீக்கப்படவில்லை. (RTGS, NEFT) போன்ற கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. ஜிஎஸ்டியில், அதாவது வரி விகிதங்கள் குறைக்கப்படும் பட்சத்தில் பொருளாதார நிலை சிறப்பான நிலையை அடையும் என்பதில் ஐயமில்லை.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “உயர் மதிப்பு நோட்டுகளின் தடையும் அதனுடைய தாக்கமும்

  1. கட்டுரை சிந்தித்து, சிந்தித்து எழுதப்பட்டது என்பது வெட்ட வெளிச்சம். ஆசிரியர்க்கு என் வாழ்த்துக்கள். நான் ஆய்வு செய்து வருகிறேன். எல்லா மக்களுடன் பேசியுள்ளேன். இன்று ஒரு சிறிய விவாத மேடையில் என் கருத்துக்களை விமரசிப்பார்கள்.
    1. இன்னல் பட்டது ஏழை. வரவேற்பது ஏழை.
    2. பழங்குடிகள் முதல் கொண்டு, சீனியர் அரசியலர், வணிக பிரபுக்கள், உயர் அதிகாரிகள் வரை அயோக்கியர் கள் மலிந்த நாடு, இந்தியா.
    3. எதிர்பாராத்பவ படி பலர் ஜெயிலில் அடை படுவார்கள்.
    4. அடுத்து வரும் அரசு நடவடிக்கைகள் மேலும் கடுமையாக அமையும்.
    5. என் கட்டுரை இங்கிலாந்தில் பிரசுரம் ஆகும்.
    இன்னம்பூரான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *