-மேகலா இராமமூர்த்தி

தான் படம்பிடித்த அழகிய அணிற்பிள்ளையை இவ்வாரப்படக்கவிதைப் போட்டிக்குரிய படமாகத் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார் திருமதி. சாந்தி மாரியப்பன். அவருக்கு நம் நன்றி!

squirrel

இயற்கையின் படைப்பில் உயிர்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு வகையில் அழகுதான் என்றாலும் அணிற்பிள்ளையின் அழகும் துறுதுறுப்பும் பார்த்தமாத்திரத்தில் நம் உள்ளம் கவர்வது. கூரிய முன்பற்களால் அது பழங்களையும் கொட்டைகளையும் கொறிக்கும் அழகே தனி!

இந்தப் படத்தில் அழகிய அணிலின் வாயில் அடைக்கலமாகியிருக்கின்றது ஒரு குணில் (குறுந்தடி). அதனைக் கடிப்பதா வேண்டாமா எனும் யோசனையில் அணிலார் ஆழ்ந்திருப்பதாகத் தெரிகிறது.

அணில்கண்ட நம் கவிஞர்கள் அணிபெற எழுதியிருக்கும் கவிதைகளைக் கண்ணுற்று வருவோம் இனி!

***

அழகுப்பிள்ளையாம் அணிற்பிள்ளை கூடுகட்டும் அறிவுப்பிள்ளை; கொட்டை உண்ணும் செல்லப்பிள்ளை; மரங்களில் தாவும் வீரப்பிள்ளை என்று அதன் செயல்களைக் கனிவோடு நமக்குக் கவனப்படுத்துகின்றார் திருமிகு. நாகினி.

அணிற்பிள்ளை 

பிள்ளை பிள்ளை அணிற்பிள்ளை
கொட்டை உண்ணும் செல்லப்பிள்ளை
பழமோயென மண்ணில் கிடப்பதை
எடுத்து வாயில்வைக்கும் சின்னப்பிள்ளை

முதுகின்மேல் மூன்று கோடுகள்
பட்டை தீட்டிய அழகுப்பிள்ளை
மரக்கிளையிலும் தரையிலும்
தாவி ஓடும் கலைப்பிள்ளை

மூப்பிலும் மென்மை மாறா தோல்
வளமை கொண்ட இளம்பிள்ளை
குட்டிகளைத் தத்தெடுத்தும்
பாலூட்டும் தாய்மைப்பிள்ளை

தென்னைநாரில் பஞ்சில்
கூடு கட்டும் அறிவுப்பிள்ளை
வளைந்த கூரிய நகங்களால்
மரங்களை இறுகப்பற்றும் வீரப்பிள்ளை

பிள்ளை பிள்ளை அணிற்பிள்ளை
கொட்டை உண்ணும் செல்லப்பிள்ளை
பழமோயென மண்ணில் கிடப்பதை
எடுத்து வாயில்வைக்கும் சின்னப்பிள்ளை

 ***

மரத்திலிருந்த நீ மண்ணுக்கு வந்தது,  ”மரத்தை அழிக்காதே!” என மானுடனை எச்சரிக்கவா? அழகாய்க் கனி உண்பதை விடுத்துக் கண்டதையும் உண்பது சரியாமோ? என்று அணிற்பிள்ளையிடம் தன் கவிதைவழி உரையாடுகின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.  

அகரம் கற்றுக்கொடுத்த அரிச்சுவடி நண்பன் நீ!
அனில் பிள்ளையெனும் அழகுப் பெயர் கொண்டவன் நீ!
சேது பந்தனம் அமைக்கயிலே
மண் சுமந்த மனித நேயன் நீ!
உயிரினம் மொத்தமும் ஆண்டவன்
படைப்பு!
உதவி செய்தது உந்தன் சிறப்பு!
பரிசாய் கிடைத்தது மூவர்ணக்கோடு!
அன்னல் ராமனும கொடுத்தார் உவப்போடு!
முன் காலிரண்டை கையாக்கி
கொய்யாக்கனி அதில் ஏந்தி
உண்ணும் எழில் காண
கண் இரண்டு போதாது!
அழகாய் மரத்தில் கூடமைத்து
குட்டிகளை காத்திருப்பாய்!
நீ ஓய்வாய் இருந்து ஒரு நாளும் பார்த்ததில்லை!
மரத்தை விட்டு மண்ணுக்கு வந்த
கதை என்ன?
மரத்தை அழிக்கும் மனிதனுக்கு
அறிவுரை சொல்ல வந்தாயோ!
இயற்கை அழிந்தால் இன்னல் வரும் என்பதனை
பாங்காய் சொல்ல வந்தாயோ!
பழத்தை உண்பதை விட்டுவிட்டு
கண்டதை தின்பது சரியாமோ !
செயற்கை உணவை தின்பதெல்லாம்
மனிதன் செய்யும் மூடத்தனம் !
மறந்தும் அதை நீ செய்யாதே !

 *** 

வாழ்வில் வரும் சோதனைகளையும் சாதனையாக்குவது எப்படி என்பதை அணிற்பிள்ளை வாயிலாய்  அறிந்துகொண்டதாக அதிசயிக்கிறார் திருமிகு. ராதா விஸ்வநாதன்.

அதிசய அணிலே

அணிலே அணிலே அதிசய் அணிலே
ஆச்சர்யத்திலே மூழ்கிறேன் உனைக் கண்டு
இயற்கைப் பேரிடர்கள்
உன்னையும் விட்டு வைக்கவில்லை
ஊரே தத்தளித்தது புயலில்
எங்கு இருந்தாயோ எப்படி இருந்தாயோ
ஏறெடுத்துப் பார்ப்பார் எவருமில்லை
ஐயம் கொண்டேன் நின் இருப்பைப் பற்றி
ஒரு மரம் கூட நிற்கவில்லை
ஓடி ஓடி எங்கு வாழ்ந்தாய்
ஔவையைப் போல உன்னைப் புகழ‌
கவியேதுமறியேன்….
கற்றேன் புது பாடம் உன்னிடம்
வாழ்க்கை வாழ்வதற்கே
சாவதற்கல்ல‌
வாழ நினைத்து விட்டால்
சோதனையை சாதனையாக்க வேண்டுமென‌
துளிர் விடும் மரத்திற்காக‌
துணிவுடன் வாழ்கிறாய் மண்ணில்
மண் இருக்கும் வரை
மரம் இருக்கும்
மரம் சாய்ந்தாலும்
வேர்கள் சாவதில்லை
துன்பத்தைக் கண்டு துவளாத நின்னைக் கண்டு
என்னுள்ளும் துளிர்க்கிறது
நம்பிக்கையெனும் வேர்!

***

”கம்பர் போற்றிய இராமன் தடவினால் உனக்கு முதுகில் கோடு வரும்; ஆனால் கலியுக  மாந்தன் தடவினால் உனக்குக் கேடல்லவா வரும்! எட்டியே நில்! அவன் கிட்டே செல்லாதே!” என்று அணிலை எச்சரிக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

அணிலே ஒரு சேதி…

இராமன் தடவியதில்
கோடு வந்தது,
மனிதன் தடவினால்
கேடு வந்துவிடும்..

கேட்டுக்கொள் அணிலே
கூட்டுக்குள் இருந்துகொள்,
மாட்டிக்கொண்டால்
அதையும் பிரித்து
வேட்டையாடிவிடுவான்..

உன்பசிக்கு
ஓன்றும் கொடுக்கமாட்டான்,
பழத்தைத் தின்று நீ
பாதியை மீதிவைத்தால்,
அணில் கடித்த பழம்
அதிக சுவையென்று
அதையும் பறித்திடுவான்..

வயிற்றிலடிப்பது அவன்
வாடிக்கைதான்,
அதனால் அவன்
கிட்டே வராதே,
எட்டியே செல் எப்போதும்…!

 ***

மண்ணுக்கு வந்த அணிற்பிள்ளை மாந்தர்க்குத்தான் எத்தனை எத்தனை சேதிகளைச் சொல்லாமல் சொல்லுகின்றது! அவற்றையெல்லாம் கண்டுணர்ந்து வெளிப்படுத்தியிருக்கும் நம் கவிஞர்கள் கெட்டிக்காரர்கள்தாம்! 

***

ஒவ்வொரு உயிரிடமும் நாம் கற்றுக்கொள்ள எத்தனையோ பாடங்களை இயற்கை ஒளித்துவைத்திருக்கிறது. கைம்மாறு கருதாமல் உழவரின் நண்பராய் உழைக்கும் நாங்கூழ் புழுக்களாகட்டும், சோம்பலின்றிச் சுறுசுறுப்பாய் இயங்கும் எறும்புகளாகட்டும், ஒற்றுமையாய் இணைந்து தேனிறால் படைக்கும் தேனீக்களாகட்டும், கரவாது தன் இனத்தோடு கரைந்துண்ணும் காக்கைகளாகட்டும் மனிதர் கற்க இவை ஒவ்வொன்றுமே அற்புதப் பாடத்தைப் பொற்புடன் நடாத்துகின்றன!

அவ்வகையில் அணிற்பிள்ளையிடம் கற்ற  பாடத்தை, பெற்ற ஞானத்தைப் பட்டியலிடும் கவிதையிது!

அணில் சொல்லும் அற்புத பாடம்!

ஓராயிரம் நெல்லை உரித்தெடுக்குமியந்திரத்தால்
ஒருநெல்லை உடையாமல் உரித்தெடுக்கயுனைப்போல் முடியுமா?

ஒருகையால் சாப்பிடும் மனிதர்களுடன்
இருகையால் சாப்பிடும்நீ யவனுக்கு நண்பனானாய்

உணவுக்காக விட்டுக்கொடுக்க மனமில்லையென்றாலும்
உறவுக்காகக் காக்கையுடன் விளையாட்டுச்சண்டையிடுவாய்!

பறவைக் கூட்டில் முட்டையைத்தேடி
பாம்பொன்று விழுங்கவரும் போது…

நக்கிப் பிழைக்கும் நச்சுப்பாம்பை
நடுங்கும் குரலில் எச்சரிப்பாய்!

பாம்பென்றால் படைநடுங்கு மென்பார்கள்
பயப்படாமல் கிரீச்சிட்டு எதிரியை விரட்டுவாய்!

தூக்கணாங்குருவிக்குத் தூக்கம்வரும்போது
துணைநிற்பாய், கூடுகட்ட நார்கொடுத்துதவுவாய்!

ஆபத்தென்று வரும்போது, அடிபடாமல்தாவுவதை
ஆறறிவுக்கும்கூட அருமையாகக்கற்றுக்கொடுப்பாய்!

வாலின் முடித்தூரிகையைத் தந்துதவி…
வண்ணஓவியங்களுக்கு உயிரூட்டுவாய்!

முதுகு வளைந்து நாணியதாலோ யுனை
முதுகுநாணி இனமென்பார்கள்?

தோலாத தனிவீரன் முதுகிலுனை வருடியதால்…
துணையான தோழனானானாய், மானுடருக்கு…

முதுகில் மூன்று கோடுகளோடு வரம்பெற்று…
முத்திரை பெற்றன்புடன் அணிற்பிள்ளையென
அழைக்கப்பட்டாயோ!

வாயில்லா ஜீவனானாலும்
வாயைசைத்து அரைக்காவிடில்

வாழ்ந்து விடமுடியாதென்று
வாழ்வியல் பாடம் சொன்னாய்!

பிள்ளையில்லையெனவரம் வேண்டுவோருக்குத்
தத்துப்பிள்ளை உண்டெனஓர் அற்புதவழிசொன்னாய்!

குணில் கடிக்கும் இந்த அணில் தமக்குக் கற்பித்த வாழ்க்கைப் பாடத்தைப் பாங்காய் வகுத்தும் தொகுத்தும் சொல்லியிருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் பெருவை. திரு. பார்த்தசாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுக்கின்றேன். கவிஞருக்குப் பாராட்டு!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “படக்கவிதைப் போட்டி 93-இன் முடிவுகள்

  1. இந்த வாரம் என்னைத் தேர்ந்தெடுத்த, படக்கவிதைப் போட்டியின் நடுவராகவும், வல்லமை ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கும், படக்கவிதை எழுத படத்தைக் கொடுத்த பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஐந்தாறு வருடத்திற்கு முன்பு தாயை இழந்த அணில் ஒன்றை வளர்த்து வளர்த்தேன். அதற்கு லிஸா என்று பெயரிட்டு அழைத்து வந்தோம். சில காலம் எங்கள் வீட்டிற்கு பின்னால் உள்ள மரத்தில் விளையாடிகொண்டிருக்கும், கூப்பிட்டால் வரும், இருகைகளை நீட்டினால், அங்குமிங்கும் ஓடும். ஒரு நாள் அது எங்கோ ஓடிவிட்டது, மறுபடி திரும்பவில்லை.

    மனிதனோடு பழகுகின்ற விலங்குகளில் அணிலையும் சேர்க்கலாம். கவிதையின் கடைசி வரிகளுக்கு முன்னால் ஒரு வரியைச் சேர்க்க விண்ணப்பித்திருந்தேன், அது ஏனோ பிரசுரமாகவில்லை. அணிலுக்கு ஒரு சிறப்பு குணமுண்டாம், தாயை இழந்த குட்டிகளுக்கு, மற்ற அணில் கூட தன் தாய்பாலைத் தருமாம், அதைப்பற்றிய அந்த வரிகள்தான் அது.

    தாயிழந்த குட்டிக்களைத் தத்தேடுத்து…
    தாய்ப்பால் கொடுக்குமரிய உயிரினமாகத் தோன்றி…

    பிள்ளையில்லையெனவரம் வேண்டுவோருக்கு
    தத்துப்பிள்ளை உண்டெனஓர் அற்புதவழிசொன்னாய்!

    அன்புடன்
    பெருவை பார்த்தசாரதி

  2. The poetry deserved for first prize as it covered all activities and specialities of Anil..including anil brush…I found the depth of observation and thought process towards it, to cover all aspects within few lines.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *